திருநெல்வேலி : தேசிய வேளாண்மை பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை கிராம அளவில் செயல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை கானல் நீராகவே தொடர்கிறது.
பருவ மழை குறைவு, பயிர்களில் நோய்த் தாக்குதல் போன்றவற்றால் நாளுக்குநாள் அதிகமான பாதிப்பை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தை கிராம அளவில் செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்ற பாதிப்பு ஏற்படும்போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிருக்குச் சேதம் ஏற்படும்போது விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க காப்பீடு மற்றும் நிதியுதவி அளிப்பது, விவசாயத்தில் முற்போக்கான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் வழிமுறைகள் மற்றும் அதிக விலையுள்ள இடுபொருள்களைப் பயன்படுத்த ஊக்கப்படுத்துதல், பெரும் பயிர்ச் சேதம் ஏற்படும் காலங்களில் பண்ணை வருமானத்தை நிலைப்படுத்துதல்,உணவு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களின் உற்பத்தியைப் பெருக்குதல் மற்றும் ஊக்கமளித்தல் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் நோக்கங்களாகும்.
இந்த திட்டத்தின் கீழ் நெல், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு,உளுந்து,பச்சை பயறு, துவரை,நிலக்கடலை,எள்,கரும்பு, பருத்தி, உருளைக் கிழங்கு, மிளகாய், வெங்காயம்,இஞ்சி,மஞ்சள்,மரவள்ளிக்கிழங்கு,வாழை போன்றவற்றை காப்பீடு செய்யலாம். இதில்,சொந்த நிலம் உள்ள விவசாயிகளும், குத்தகை விவசாயிகளும் பங்கேற்கலாம்.
எந்த வகையான பயிர்க் கடன் பெறுபவராக இருந்தாலும் அவர்கள் கட்டாயமாக இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். மற்றவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் திட்டத்தில் சேரலாம். வங்கிகளில் பயிர்க் கடன் பெறும்போதே காப்பீடு பிரிமீயத் தொகை பிடித்தம் செய்யப்படும்.
பயிர்க் காப்பீடு திட்டத்தை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் காப்பீடு பிரிமீயத் தொகையில், கடன் பெறும் விவசாயிகளுக்கு 50 சதவீதத்தையும்,கடன் பெறாத விவசாயிகளில் சிறு, குறு விவசாயிகளுக்கு 55 சதவீதத்தையும்,இதர விவசாயிகளுக்கு 50 சதவீதத்தையும் தமிழக அரசே செலுத்தி வருகிறது. காப்பீட்டுத் தொகையையும் மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீதமாக வழங்குகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டமானது, முதலில் வட்டார அளவில் செயல்படுத்தப்பட்டது. அதாவது, பயிர்ச் சேதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக அந்த வட்டாரத்தில் குறிப்பிட்ட இடங்களில் பயிர் அறுவடை பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனையை வேளாண்மை துறையினரும், புள்ளியியல் துறையினரும் மேற்கொள்வர்.
உதாரணமாக,நெல் பயிராக இருந்தால் கடந்த 3 ஆண்டுகளின் சராசரி மகசூல் அளவு மற்றும் பாதிப்பு ஏற்பட்ட ஆண்டின் மகசூல் அளவை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். இதற்காக, மத்திய அரசானது இந்திய வேளாண் காப்பீடு நிறுவனத்தை (அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்) ஏற்படுத்தியுள்ளது.
காப்பீடு திட்டமானது வட்டார அளவில் செயல்படுத்தப்பட்டதால் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் பாதிப்பு ஏற்பட்டு இதர பகுதிகளில் பாதிப்பு இல்லை என்றால் பயிர் அறுவடை சோதனை முடிவு விவசாயிகளுக்குச் சாதகமாக அமையாது. எனவே, காப்பீடு திட்ட பயன் விவசாயிகள் எதிர்பார்த்தபடி கிடைக்காமல் இருந்தது. ஆதலால், காப்பீடு திட்டத்தில் சேருவதற்கு விவசாயிகள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. எனவே, இந்த திட்டமானது கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் குறுவட்டம் (பிர்க்கா) அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் ஓரளவு பயன்பெற்று வருகின்றனர். எனினும் முழுமையான பயன் கிட்டவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2008-09ல் 38 விவசாயிகளுக்கு காப்பீடு தொகையாக | 38,148 வழங்கப்பட்டுள்ளது. 2009-10 கார் பருவத்தில் 201 விவசாயிகளுக்கான |13.08 லட்சத்தில் 50 சதவீத தொகையான |6.54 லட்சத்தை மத்திய அரசு வழங்கி விட்டது. மாநில அரசு இன்னும் வழங்கவில்லை. அதே ஆண்டில் பிசானப் பருவத்தில் 5,508 விவசாயிகளுக்கு |11.69 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. வேளாண்மை பிரதானத் தொழிலாக உள்ள இம் மாவட்டத்தில் இந்த திட்டத்தால் பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
இந்த ஆண்டின் கார் பருவத்தில் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் குருத்துப் பூச்சி நோய்த்தாக்குதல் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளவர்கள் மிகவும் குறைவு. ""காப்பீடு திட்டத்தை கிராம அளவில் அமல்படுத்தினால் மட்டுமே அதில் விவசாயிகள் ஆர்வமுடன் சேருவார்கள். திட்டத்தின் நோக்கமும் முழுமையாக நிறைவேறும்'' என்கிறார் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர். கசமுத்து.
அண்மையில் குற்றாலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பயிர் காப்பீடு திட்டத்தை கிராம அளவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கு கூடியிருந்த விவசாயிகளுக்கு மத்தியில் உறுதி அளித்தார். ஆனால் அதற்கான முறையான அரசு அறிவிப்பு இதுவரையில் வரவில்லை.
பயிர்க் காப்பீடு திட்டத்தை கிராம அளவில் செயல்படுத்த இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகலாம். வேளாண்மைத் துறை மற்றும் புள்ளியியல் துறையில் போதுமான எண்ணிக்கையில் ஆள்கள் இருந்தால்தான் அதைச் செயல்படுத்த முடியும் என்கின்றனர் காப்பீடு நிறுவனத்தினர். எனவே, அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பயிர்க் காப்பீடு திட்டத்தை கிராம அளவில் செயல்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்! காரணம் என்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

