திருவாரூர் : காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர்ப் பங்கீட்டில் உரிய திட்டமிடல், பயிர்க் கடன் கிடைக்காதது, உள்ளிட்ட காரணங்களால் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர் சாகுபடி பருவம் தவறிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் பயிர்தான் பிரதான சாகுபடி. இங்கு குறுவை ஏறத்தாழ 1.12 லட்சம் ஹெக்டேரிலும், சம்பா மற்றும் தாளடி சாகுபடி ஏறத்தாழ 4.34 லட்சம் ஹெக்டேரிலும் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
நிகழாண்டில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால், ஏறத்தாழ 50 சதவீத பரப்பளவில் மட்டுமே வடிமுனைக் குழாய் உதவியோடு குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
அணையில் ஓரளவுக்கு நீர் இருப்பு உயர்ந்ததும் ஜூலை 28-ம் தேதி அணை திறக்கப்பட்டது. ஆனாலும், தண்ணீர் திறக்கப்பட்டு ஏறத்தாழ இரண்டரை மாதங்களாகியும் பல இடங்களுக்குத் தண்ணீர் சென்று சேரவில்லை. தூர்வாரும் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாததால், பல ஆறுகள் முழுவதுமாக மண்மேடுகளாகவும், ஆகாயத் தாமரை மற்றும் காட்டாமணக்குச் செடிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கர்நாடகம் போதிய அளவு தண்ணீர் தராததால், கல்லணையிலிருந்து காவிரி மற்றும் வெண்ணாற்றில் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டு, தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் சம்பா சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் சற்று தயக்கம் காட்டினர்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் டெல்டா பகுதியில் அவ்வவ்போது நல்ல மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் அந்த மாதங்களுக்கான இயல்பான மழையைவிட சற்றுக் கூடுதலாகவே மழை பெய்தது. இதைக் கொண்டு விவசாயிகள் சம்பா நாற்றுகளைவிடத் தொடங்கினர்.
சம்பா மற்றும் தாளடி வழக்கமான பரப்பளவு திருவாரூர் மாவட்டத்தில் 1,44,870 ஹெக்டேர். இதில் அக்டோபர் 15-ம் தேதி வரை ஏறத்தாழ 90,000 ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. 3,300 ஹெக்டேரில் நாற்றுகள் விடப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வழக்கமான சாகுபடி பரப்பளவு 1,35,800 ஹெக்டேர். இதில் இதுவரை 89,536 ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளது. 2,500 ஹெக்டேரில் நாற்றுகள் விடப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தின் வழக்கமான சாகுபடி பரப்பு 1.40 லட்சம் ஹெக்டேர். இதில் இதுவரை 33,000 ஹெக்டேரில் நடவுப் பணி முடிவுற்றுள்ளன. ஏறத்தாழ 10,000 ஹெக்டேரில் நாற்றுகள் விடப்பட்டுள்ளன.
விதை நெல், உரம் ஆகியவை தட்டுப்பாடின்றிக் கிடைக்க அரசு வேளாண் மற்றும் கூட்டுறவுத் துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், விவசாயிகளுக்கு போதிய அளவு பயிர்க் கடன் கிடைக்காதது, கிராமங்கள்தோறும் பெயரளவுக்கு நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் காரணமாக விவசாய கூலித் தொழிலாளர்கள் கிடைக்காதது, வேளாண் தொழிலில் தொடர்ந்து ஏற்படும் நஷ்டம், உற்பத்திப் பொருளுக்கு உரிய விலை கிடைக்காதது உள்ளிட்டவை விவசாயிகளை விரக்தியடையச் செய்துள்ளன.
குறுவை சாகுபடி முழுமையாக நடைபெறாத நிலையில், சம்பா சாகுபடியை காலத்தில் மேற்கொள்ள இயலாததற்கு நீர்ப் பங்கீட்டில் பொதுப் பணித் துறை முழுமையான கவனம் செலுத்தாததே சாகுபடி பருவம் தவறுவதற்குக் காரணம் என்கின்றனர் விவசாயிகள். பருவம் தவறிச் செய்யப்படும் சாகுபடியால், பருவ மழை தீவிரமடையும் பட்சத்தில், கடுமையான பாதிப்பு ஏற்படும் எனவும் அச்சம் தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


