புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சுகாதாரமற்ற நிலையில் ரயில்களின் சமையல் அறை பெட்டிகள்

சென்னை, ஜூன் 28: சென்னையில் இருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்களின் சமையல் அறை பெட்டிகள் (பேண்ட்ரி கார்) போதிய பராமரிப்பு இல்லாததால் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. சென்னை எழும்பூர்- மதுரை வைகை விரைவு ரயி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:09 pm

ச. குமரன்

சென்னை, ஜூன் 28: சென்னையில் இருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்களின் சமையல் அறை பெட்டிகள் (பேண்ட்ரி கார்) போதிய பராமரிப்பு இல்லாததால் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன.

சென்னை எழும்பூர்- மதுரை வைகை விரைவு ரயில், எழும்பூர்- திருச்சி பல்லவன், சென்னை-கோவை விரைவு ரயில், சென்னை- தில்லி தமிழ்நாடு விரைவு ரயில் ஆகியவை மட்டுமன்றி நாடு முழுவதும் சுமார் 150 விரைவு ரயில்களில் சமையல் அறை பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

 இதில் பணியாற்றும் சமையல் கலைஞர்கள், உதவியாளர்கள், விற்பனையாளர்கள், நிர்வாக அலுவலர் ஆகியோர் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றனர்.

சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பகலில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்களில் மட்டுமே சமையல் அறைப் பெட்டிகள் இணைக்கப்படும். நீண்ட தூரம் இயக்கப்படும் இந்த ரயில்களில் உள்ள சமையல் அறை பெட்டிகளில் இருந்து சுடச்சுட உணவு வகைகளை தயாரித்து, பயணிகள் இருக்கும் இடத்துக்கே வந்து ஊழியர்கள் விநியோகிப்பதால் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அனைவரும் பெறுகின்றனர்.

சைவமும், அசைவமும்...

இந்த சமையல் அறை பெட்டிகளில் சைவ உணவுகள் மட்டுமன்றி, பிரட் ஆம்லெட் உள்ளிட்ட அசைவ உணவு வகைகளும் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டு, ஒன்றாகவே எடுத்துச் செல்லப்பட்டு, பயணிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

 பெரும்பாலும், இந்த உணவுகளை பயணிகளுக்கு விநியோகிக்கும் ஊழியர்களுக்கு சீருடைகள் மற்றும் தொப்பிகளை ஐஆர்சிடிசி வழங்கியுள்ளது. ஆனால், பெரும்பாலான ஊழியர்கள் அசுத்தமான, அழுக்கடைந்த சீருடைகளுடன் உணவுகளை விநியோகிக்கின்றனர். இதனால், பயணிகள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. சமையல் அறை பெட்டிகளில் எலி, கரப்பான் பூச்சி போன்றவை சுதந்திரமாக உலா வருவதும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

ரயில் பெட்டிகளை நவீன மயமாக்கும் திட்டத்துக்காக ரயில்வே துறை ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால், சமையல் அறை பெட்டிகளில் பெரும்பாலானவை 20 முதல் 30 ஆண்டுகள் வரை பழமையானவையாக உள்ளன. சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், கரண்டிகள் உள்ளிட்ட உபகரணங்களும் தொல்பொருள்களை நினைவூட்டுபவையாக உள்ளன.

கையேந்தி பவன்களாகும்...

பகலில் இயக்கப்படும் ரயில்களில் மட்டுமே சமையல் அறை பெட்டிகள் உள்ளன. இதனால், தூங்கும் வசதியுள்ள பெட்டிகளுக்கு பதிலாக 2-ம் வகுப்பு சேர் கார் பெட்டிகளே இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில்களில் சமையல் அறை பெட்டியில் இருந்து உணவு வகைகளை தட்டுகளில் (ட்ரே) வைத்து கைகளில் ஏந்தியவாறு ஊழியர்கள் எடுத்துச் செல்கின்றனர். இதனால், பயணிகள் மீது உணவுப் பொருள்கள் சிந்தும் நிலை உள்ளது.

இதைத் தவிர்க்க சக்கரங்கள் பொருத்தப்பட்ட மிக எளிதாக இயங்கக் கூடிய,கண்ணாடி அறைகள் கொண்ட இலகுவான ட்ராலி போன்ற சாதனங்களில் உணவு வகைகளை எடுத்துச் சென்று விநியோகிக்கலாம்.



தீத்தடுப்புக்கு நவீன வசதி தேவை...

சமையல் அறை பெட்டிகள் பெரும்பாலும், விரைவு ரயிலின் மத்திய பகுதியில் இணைக்கப்படுகின்றன. இந்த நிலையில், உணவு வகைகளைத் தயாரிக்கும்போது, கேஸ் அடுப்புகளே பயன்படுத்தப்படுகின்றன. ஓடும் ரயிலில் சமையல் அறை பெட்டியைச் சுற்றி, வருமுன் காக்கும் வகையில், அதிநவீன தீ தடுப்பு சாதனங்களோ அல்லது இதர வசதிகளோ போதிய அளவு இல்லாதது பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

சமையல் அறை பெட்டியின் இரு புறமும் ரயில்வே போலீஸ் அல்லது ரயில்வே பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதே போல சுகாதாரத்தைப் பராமரிக்கும் வகையில், சமையல் அறை பெட்டிகளை அடுத்துள்ள பெட்டிகளின் கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

விலைப்பட்டியல்...

சமையல் அறை பெட்டிகளில் விற்பனை செய்யப்படும் பல்வேறு உணவு வகைகளின் விலைப் பட்டியல் மற்றும் அளவு உள்ளிட்ட விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயணிகள் அறியும் வகையில் பலகைகளில் எழுதி வைத்திருக்க வேண்டும்.

முக்கிய நேரங்களில் கிடைக்கும் உணவுகளின் விவரம் குறித்து பயணிகளுக்கு தெரிவிக்கப்படுவது இல்லை. இதனால், வேறு வழியின்றி சமையல் அறை பெட்டிகளில் தயாராகும் காமா சோமா உணவுகளை மட்டுமே பயணிகள் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுன்றனர்.

பொதுவாக ரயிலில் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து, புகார்களை பதிவு செய்ய கார்டு பெட்டியில் புகார் பதிவேடு வைக்கப்பட்டிருக்கும். ஆனால், சமையல் அறை பெட்டி குறித்து பயணிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க, ஐ.ஆர்.சி.டி.சி. சார்பாக தனியாக எந்த வசதியும் இல்லை. இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகளிடம் முறையிட்டால் எந்தவித பயனும் இல்லை என்கின்றனர் பயணிகள். எனவே, பயணிகளின் குறைதீர்க்க முன்வருமா ஐ.ஆர்.சி.டி.சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.