திருவாரூர்: மனித குலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு இன்னல்களை உருவாக்கும் பிளாஸ்டிக்கின் ஒரு பகுதியான பிளக்ஸ் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இன்றைய நவநாகரிக உலகில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், வரவேற்பு பதாகைகள், தனி நபர்களின் இல்லத் திருமணம் மற்றும் விழாக்கள், கோயில் விழாக்கள் என நகரம் மட்டுமன்றி, கிராமங்களிலும் பளிச்சிடுகிறது பிளக்ஸ் போர்டுகள். இவை சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்துக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளன என்பதை இந்த விளம்பர தட்டிகளை வைப்பவர்கள் உணர்ந்துள்ளார்களா என்பது தெரியவில்லை என்றாலும், அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமானது.
நாம் நமது பண்டைய, பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் பயன்படுத்தும் பொருள்களை தவிர்த்து, நவீன நாகரிக வளர்ச்சி என்ற நிலைக்கு உருமாறிக் கொண்டதன் விளைவாக, அண்மைக் காலமாக பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது.
ஆண்டுதோறும் பிளாஸ்டிக் பொருள்களின் தேவை 5 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2016-ம் ஆண்டில் நாட்டில் 4 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுமென ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
நெகிழ வைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி பிளாஸ்டிக்கை மிகவும் நெகிழும் தன்மை கொண்டதாகவும், மென்மையானதாகவும் மாற்றப்படும் போது திரைகள், தரை விரிப்புகள், விளம்பரத்துக்கென பயன்படுத்தப்படும் பிளக்ஸ் போன்ற பொருள்கள் கிடைக்கின்றன. நெகிழ வைக்கும் பொருள்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது தாலேட்டுகள் (டஏபஏஅகஅபஉந) என்ற வேதிப்பொருள் வகை தான்.
தாலேட்டுகள் பலவகைப்பட்ட கரிம வேதிப்பொருள்களாக இருந்தாலும் அவை அனைத்துமே அபாயகரமானவை. தாலேட்டுகள் பிளாஸ்டிக்குடன் வேதித்தன்மையால் பிணைக்கப்படாத காரணத்தால், காலப்போக்கில் அதிலிருந்து பிரியத் தொடங்கி ஒளி மற்றும் உயிர்ச்செயல் போன்ற காரணங்களால் காற்றில் கலக்கின்றன.
பிளக்ஸ் பயன்படுத்தப்படும் வீடுகள், அலுவலகங்கள் போன்றவற்றில் காற்றில் தாலேட்டுகளின் அடர்த்தி அதிகமாக இருக்கும். இவை மனிதனை எளிதாகக் தாக்குகின்றன. இதன்மூலம் குழந்தைகளுக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா போன்றவை ஏற்படுகின்றன என 2008-ம் ஆண்டில் பல்கேரிய ஆய்வில் தெரியவந்தது.
அதிக அளவில் தாலேட்டுகள் பாதிப்பு இருக்குமானால் ஹார்மோன்கள் பாதிப்பு ஏற்பட்டு, பிறப்பிலேயே குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கும், இன விருத்தித் திறனையும் பாதிக்கும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என்கிறார் தமிழக நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் எஸ். அண்ணாதுரை.
பிளக்ஸ் போன்றவற்றை நொறுக்கும் போது சிறிய துகள்களாக மண்ணில் கலக்கின்றன. இதனால், மண்ணின் நீர் உறிஞ்சும் திறன் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மேம்பாடு தடைபடுகிறது. நீர்வழிப் பாதையில் நீரோட்டத்தையும் இவை தடுக்கின்றன.
இயற்கைக்கு ஒவ்வாத எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும் முதலில் குழந்தைகளையும், பிறகு, பெண்களையும்தான் பாதிக்கின்றன. அந்த வகையில், பிளாஸ்டிக் உற்பத்தியின் போதும், அதை எரிக்கும் போதும் மற்றும் குப்பையில் சேரும் பிளக்ஸ் போன்ற பொருள்களாலும் டையாக்சின் என்ற வேதிப் பொருள் உருவாகிறது. இந்த வாயு உயிரினங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறது. பல வகைப்பட்ட புற்று நோய்களையும் உருவாக்குகிறது. இதனால், பெண்களுக்கு பிறப்புறுப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, பெண்களுக்கு குழந்தை பிறப்பையும் தடுத்து, மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகின்றன. எனவே, பிளக்ஸ் உபயோகம் நமக்கு பெரும் ஆபத்து என்பதை மக்கள் உணர வேண்டும் என எச்சரிக்கிறார் தமிழ்நாடு சுற்றுச்சூழல் கழக மாநில அமைப்பாளர் அ. பாக்கியம்.
பிளக்ஸின் அபாயத்தை உணர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், பிளக்ஸ்களை சிப்பம் கட்டுதல் மற்றும் இதர வகைகளில் உபயோகப்படுத்துவதில்லை என அறிவித்துள்ளது. உள்ளாடைத் தொழிலில் உள்ள விக்டோரியா சீக்ரெட் என்ற பன்னாட்டு வடிவமைப்பு நிறுவனமும் இந்த முடிவை அறிவித்துள்ளது. ஆனால், காது குத்தும் விழா தொடங்கி அனைத்துக்கும் பிளக்ஸ் போர்டுகளை அதிக அளவில் பயன்படுத்தும் போக்கு நம்மிடையே மிகவும் அதிகரித்துள்ளது, சுற்றுச்சூழலுக்கும், மனிதகுலத்தின் நலனுக்கும் பெரும் சவாலாகவே உள்ளது என்பதை உணர்ந்து, அதன் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஏகோபித்த வேண்டுகோள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை மாவட்டத்தில் 339 இடங்களில் ரூ. 74 லட்சம் பறிமுதல்: ஆட்சியா் இரா.சுகுமாா்

வள்ளியூரில் பா.ஜ.க. கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

நெல்லையில் விபத்து: பெண் பலி

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


