என்ன வேண்டும் எங்களுக்கு? வேளாண் துறை...
வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 15 நாள்கள் இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், முக்கியமான துறைகளில் முக்கியமான பிரச்னைகள் என்னென்ன, அதற்குத் தீர்வு என்ன, அடுத்து பதவ


வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 15 நாள்கள் இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், முக்கியமான துறைகளில் முக்கியமான பிரச்னைகள் என்னென்ன, அதற்குத் தீர்வு என்ன, அடுத்து பதவி ஏற்க இருக்கும் அரசிடம் அந்தந்தத் துறைகளிடமிருந்து மக்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்கிற விவரங்களைத் தொகுத்தளித்து, அடுத்த அரசுக்கு சில ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தக் கட்டுரைத் தொடர்.
என்னதான் தொழில் வளம் பெருகினாலும், எல்லா மக்களுக்கும் உணவிட உழைக்கும் விவசாயிகளின் வருமானத்துக்கு உத்தரவாதம் கிடைக்க தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், சமூக நல அமைப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் விவசாயத்தை சேர்த்தால், விவசாயத்துக்கு ஆள்கள் கிடைப்பதுடன், ஆண்டுக்கு 100 நாள் என்பதை 150 நாள் என்று அதிக நாள்கள் வேலை தரலாம் என்கின்றனர்.
உணவு உற்பத்தி பெருகி வருகிறது என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வந்தாலும் உணவு தானியங்களின் விலை உயர்ந்து வருவதை யாரும் மறுக்க முடியவில்லை. முதல்வர் கருணாநிதியும்கூட, விலைவாசி உயர்வின் தாக்கம் ஏழைகளைப் பாதிக்காதிருக்கும் வகையில் மலிவு விலையில் மளிகைப் பொருள்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்குகிறோம் என்றுதான் கூற முடிகிறதே தவிர, விலைவாசி உயரவில்லை எனக் கூற முடியவில்லை.
இவ்வளவு விலை உயர்விலும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது என்று திமுக அமைச்சர்கள் சட்டப்பேரவையில் பெருமிதம் தெரிவித்திருந்தனர்.
ஆனால் இந்த உணவுப் பொருள்களை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மட்டும் உயராமலே உள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தால் மாதச் சம்பளம் என்ற வருமான உத்தரவாதம் இருக்கிறது. வணிகத்தில் ஈடுபடுவோருக்கு வணிகத்தைப் பொருத்து லாபம் அமைகிறது. ஆனால் விவசாயத்தில் மட்டும்தான் தனது வருமானத்தை விவசாயி யாரும் நிர்ணயிக்க முடியாத நிலை இருக்கிறது.
எனவே விளைபொருள்களுக்குத் தாங்களே விலை நிர்ணயம் செய்யக் கூடிய ஒரு நடைமுறையை புதிய அரசு உருவாக்க வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். குறிப்பிட்ட தானியத்தை விளைவித்தால் குறைந்தபட்ச விலையாக குறிப்பிட்ட ஒரு தொகை நிச்சயமாகக் கிடைக்கும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். நகரங்களில் அரிசியின் அளவுக்கு ராகி, கம்பு போன்ற தானியங்களும் சுத்தம் செய்து பாக்கெட்டில் விற்கப்படுகின்றன.
இதை இன்னும் மேம்படுத்தி ரேஷன் கடைகளிலும் மற்ற பொருள்களுடன் இந்த தானியங்களை வழங்கினால் மக்களின் ஆரோக்கியம் மேம்படும், அத்துடன் விவசாயிகளின் வாழ்வும் வளம் பெறும்.
இவ்வாறு செய்தால், புன்செய் தானிய விளைச்சலில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவார்கள் என்கின்றனர் விவசாய நல அமைப்பினர்.
தண்ணீர் வளம் உள்ள நிலங்களில் உணவுப் பயிர் சாகுபடி செய்வது படிப்படியாக குறைகிறது. பணப் பயிரில்தான் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே உணவுப் பயிர் விளைச்சலை ஊக்குவிக்க, வெளிநாடுகளில் உள்ளதுபோல மாதாந்திர மானியம் தருவது பற்றியும் பரிசீலிக்கலாம்.
மானாவாரி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு அரசின் பெரும்பாலான மானியத் திட்டங்களால் பலன் கிடைப்பதில்லை. எனவே அவர்களை மனதில் கொண்டு சில திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
விவசாய நிலத்தின் வளம் படிப்படியாக குறைந்து வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்கவும், இயற்கை முறை விவசாயத்தை ஊக்குவிக்கவும் கூடுதல் மானியத் திட்டங்கள் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
விவசாய நிலத்தில் சாத்தியமாகும் இடங்களில் குட்டைகள் அமைத்து நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்க ஊக்குவிப்புத் திட்டங்கள் உருவாக்கலாம் என நீரியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் பூச்சிக்கொல்லி மருந்து இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வழிவகை காணப்பட வேண்டும். கேரளம், கர்நாடகத்தில் என்டோசல்பான் மருந்துக்கு தடை வந்துவிட்டாலும், தமிழகம் இன்னும் யோசிக்கிறது. மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இதுபோன்ற விஷயங்களில் முடிவு எடுக்க வேண்டும்.
