டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி

சென்னை, ஏப். 20: மூன்று செயற்கைக் கோள்களை ஏந்திச் சென்ற பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  "ரிசோர்ஸ்-சாட்-2', "ய

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:00 am

சென்னை, ஏப். 20: மூன்று செயற்கைக் கோள்களை ஏந்திச் சென்ற பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

 "ரிசோர்ஸ்-சாட்-2', "யூத்-சாட்', "எக்ஸ்-சாட்' ஆகிய மூன்று செயற்கைக் கோள்களை தாங்கிச் செல்லும் பி.எஸ்.எல்.வி. "சி-16' ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான "கவுன்ட்-டவுன்' திங்கள்கிழமை அதிகாலை 3.42 மணிக்குத் தொடங்கியது.

 திட்டமிட்டபடி, புதன்கிழமை காலை 10.12 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.

 தொடக்கத்தில் சத்தமின்றி கிளம்பிய ராக்கெட், படிப்படியாக மேலே செல்லச்செல்ல அதிரவைக்கும் ஓசையுடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது. ஒவ்வொரு நிலையை ராக்கெட் வெற்றிகரமாக கடக்கும்போதும், விஞ்ஞானிகள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 ஏவப்பட்ட 30-வது நிமிடத்தில் இறுதி கட்டமான நான்காவது நிலையைக் கடந்து, திட்டமிட்டபடி பூமியிலிருந்து 822 கி.மீ. உயரத்தில் நீள்வட்ட துருவப் பாதையைச் சென்றடைந்ததும் விஞ்ஞானிகள் அனைவரும் எழுந்து நின்று ஒருவருக்கு ஒருவர் கைகளைக் குலுக்கி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

 அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன், பின்னர் பேட்டி அளித்தார். பி.எஸ்.எல்.வி. "சி-16' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

 ரிசோர்ஸ் சாட்-1 செயற்கைக்கோளுக்கு மாற்றாக: இதில் எடுத்துச் செல்லப்பட்டுள்ள "இஸ்ரோ' தயாரிப்பான "ரிசோர்ஸ் சாட்-2' செயற்கைக்கோள், ஏற்கெனவே கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து விண்ணில் சுற்றிவரும் "ரிசோர்ஸ் சாட்-1'-க்கு மாற்றாகச் செயல்படும். ரிசோர்ஸ் சாட்-1 செயற்கைக்கோளைக் காட்டிலும், அதிநவீன தொழில்நுட்பங்கள் ரிசோர்ஸ் சாட்-2 செயற்கைக்கோளில் இடம்பெற்றுள்ளன. மூன்று அதிநவீன கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல், வேறு பல நாடுகளுக்கும் வர்த்தக ரீதியில் இது பயன்பட உள்ளது என்றார் ராதாகிருஷ்ணன்.

 8-வது நாளில் கேமராக்கள் இயக்கப்படும்: துருவ நீள்வட்டப் பாதையைச் சென்றடைந்துள்ள செயற்கைக் கோள்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என இஸ்ரோ (ஐ.எஸ்.ஏ.சி) இயக்குநர் டி.கே. அலெக்ஸ் கூறினார்.

 ராக்கெட் ஏவப்பட்டதிலிருந்து 8-வது நாளில் அதாவது ஏப்ரல் 28-ம் தேதி செயற்கைக் கோளில் உள்ள 3 கேமராக்களும் ஆன் செய்யப்பட்டு, செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

 இந்த கேமராக்கள் வெவ்வேறு வகையான ரெசல்யூஷனில் படங்களை எடுத்து அனுப்பும். இந்தியா மட்டும் அல்லாமல் 15 நாடுகள் இந்த செயற்கைக் கோள்கள் எடுத்து அனுப்பும் படங்களைப் பயன்படுத்த உள்ளன. ஒவ்வொருவரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் என்றார் அலெக்ஸ்.

 பயன் என்ன? தட்பவெப்ப நிலை குறித்து ஆய்வுசெய்ய, பயிர்களைக் கண்காணிக்க, விவசாய உற்பத்தி, பருவநிலை மாற்றம், பனி மூட்டத்தைக் கண்காணிக்க, கடற்கரைப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க, நீர் நிலைகளைக் கண்காணிக்க என பல்வேறு நடவடிக்கைகளுக்கும், ஆய்வுக்கும் இந்த செயற்கைக்கோள்கள் அனுப்பும் படங்கள் பயன்பட உள்ளன.

 ரிசோர்ஸ் சாட்-2 செயற்கைக்கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தயாரிக்கப்பட்டது. 1,206 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் தொலை உணர்வு செயற்கைக் கோளாகும். 200 ஜி.பி. சேமிப்புத் திறன் கொண்ட உறுதிவாய்ந்த பதிவுக் கருவி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

 யூத்சாட் செயற்கைக்கோள் இந்திய - ரஷிய கூட்டு தயாரிப்பில் உருவானது. 92 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக் கோளில் ராபிட், லிவிசி என்ற இரண்டு இந்தியக் கருவிகளும், சோல்ராட் என்ற ரஷியக் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

 எக்ஸ்-சாட் செயற்கைக்கோள், சிங்கப்பூரின் முதல் செயற்கைக் கோளாகும். 106 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோளில் அதிநவீன பல்நோக்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.