தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிமே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

விளையாட்டுப் பிரிவு பி.இ. ஒதுக்கீடு : கேரம் சாம்பியனுக்கு வாய்ப்பு மறுப்பு

சென்னை, ஜூலை 29: சிறு வயது முதல் கேரம் விளையாட்டில் மாநில மற்றும் தேசிய அளவில் சாம்பியன் பட்டங்களை வாங்கி குவித்த மதுரை மாணவர் ஸ்ரீராமுக்கு, அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வில் விளையாட்டுப் பிரிவின்

Updated On :20 செப்டம்பர் 2012, 12:09 pm

சென்னை, ஜூலை 29: சிறு வயது முதல் கேரம் விளையாட்டில் மாநில மற்றும் தேசிய அளவில் சாம்பியன் பட்டங்களை வாங்கி குவித்த மதுரை மாணவர் ஸ்ரீராமுக்கு, அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வில் விளையாட்டுப் பிரிவின் கீழ் பி.இ. ஒதுக்கீடு கிடைக்காமல் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இந்த மாணவர் பங்கேற்ற பல்வேறு போட்டிகளுக்கு பி.இ. கலந்தாய்வில் மதிப்பெண் கொடுக்காததும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடத்தப்பட்ட மாநில அளவிலான கேரம் விளையாட்டு அங்கீகரிக்கப்படாததுமே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

மதுரையைச் சேர்ந்த ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் டி. ஸ்ரீராம். சிறு வயது முதலே கேரம் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட இவர், படிப்பிலும் கெட்டிக்காரர்.

÷கேரம் மீதான மோகம் காரணமாக 6 வயது முதலே சாம்பியன் பட்டங்களை வெல்லத் தொடங்கிய ஸ்ரீராம், 5 தேசிய அளவிலான போட்டிகளிலும், 12 மாநில அளவிலான போட்டிகளிலும், 30 மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிவாகை சூடியுள்ளார்.

2004-ம் ஆண்டு 6-ம் வகுப்பு படிக்கும்போது, லக்னோவில் நடந்த தேசிய அளவிலான சப்-ஜூனியர் கேரம் போட்டியிலும், 2007-ல் சண்டிகரில் நடந்த தேசிய அளவிலான சப்-ஜூனியர் கேரம் போட்டியிலும் பங்கேற்று இரண்டாம் இடத்தை இவர் தலைமையிலான அணி வென்றுள்ளது.

2006-07-ல் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய அளவிலான சப்-ஜூனியர் கேரம் போட்டியில் இவர் முதலிடம் பிடித்துள்ளார்.

2009-10 ஆண்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை நேரு விளையாட்டு அரங்கிலும், கிருஷ்ணகிரியிலும் நடத்தப்பட்ட மாநில அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

கேரம் விளையாட்டில் சிறந்து விளங்கிய ஸ்ரீராம், பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1049 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பொறியியல் பட்டப் படிப்பில் சேர விரும்பிய இவர், பொறியியல் கலந்தாய்வுக்கு விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ளார்.

இந்த கலந்தாய்வில் விளையாட்டு பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு, 2006-ம் ஆண்டு முதல் பங்கேற்ற தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது.

இதன்படி, 2006-07-ம் ஆண்டில் தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்ததற்காக 190 மதிப்பெண், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட இரண்டு போட்டிகளில் முதலிடம் பிடித்ததற்காக 190 மதிப்பெண், 2006-ல் மதுரையில் தமிழ்நாடு கேரம் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் இரண்டாம் இடம் பிடித்ததற்காக 80 மதிப்பெண், 2007 மற்றும் 2009 ஆண்டுகளில் தமிழ்நாடு கேரம் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இரண்டு போட்டிகளில் பங்கேற்றதற்காக 30 மதிப்பெண்கள் என மொத்தம் 490 மதிப்பெண்கள் விளையாட்டு பிரிவின் கீழ் வழங்கியிருக்க வேண்டும் என்பது ஸ்ரீராமின் கருத்து.

ஆனால், 2006-07-ம் ஆண்டில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த சான்றிதழை மட்டுமே அதிகாரிகள் கருத்தில் கொண்டு 190 மதிப்பெண் மட்டுமே கொடுத்துள்ளனர்.

இதனால் விளையாட்டு பிரிவின் கீழ் இவருக்கு 202-வது ரேங்க் கிடைத்துள்ளது. மற்ற சான்றிதழ்களையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட இரண்டு போட்டிகளுக்கான சான்றிதழ்களையும் கலந்தாய்வில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி நிராகரித்துவிட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் மேரி ராஜாத்தியிடம் கேட்டபோது, ஆணையத்தின் சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிலும், கிருஷ்ணகிரியிலும் நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டிகளுக்கு அங்கீகாரம் இல்லை என பதிலளித்துள்ளார்.

இதுபோன்று சான்றிதழ்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால், விளையாட்டு பிரிவின் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. இடம் கிடைக்கும் வாய்ப்பை இவர் இழந்துள்ளார். இருந்தபோதும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த காரணத்தால் பொதுப் பிரிவின் கீழ் தனியார் பொறியியல் கல்லூரியில் அரசு ஒதுக்கீடு இடம் இவருக்கு கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஸ்ரீராம் கூறியது:

மாநில அளவிலான போட்டி, அதுவும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் போது அந்த விளையாட்டுக்கு அங்கீகாரம் உள்ளதா என்பதை யாரும் ஆய்வு செய்து பார்த்துவிட்டு விளையாடுவதில்லை.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கென தனி முயற்சி மேற்கொள்ளும் வீரர்களுக்கு இது பெருத்த ஏமாற்றம். இதுகுறித்து அரசு உயர் அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்துள்ளோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.