பூச்சிக்கொல்லி மருந்துகளின் மிச்சங்கள் உணவுப் பொருள்களில் கலந்துவிடும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருவதை அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன.
ஆந்திரத்தில் இயற்கை முறை விவசாயத்துக்கு மத்திய அரசு உதவியுடன் விவசாய குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலத்தில் 25 சதவீத விளைநிலங்களை இயற்கை முறை விவசாய நிலங்களாக மாற்ற அந்த அரசு இலக்கு நிர்ணயித்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இந்த விவசாய முறைக்கு மாறிய விவசாயிகள், கடன்களில் இருந்து மீண்டு கைவசம் சேமிப்பும் வைத்திருக்கும் அளவுக்கு அவர்களின் பொருளாதார நிலை உயர்ந்துவிட்டது. இதை நேரில் ஆய்வு செய்து உரிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.
கிராமங்களில் குறிப்பிட்ட நேரத்தில், உரிய அழுத்தத்தில் மின்சப்ளை இல்லாமல் போவதால் மோட்டாரின் வயர்கள் எரியும் நிலை உள்ளது. ஒருமுறை வயர்கள் எரிந்தால் ரூ.5000 முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவு ஆகும். எனவே எந்த நேரத்தில் மின் சப்ளை கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். அந்த நேரத்தில் உரிய மின் அழுத்தம் இருக்க வேண்டும்.
அடுத்ததாக, விவசாய நிலங்களில் புங்கன் விதை, காட்டாமணக்கு விதை போன்றவை மூலம் தயாரித்த எண்ணெயைக் கொண்டு மோட்டார்களை சில விவசாயிகள் இயக்கி வருகின்றனர். ஒவ்வொரு விவசாயியும் இதை தங்கள் நிலத்திலேயே செய்ய முடியுமா, அதற்கான சாத்தியக்கூறு என்ன என ஆய்வு செய்து, தேவைப்படும் உதவிகளை அரசே மானியமாக அளித்து, மோட்டார்களை மாற்றிக் கொடுத்தால், விவசாயி தேவைப்படும் நேரத்தில் மோட்டாரை இயக்கிக் கொள்ளலாம், மின்சார தடை என்ற பிரச்சினையே அவர்களுக்கு இருக்காது என்கின்றனர். மரபுசாரா எரிசக்தித் துறை மூலம் இதற்காக பெரியதொரு திட்டத்தை தீட்டலாம் என்கிறார்கள்.
தமிழகத்தில் மரபணு மாற்றம் செய்த பயிர்களுக்கான ஆராய்ச்சியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மறைமுகமாக நடக்கும் ஆராய்ச்சிகளையும் நிறுத்த வேண்டும். தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழக நிபுணர்களின் மொத்த கவனமும், சிக்கன முறையிலான விவசாயத்தின் மூலம் அதிகபட்ச வருவாய் ஈட்டுவதற்கான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதாகத்தான் இருக்க வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்படுகிறது.
கிராமங்களில் விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. எனவே ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் விவசாய வேலைகளைச் சேர்த்து, பாதி கூலியை விவசாயியும், மீதி கூலியை அரசும் தரலாம். இதனால் விவசாயத்துக்கும் ஆள் கிடைக்கும்; அரசு நிதி ஒதுக்கீட்டில் பணம் மிச்சமாவதால் கூடுதலாக 50 நாள்களுக்கு வேலை தரலாம் என்கிறார்கள் விவசாயிகள்.
65 வயதைத் தாண்டிய விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தரும் திட்டம் ஒன்று அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு தேர்தல் வந்ததால் அதில் முன்னேற்றம் எதுவும் இல்லை.
விவசாய நிலத்தைப் பாதுகாப்பது, விவசாயத்தைப் பாதுகாப்பது, விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்க உத்தரவாதம், நில வளம், நீர் வளம் பாதுகாப்பு, மோட்டார்களை இயக்க மாற்று ஏற்பாடுகள்,விவசாயத் தொழிலுக்கு ஆள் கிடைக்க ஏற்பாடு, தொழிலாளர்களுக்கு வருவாய் மற்றும் ஓய்வூதிய ஏற்பாடு ஆகியவற்றைச் செய்தால் அடுத்து வரும் அரசு விவசாயத் துறையில் பெரிய முன்னேற்றத்துக்கு வழி ஏற்படுத்த முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...