

ஈரோடு: தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகளுக்கு அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் ஆகிய உணவுப் பொருட்களை ரேஷன் கடை மூலம் வழங்க அரசு முன்வர வேண்டும் என எதிர்பார்க்கின்றன இப் பள்ளிகளை நிர்வகிக்கும் தொண்டு நிறுவனங்கள்.
தமிழகத்தில் சேலம், கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, விருதுநகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் 534 பள்ளிகளில் குழந்தை தொழிலாளர்களாய் இருந்து மீட்கப்பட்ட சுமார் 25 ஆயிரம் குழந்தைகள் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 உணவுப்படி வழங்கப்படுகிறது.
இந்த தொகையை பயன்படுத்தியே வாரத்தில் மூன்று நாட்களுக்கு முட்டை, இரண்டு நாட்களுக்கு பயறு வகைகள், சாம்பார் சாதம், புளி மற்றும் தக்காளி சாதம் ஆகிய உணவு வகைகளும், பிஸ்கட், பால் மற்றும் பேரீட்சம் பழம் உள்ளிட்ட உணவு வகைகள் வாரத்தில் ஒரு நாள் என ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக உணவுப் படியாக ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை 300 சத அளவுக்கு உயர்ந்துவிட்டன. பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று பள்ளிகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கண்டிப்பு காட்டும் அதிகாரிகள் உணவுக்கு கூடுதல் நிதி பெற்றுத்தர முனைப்பு காட்டவில்லை.
பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் இந்த பள்ளிகளை பராமரிக்க முடியாமல் ஒதுங்கிக்கொண்டன. 534 பள்ளிகளில் சுமார் 400 பள்ளிகள் ஆசிரியர்களின் பராமரிப்பிலேயே உள்ளன. பெற்றோர்களால் உணவும், உடையும் தர இயலாத நிலையில்தான் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகின்றனர். இதனால் தான், குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவு, உடை, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், தமிழக அரசு இதில் போதிய அக்கறை காட்டவில்லை. இங்கு படிக்கும் குழந்தைகளின் உணவுத் தேவைக்கு அரசு வழங்கும் நிதி போதுமானதாக இல்லை. இதனால் ஓரளவுக்கு தரமான உணவு வழங்குவதற்கே தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாளர்களைத் தேடி அலைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் விலையிலேயே உணவுப்பொருட்கள் அனைத்தும் குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளுக்கும் வழங்கப்படும் பட்சத்தில் இப் பள்ளி மாணவர்களுக்கு தரமான மதிய உணவு கிடைப்பதோடு, மாணவர்களின் உணவுக்காக தொண்டு நிறுவனங்கள், நன்கொடையாளர்களின் வீட்டு வாசலில் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.