பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பேருந்து கூடு கட்டும் பணிகள் கரூர் மாவட்ட நிறுவனங்களுக்கு கிடைக்குமா?

கரூர் : தமிழகத்தில் புதிதாக 6,500 பேருந்துகள் விடப்படும் என்ற அறிவிப்பால், கரூர் மாவட்டத்தில் பேருந்துகூடு கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசின் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தமிழகம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:23 pm

எஸ்.​ முத்​துக்​கு​மார்

கரூர் : தமிழகத்தில் புதிதாக 6,500 பேருந்துகள் விடப்படும் என்ற அறிவிப்பால், கரூர் மாவட்டத்தில் பேருந்துகூடு கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசின் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தமிழகம் மட்டுமல்லாமல் தென் மாநிலங்களில் இயங்கும் பெரும்பாலான பேருந்துகளில் வடிவமைப்பு என்ற இடத்தை கரூர்தான் நிரப்பி வருகிறது. அந்தளவிற்கு கரூரில் பேருந்துகூடு கட்டும் தொழில் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

6 டயர்கள், நீண்ட இரும்புக் கம்பியாக கரூருக்கு வரும் பேருந்து சேஸ்கள், பளபளக்கும் பேருந்துகளாக பயணிகளின் மனதை சுண்டி இழுக்கும் வகையில் மாற்றியமைக்கப்படுகிறது.

இந்தப் பணிக்காக கரூர் மாவட்டத்தில், கரூர் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் பேருந்துகூடு கட்டும் 50 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில், சுமார் 15 நிறுவனங்கள் மிகப் பெரியவையும், 30 நிறுவனங்கள் சிறியதாகவும் உள்ளன. அத்துடன் அரசுப் பேருந்துகூடு கட்டும் நிறுவனமும் செயல்பட்டு வருகின்றது.

இத்தொழிலில் சாதாரண கூலித் தொழிலாளியில் தொடங்கி ஐடிஐ முடித்த சீட் மெட்டல், டர்னர், பிட்டர், கார்பெண்டர், அலுமினிய வேலை தெரிந்தவர்கள், டிப்ளமோ, மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்தவர்கள் வரை சுமார் 25 ஆயிரம் பேர் நேரடித் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

பேருந்துகளுக்குத் தேவையான மரம், கண்ணாடி, ரப்பர், அலுமினியம் வளைத்தல் உள்ளிட்ட மறைமுக வேலைகளில் சுமார் 75 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் பேருந்துகூடு கட்டும் தொழில் சுமார் ஒரு லட்சம் குடும்பங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. கரூருக்கு வரும் பேருந்து சேஸ்கள் ரூ. 4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் செலவில் பேருந்துகளாக மாற்றப்படுகின்றன. கரூரில் ஒரு மாதத்துக்கு சுமார் 500 பேருந்துகள் கூடுகட்டி அனுப்பி வைக்கப்படுகின்றன.

இவ்வாறு சிறப்பு வாய்ந்த இத்தொழில் தற்போது அரசின் முடிவை எதிர்நோக்கியுள்ளது.

அண்மையில் முடிவடைந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையின் போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தமிழகத்தில் புதிதாக 3 ஆயிரம் பேருந்துகளும், 3 ஆயிரத்து 500 மினி பேருந்துகளும் விடப்படும் என்றார்.

இதையடுத்து, கரூரில் பேருந்துகூடு கட்டும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் இதற்கான பணி உத்தரவு மற்றும் ஒப்பந்தப்புள்ளி எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

அண்மையில், தமிழகத்தில் சுமார் 3,500 பேருந்துகள் "ஜனரம்' என்ற பெயரில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பேருந்துகள் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு வாங்கப்பட்டவை. பெங்களூரிலுள்ள அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் இந்தப் பேருந்துகளின் கூடுகள் கட்டப்பட்டு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இதனால், கரூருக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் வாய்ப்பு பறிபோனது. இந்தத் தொழில் வாய்ப்புகள் அரசியல் காரணத்திற்காக திட்டமிட்டே வழங்கப்படவில்லை என்றும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசின் தற்போதைய 6,500 புதிய பேருந்துகளுக்கான அறிவிப்பு பேருந்துகூடு கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேருந்துகளின் கூடுகளைக் கட்ட ஒப்பந்தப்புள்ளி முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்ச விலை கோரும் எந்த நிறுவனமாக இருந்தாலும், அந்த நிறுவனத்தால் சிறப்பாக பணியைச் செய்ய முடியுமா என்று ஆய்வு செய்த பின்னரே உற்பத்திக்கான பணி உத்தரவு வழங்கப்படும்.

எனினும், இதை தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு கிடைக்குமாறு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது இத்தொழிலை நம்பியுள்ள கரூர், திருச்சி மக்கள் பயன்பெற வாய்ப்புள்ளது. மேலும் ரூ.195 கோடி வருமானமும் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.