இடிந்து விழும் நிலையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்

திருநெல்வேலி: பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் முறையாகப் பராமரிக்கப்படாததாலும், குடிநீர் பிரச்னை நிலவுவதாலும் குடியிருப்போர் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருகின்
இடிந்து விழும் நிலையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்
Updated on
2 min read

திருநெல்வேலி: பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் முறையாகப் பராமரிக்கப்படாததாலும், குடிநீர் பிரச்னை நிலவுவதாலும் குடியிருப்போர் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

 அரசு ஊழியர்களுக்கு வீட்டுவசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமானது வாடகை குயிருப்புகளை கட்டிக் கொடுத்துள்ளது. அவற்றில் குடியிருப்போர் செலுத்த வேண்டிய வாடகையானது அவரவர் பணிபுரியும் அரசு அலுவலகங்கள் மூலம் மாதந்தோறும் அவரவர் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.

 தனியார் அலுவலகத்தில் பணியாற்றுவோரில் சிலருக்கு ஒதுக்கீடு முறையில் வீடுகள் அளிக்கப்படுகிறது. அந்த வீடுகளுக்கான வாடகை பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தப்பட்டு வருகிறது.

 இந்த வாடகைக் குடியிருப்புகள் திட்டத்தில், பாளையங்கோட்டை மகாராஜ நகரில் 306  வீடுகளும், அன்பு நகரில் சுமார் 390 வீடுகளும், பாளையங்கோட்டை பஸ்நிலையம்  அருகே 30 வீடுகளும் என மொத்தம் சுமார் 726 வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக உள்ளன.

 இவற்றில் மகாராஜநகர் குடியிருப்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் பிரச்னை நீடித்து வருவதாக குடியிருப்போர் கூறுகின்றனர். அந்தக் குடியிருப்புக்கு என்று  பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த மாநகராட்சி குடிநீர்க் குழாயில் இருந்து காலப்போக்கில் அருகில் உள்ள வீடுகளுக்கு சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டதால் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

 அது அங்குள்ள 306 வீடுகளுக்கும் போதுமானதாக இல்லை. இதனால் அவர்கள் 2 கி.மீ. தொலைவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது.

 குடியிருப்பில் உள்ள 2 ஆள்துளைக் கிணறுகளாலும் பயனில்லை. மோட்டாரும் அடிக்கடி பழுதாகிவிடுவதால் தண்ணீர் பிரச்னை தீராத பிரச்னையாக உள்ளது என அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் சு.ப. ஈஸ்வரதாஸ் தெரிவித்தார்.

 குடிநீர் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மக்கள் சில மாதங்களுக்கு முன்பு வீட்டுவசதி  வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.  அதன்பின்பு நிலைமை சற்று மேம்பட்டிருந்தாலும் பற்றாக்குறை தீரவில்லை என்றார் அவர்.

 குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் உடைந்துவிட்டன. அவை  சீரமைக்கப்படவில்லை. குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சீரமைத்துக் கொள்ளவும்  அனுமதிக்கவில்லை. இதனால் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு சுகாதாரச்  சீர்கேடு ஏற்பட்டு வருவதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

 இவை மட்டுமன்றி வீடுகளில் உள்ள மின்சார "வயரிங்' பழுதடைந்து சுவர்களில்  மின்கசிவு ஏற்பட்டு வருவதாகவும், இங்கு மின்வயர்கள் அனைத்தும் பூமிக்கடியில் செல்வதால் மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்பட்டு சில இடங்களில் நடக்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 பாளை.பஸ்நிலைய குடியிருப்பு: இந்தக் குடியிருப்பில் வீடுகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளன.  சில வீடுகளில் கழிவறைகளில் உள்ள கதவுகள், ஜன்னல்கள் உடைந்து காணப்படுகின்றன. வீட்டு அறைகளின் ஜன்னல்களில் உள்ள "சன்ஷேடு'களும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளன.

 மேல்வீட்டின் குளியலறை, கழிவறை தண்ணீர் கீழ் வீட்டின் குளியலறை, கழிவறையில் கசிகிறது. தண்ணீர் கசிவதால் சுவர்கள் எப்போதும் ஈரமாகவே காட்சி அளிக்கின்றன. இந்த நிலை பல ஆண்டுகளாகத் தொடருவதால் சுவர்கள் இடிந்து விழும் ஆபத்து இருப்பதாக குடியிருப்போர் தெரிவித்தனர்.

 இங்கேயும் மின்சார "வயரிங்' பழுதடைந்துள்ளது. இதனால் வீடுகளுக்கு புதிதாக குடிவருவோர் சில ஆயிரங்களைச் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. அண்மையில்  இந்தக் குடியிருப்புகளில் சில மின்சார வயர்களை மாற்றினர். ஆனால், அந்த வேலைகள்  அனைத்தும் அரைகுறையாகவே உள்ளன.

 இங்குள்ள வீடுகளுக்கு வெள்ளையடித்து பல ஆண்டுகள் இருக்கும். கடந்த ஏழெட்டு  ஆண்டுகளாக வெள்ளை அடிக்கப்படவே இல்லை. குடியிருப்போர் சிலர் தேவைக்கு  ஏற்ப வீட்டின் உள்புறங்களில் வெள்ளையடித்துக் கொள்கின்றனர். ஆனால், வெளிப்புறங்கள் பாழடைந்த வீடுகள்போல காட்சி அளிக்கின்றன.

இதனால் புதிதாகக் குடியேற வருவோர் அச்சப்படுகின்றனர்.

 அன்புநகர் குடியிருப்பு: அன்புநகரில் உள்ள குடியிருப்பிலும் குடிநீர் பிரச்னை உள்ளது. குடியிருப்போருக்கு தேவையான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. சில வீடுகளில் சுவர்களில் கீறல் ஏற்பட்டு இடிந்துவிழும் நிலையில் இருப்பதாக குடியிருப்போர் புகார் தெரிவித்தனர். குடியிருப்புகளுக்கு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில்கூட வெள்ளையடிக்கப்படுவதில்லை.

 குடியிருப்புகளில் உள்ள இந்தக் குறைபாடுகள் குறித்து வீட்டு வசதி வாரிய  அதிகாரிகளிடம் முறையாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என  நலச்சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

 குடியிருப்புகளைப் பராமரிக்க அரசு ஆண்டுதோறும் போதுமான அளவு நிதி ஒதுக்கீடு  செய்வதில்லை என்றும், ஒதுக்கப்படும் குறைவான நிதியைக் கொண்டு அத்தனை குறைபாடுகளையும் சரிசெய்ய இயலுவதில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 இதுகுறித்து வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

 மகாராஜநகர் குடியிருப்புக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒட்டுமொத்தமாக மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு வந்தவுடன்  வெள்ளையடித்தல், கழிவறை கதவுகள் பழுது போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சீர் செய்யப்படும். குடியிருப்போர் தங்களின் புகார்களை உதவி பொறியாளர் அலுவலகத்தில் உள்ள புகார் புத்தகத்தில் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com