ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மீண்டும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா?

திருவாரூர் : தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற  கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா என்ற எ

Updated On :20 செப்டம்பர் 2012, 11:47 am

திருவாரூர் : தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற  கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே மேலோங்கியுள்ளது.

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் 2,500 உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 25,000 முதுநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கென பொது கலந்தாய்வு முறை கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் மாறுதல் பெற்றுச் செல்வதற்கு பெரும் சிரமமும், சிக்கலும், மறைமுக முயற்சிகளாலுமே ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கிடைக்கும். இதற்குப் போதுமான செல்வாக்கும், கல்வித் துறை அலுவலர்களின் அனுக்கிரகப் பார்வையும் மிகவும் அவசியம்.

ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கென பொது கலந்தாய்வு முறையைக் கொண்டு வந்த பிறகு ஒளிவுமறைவற்ற முறையில், வெளிப்படையாக இந்த மாறுதல்கள் நடைபெறுவதாக ஆசிரியர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இந்த முறையில் ஆண்டுதோறும் பணியிட மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2010-2011-ம் கல்வியாண்டுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு, தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பணியாற்றும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு மாறுதல் அரசாணையை எண் 131 (கல்வி) நாள் 28.4.2010  அன்று தமிழக அரசு வெளியிட்டது. கடந்த 18.5.2010  மற்றும் 19.5.2010 ஆகிய தேதிகளில் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை முதல் தலைமையாசிரியர் வரையுள்ள காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை மாநிலம் முழுவதும் நிகழாண்டில் 125 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அண்மையில் ஆணை வெளியிட்டது. ஆனால், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இந்த ஆணை வெளியிடுவதற்கு முன்பே நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

அதேநேரத்தில், தொடக்கக் கல்வித் துறை சார்பில் தொடக்கப் பள்ளிகளிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, அனைத்துப் பணியிடங்களுக்கும் தெளிவான முறையில் 5 நாள்களுக்கு பணியிட  மாறுதல் கலந்தாய்வை ஆண்டுதோறும் தொடக்கக் கல்வித் துறை நடத்தி வருகிறது. ஆனால், பள்ளிக் கல்வித் துறை மட்டும் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதில்லை என்கின்றனர் முதுநிலை ஆசிரியர்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் வே. மணிவாசகன் கூறியது:

மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதற்கேற்பவும், தேவைக்கேற்பவும் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக ஆண்டுதோறும் தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிக்கும் 5 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பெற வேண்டிய ஏறத்தாழ 320 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 940 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தற்போது காலியாகவே உள்ளன.

தங்களது சொந்த ஊரை விட்டு, தொலைவிடத்துக்குச்  சென்று 10 ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக ஏராளமான முதுநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களது சொந்த ஊருக்கு அருகே பணியாற்ற ஒரு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளையும் இணைத்து மீண்டும் கலந்தாய்வை நடத்த வேண்டும். இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிக் கல்வி இயக்குநரை தொடர்ந்து சந்தித்து இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டும், அது நிறைவேற்றப்படவில்லை என்றார்.

முதுநிலை ஆசிரியர்களுக்கு மீண்டும் கலந்தாய்வை நடத்தி, ஒளிவுமறைவற்ற முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பதுதான் ஆசிரியர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.