கோவை : தனியார் பஞ்சாலைகளில் சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் ஏற்பட தாமதமாகி வருவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேளாண்மைக்கு அடுத்ததாக அதிக வேலைவாய்ப்பைத் தரக்கூடியதாக ஜவுளித் துறை உள்ளது. அதிலும், பஞ்சாலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நாட்டின் நூல் உற்பத்தியில் பெரும்பகுதி தமிழகத்தின்தான் இருக்கிறது. நூல் ஏற்றுமதியிலும் குறிப்பிட்ட அளவு தமிழகத்தின் பங்காக இருக்கிறது.
ஒருகட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு நிறைவான
சலுகைகள் கிடைக்கப் பெற்றாலும் தற்போது அத்தகைய சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள பஞ்சாலைகளில் நிரந்தரத் தொழிலாளர்கள் படிப்படியாகக்
குறைக்கப்பட்டு தொழில் பழகுநர், கேம்ப் கூலி, மாங்கல்யத் திட்டம் எனப் பல்வேறு பெயர்களில் தாற்காலிகத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்க வேண்டும் என்ற பஞ்சாலைத் தொழிலாளர்களின் கோரிக்கை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், பஞ்சாலைத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சாலைகளில் பணியாற்றும தொழிலாளர்களுக்கு முதன் முதலில் 1956-ல் ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட்டு புதிய ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம்.
புதிய ஒப்பந்தத்தின்போது ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டு அதை பஞ்சாலைகள் அமல்படுத்தும். ஆனால், கடைசியாக 1998 டிசம்பரில் ஒப்பந்தம்
முடிவடைந்த பிறகு புதிய ஒப்பந்தத்துக்கான நடவடிக்கை இல்லை. தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியபோதும் அதற்கான நடவடிக்கை இல்லை.
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பஞ்சாலைகளின் தொழிலாளர்கள் கடந்த 12 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் பணியாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ் மாநில எச்எம்எஸ் செயலர் டி.எஸ்.ராஜாமணி கூறியது:
ஊதிய ஒப்பந்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் 2001-ல் பஞ்சாலைகளில் 3 நாள் வேலைநிறுத்தம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, ஊதிய உயர்வு குறித்து விசாரிக்க தனித்தொழில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இருப்பினும் விசாரணை விரைவுபடுத்தப்படவில்லை. இந்நிலையில் அத் தீர்ப்பாயமும் கலைக்கப்பட்டுவிட்டது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பஞ்சாலைத் தொழிலாளர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினோம்.
தொடக்கத்தில் இப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையின் வேகம், தற்போது குறைந்துவிட்டது. கூட்டுறவு ஆலைகள், தேசிய பஞ்சாலைக் கழக ஆலைகளில் (என்டிசி) ஊதிய உயர்வுக்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டு அதன்படி
தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அதேபோல, தனியார் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கான நடவடிக்கையை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்றார்.
ஊதிய ஒப்பந்தத்ததை ஏற்படுத்திட அனைத்து தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஏஐடியுசி பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் எம்.ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
தனியார் பஞ்சாலைத் தொழிலாளர் ஊதிய உயர்வு குறித்து முடிவு செய்ய தனித் தொழில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டபோதே, பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு
உடனடி நிவாரணமாக | 1,300-ம் மாதாந்திர இடைக்கால நிவாரணமாக | 225-ம் 6 மாதத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து பஞ்சாலை நிர்வாகங்கள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றன. இதற்கிடையே தனித்தொழில் தீர்ப்பாயமும் கலைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் தடை நீக்கப்பட்டுவிட்டது.
ஆனால், அதன்பிறகும் இவ்விஷயத்தில் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கமான தொழில் தீர்ப்பாயத்தில் இவ் வழக்கை விசாரிப்பதற்கு தாமதம் ஆகும் என்பதால்தான் தனித் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. முந்தைய ஆட்சியின்போது தீர்ப்பாயத்துக்கான கால அவகாசம் 3 முறை நீட்டிக்கப்பட்டது. ஆனால், தற்போது அத் தீர்ப்பாயம் கலைக்கப்பட்டுவிட்டதால் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பயன் மேலும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது. ஆகவே, இவ்விஷயத்தில் அரசு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.