/

சுகாதார சீர்கேட்டில் அரக்கோணம் நகராட்சி; பொதுமக்கள் அவதி

அரக்கோணம் : அரக்கோணம் நகரத்தில் பல இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.   அரக்கோணம் நகரை இரண்டாகப் பிரிக்கும் இரட்டைக்கண் வாராவதியில் வாகனங்க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:53 pm

எஸ்.சபேஷ்

அரக்கோணம் : அரக்கோணம் நகரத்தில் பல இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

  அரக்கோணம் நகரை இரண்டாகப் பிரிக்கும் இரட்டைக்கண் வாராவதியில் வாகனங்கள் செல்வதற்காக ஒதுக்கப்பட்ட பாதையில் ரயில்நிலைய கழிவுநீர், குழாய்களின் மூலம் விடப்படுகிறது. அதை தினமும் மோட்டார் வைத்து அகற்றி வருகின்றனர். ஆனால் கடந்த சில நாள்களாகக் கழிவுநீர் அகற்றப்படாமல் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ஆட்டோவில் செல்லும் பொதுமக்களின் கால்கள் நனையும் அளவுக்கு கழிவுநீர் நிற்கிறது.

  அரக்கோணம் நகரின் 21, 22-வது வார்டு பகுதி காந்தி நகர். இப்பகுதியில் உள்ள திருப்பூர் குமரன் தெரு முனையில் கழிவுநீரை தேக்கி வைக்க ஒரு குட்டையை நகராட்சி பணியாளர்களே அமைத்துள்ளனர். அப்பகுதி கழிவுநீர் அனைத்தும் அந்தக் குட்டையில்தான் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாகி பல்வேறு நோய்களின் பிறப்பிடமாக அது மாறிவருகிறது. மேலும் அங்கு வரும் பன்றிகளாலும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

  விண்டர்பேட்டை, சத்தியவாணிமுத்து நகர், சோமசுந்தர நகர், புதுப்பேட்டை, காந்தி நகர், பெரியார் நகர், அசோக் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குப்பைத் தொட்டிகளில் குப்பை நிரம்பி வழிகிறது. நகராட்சி பணியாளர்கள் அதை உடனே அகற்றுவதும் இல்லை. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

  இது குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் கூறியது: காந்தி நகரில் முன்னர் இருந்த அதிகாரிகள் அந்தக் குட்டையை ஏற்படுத்தி விட்டனர். விரைவில் அது சீர்செய்யப்படும். மின்மோட்டார் பழுதடைந்துள்ளதால் இரட்டைக்கண் வாராவதியில் தேங்கும் நீரை வெளியேற்ற முடியவில்லை. பழுதை சரி செய்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.