இரு நிர்வாகங்களுக்கு இடையே குளறுபடி: காவிரியில் கலக்குது ஆலைக் கழிவு நீர்!

ஈரோடு  : திட்டத்தைச் செயல்படுத்துதில் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள குளறுபடி காரணமாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. இத
இரு நிர்வாகங்களுக்கு இடையே குளறுபடி: காவிரியில் கலக்குது ஆலைக் கழிவு நீர்!
Updated on
2 min read

ஈரோடு  : திட்டத்தைச் செயல்படுத்துதில் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள குளறுபடி காரணமாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. இதனால் சாயம், தோல் உள்ளிட்ட ஆலைக் கழிவுகள் காவிரியில் கலந்து ஆற்றை மாசுபடுத்தி வருகிறது.

÷பிச்சைக்காரன்பள்ளம் ஓடையிலிருந்து வரும் கழிவுநீரைச் சுத்திகரித்து, ஆற்றில் விடும் வகையில், தேசிய நதிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.31 கோடி மதிப்பில், ஈரோடு வைராபாளையத்தில், கடந்த 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இத் திட்டப்பணி துவக்கப்பட்டது. இதன்படி, பிச்சைக்காரன்பள்ளம் ஓடையிலிருந்து குழாய் மூலம் வைராபாளையத்தில் காவிரிக் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கழிவுநீர் கொண்டுவரப்பட்டு, அங்கு சுத்திகரித்து, காவிரியாற்றில் விட வேண்டும்.

÷பிச்சைக்காரன்பள்ளம் ஓடைக்கு, வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், பிராமண பெரிய அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரின் அளவுக்கேற்ப, பராமரிப்புச் செலவு பிரிக்கப்பட்டது. இதன்படி, அதிக அளவு கழிவுநீரை வெளியேற்றும் பெரிய சேமூர் நகராட்சி 72 சதம், பி.பி. அக்ரஹாரம் ஊராட்சி 11.5 சதம், வீரப்பன்சத்திரம் நகராட்சி 10.8 சதம் பராமரிப்புச் செலவு வழங்கக் கோரப்பட்டது. ஆனால், இந்த உள்ளாட்சி அமைப்புகள் இத்தொகையை வழங்கவில்லை.

÷மின் கட்டணம் செலுத்தப்படாததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுத்திகரிப்பு நிலையத்தின் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இதனால் இத்திட்டம் முடங்கியது.  இதனையடுத்து இப்பிரச்னையில் அப்போதைய ஆட்சியர் தலையிட்டதை அடுத்து,  வீரப்பன்சத்திரம் நகராட்சி, பி.பி.அக்ரஹாரம் ஊராட்சி ஆகியவை தங்களின் பங்களிப்புத் தொகையைச் செலுத்திவிட்டன. ஆனால் பெரியசேமூர் நகராட்சி நிர்வாகம் பங்களிப்பு தொகையைச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல், சாயம், தோல் கழிவு நேரடியாகவே காவிரியில் கலக்கிறது.

÷குடிநீர் வடிகால் வாரிய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தது:  சுத்திகரிப்பு நிலையப் பராமரிப்புச் செலவை, மூன்று உள்ளாட்சி அமைப்புகளும் வழங்க வேண்டும். பெரியசேமூர் நகராட்சி மட்டும் பராமரிப்புத் தொகையைச் செலுத்தவில்லை.  பராமரிப்புத் தொகையைச் செலுத்தினால்தான் மீண்டும் சுத்திகரிப்பு நிலையத்தைச் செயல்படுத்த முடியும். மோட்டார் மற்றும் பம்ப்செட்டுகள் கடந்த ஓராண்டுக்கும் மேல் இயங்காததால் பராமரிக்கவே ரூ.3.5 லட்சம் வரை செலவாகும் என்றார்.

÷இதுகுறித்து பெரியசேமூர் நகராட்சி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தது: நகராட்சி நிர்வாகத் துறை அறிவுறுத்தலின்படி பராமரிப்புச் செலவுக்கு ரூ.3.25 லட்சம் மற்றும் பங்களிப்புத் தொகை ரூ.1 லட்சம் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்பிறகு சுத்திகரிப்பு நிலையம் செயல்பாடுகளை தொடங்கிய பிறகு மாதம் ரூ.1 லட்சம் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்கவேண்டும் என்று உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படத் தொடங்கியபிறகு ஒவ்வொரு மாதமும் தனது பங்களிப்புத் தொகையை வழங்க நகராட்சி நிர்வாகம் தயாராக இருக்கிறது என்றார்.

÷குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகளிடையே உள்ள நிர்வாகக் குளறுபடியால் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் தோல், சாயம் உள்ளிட்ட ஆலைக்கழிவுகள் காவிரியில் கலந்து மாசுபடுத்தி வருகின்றன.

 ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆறு ஆலைக்கழிவுகளால் மாசு அடையாமல் தடுத்திட, இந்த சுத்திகரிப்பு நிலையம் விரைவில் செயல்பட அரசு வழி காண வேண்டியது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com