

ஈரோடு: மாவுப்பூச்சி தாக்குதல் காரணமாக, சாகுபடி செலவுக்குக்கூட விளைச்சல் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள்.
தமிழகத்தில் மேட்டுப்பகுதி விவசாயத்தைப் பொறுத்தவரை குறைந்த தண்ணீர் தேவையும் அதிக லாபமும் உள்ள பயிர்களையே விவசாயிகள் தேர்வு செய்கின்றனர். இந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது மரவள்ளிக்கிழங்கு சாகுபடி. கடந்த சில ஆண்டுகளாக இதன் விலை ஏறுமுகமாகவே உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும், இப்பயிர் சாகுபடிப் பரப்பும் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு டன் ஒன்றுக்கு 5000 முதல் 9000 வரை விலை கிடைத்தது. இதனால் கடந்த ஆண்டு நவம்பரிலேயே மரவள்ளிக்கிழங்கு சாகுபடியை விவசாயிகள் தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டு மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் சுமார் 11 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு சுமார் 8000 ஹெக்டேரில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1.15 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு, 3 மாதங்களிலேயே மாவுப்பூச்சி தாக்குதல் தொடங்கிவிட்டது. இதனால், விவசாயிகள் 3 முறை பூச்சிக்கொல்லி மருந்து அடித்தும் பலனில்லை. தொடர் மழை பெய்த சில பகுதிகளில் மட்டும் இப்பூச்சி தாக்குதல் குறைந்துள்ளது.
இந் நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் பயிரிடப்பட்ட மரவள்ளிக்கிழங்கு அறுவடை இப்போது தொடங்கியுள்ளது. மாவுப்பூச்சி தாக்குதல் காரணமாக ஏக்கருக்கு 2 டன்கூட விளைச்சல் இல்லை. மேலும் 28 சதவீத அளவு இருக்க வேண்டிய மாவுச்சத்து 18 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதனால் கடந்த ஆண்டு டன் 7,500 க்கு விற்ற மரவள்ளிக்கிழங்கை இப்போது டன் 2500-க்கு விற்கவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏக்கர் சாகுபடி செய்ய 15 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகள், ஏக்கருக்கு 5000 வருமானம் பெறுவதற்குகூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவுப்பூச்சி தாக்குதல் இல்லையெனில் ஏக்கருக்கு 8 முதல் 12 டன் வரை விளைச்சல் இருக்கும். கடந்த ஆண்டு ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை லாபம் பார்த்த விவசாயிகள் இப்போது ஏக்கருக்கு 10 ஆயிரத்திற்கு மேல் இழந்து பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாய அமைப்பை சேர்ந்த சுபி.தளபதி கூறியதாவது:
மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ள நிலப்பரப்பில் 95 சதவீத அளவு மாவுப்பூச்சி தாக்கியதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஏக்கருக்கு 10 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும். அந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரியின் சான்றின் அடிப்படையில் எவ்வித மேல் விசாரணையும் இல்லாமல் உடனடியாக இந்த இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு இலவசக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். 10 மாத விவசாயம் பாழாகிவிட்டது. பருவ மழை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விவசாயப் பணிகளை மேற்கொள்ள, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.