பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சமூக விரோதக் கும்பல் ஊடுருவல்!

டாப்சிலிப்: தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியான இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சமூக விரோதக் கும்பல் ஊடுருவியுள்ளது தெரியவந்துள்ளது.  அக்கும

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:57 pm

வி.கே. ராஜமா​ணிக்கம்

டாப்சிலிப்: தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியான இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சமூக விரோதக் கும்பல் ஊடுருவியுள்ளது தெரியவந்துள்ளது.

 அக்கும்பல் விட்டுச் சென்ற பேட்டரி செல் உறைகள், கத்தி போன்ற ஆயுதங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் வரைபடம் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

 அதையடுத்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் முகாமில் இருந்து அதிரடிப்படை எஸ்பி கருப்பசாமி தலைமையில் அதிரடிப்படை வீரர்கள் 65 பேர், வனத்துறையினர் 25 பேர் நான்கு குழுக்களாகப் பிரிந்து திங்கள்கிழமை தேடுதல் வேட்டை நடத்தினர்.

 அடந்த வனப் பகுதி...: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 33 கிமீ தூரத்தில் உள்ளது டாப்சிலிப் வனப்பகுதி, தமிழக - கேரள எல்லையில் அமைந்திருக்கிறது. இப் பகுதியில் இருக்கும் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறையில் தொடங்கி அமராவதி, பொள்ளாச்சி, மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரகங்களை உள்ளடக்கியது. 858 சதுர கிமீ பரப்பு உடையது. 300-க்கும் மேற்பட்ட வகையான விலங்குகள் உள்ளன. தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமாக டாப்சிலிப், இந்திகாந்தி வன உயிரின சரணாலயம் இருப்பதால், இங்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகம்.

 அணைகள் வரைபடம், பேட்டரி உறை பறிமுதல்...: புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட எருமைப்பாறை பகுதியில் வனக் காவலர்கள் அன்பழகன், மெய்யப்பன் ஆகியோர் சனிக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த பெரிய பிளாஸ்டிக் பையைக் கண்டெடுத்துள்ளனர்.

 அதில் சிறிய டார்ச் லைட்டுக்குப் பயன்படுத்தும் பேட்டரி உறைகள், 6 கத்திகள், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் வரும் அனைத்து அணைகளின் வரைபடம், வனப் பகுதியில் அந்த அணைகளுக்குச் செல்வதற்கான வழித்தட விவரம், தீப் பெட்டிகள், பேண்ட், டி-சர்ட், மலையேற்றப் பயிற்சிக்குப் பயன்படுத்தும் கொக்கியுடன் கூடிய 47 மீட்டர் கயிறு, ஹாக்ஸô பிளேடு ஆகியன இருந்துள்ளது.

 இதுகுறித்து டாப்சிலிப் வனச்சரகர் சரவணனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் அந்த பொருள்களை மீட்டு வந்துள்ளனர். இதுபற்றி போலீஸôருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதிரடிப்படை தேடுதல் வேட்டை...: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அதிரடிப்படை முகாமில் இருந்து, எஸ்பி கருப்புசாமி தலைமையில் அதிரடிப்படை வீரர்கள் 65 பேர் டாப்சிலிப்-க்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தனர். அவர்களோடு வனத் துறையினர் 25 பேரும் இணைந்து திங்கள்கிழமை அதிகாலை தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பந்தாரவரை, கதவுசாத்தி, சீச்சாலி, கேரள பகுதியான கரியஞ்சோலை ஆகிய பகுதிகளுக்கு நான்கு குழுக்களாகப் பிரிந்து மாலை 6 மணி வரை தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தேடுதல் வேட்டை செவ்வாய்க்கிழமையும் தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

 சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்...: டாப்சிலிப்-ல் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக 25-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இதில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் 50 பேர் ஞாயிற்றுகிழமையே வெளியேற்றப்பட்டனர். மேலும், டாப்சிலிப் பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கும், வனப்பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்கும் தாற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

 வேட்டைக்காரர்கள் ஊடுருவல்?: புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் இனப்பெருக்க காலம் இது. இந்த நேரத்தில் விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் வேட்டைக்காரர்கள் ஊடுருவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று அதிரடிப்படை எஸ்பி எஸ்.கருப்புசாமி தெரிவித்தார்.

 வனத்துறையினருடன் இணைந்து 30 கிமீ வரை தேடுதல் வேட்டை நடத்தினோம். இதில், அடர்ந்த வனப்பகுதிக்குள் ஆள்நடமாட்டத்துக்கான சில தடயங்கள் கிடைத்துள்ளன. நான்கு அல்லது 5 பேர் வந்து சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். எருமைப்பாறை அருகே உப்பு பாக்கெட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. விலங்குகளுக்காக அவற்றைக் கொண்டு வந்திருக்கலாம். இந்த பகுதியில் உப்பு

 கிடைக்கும் என்பதை விலங்குகளுக்குப் பழக்கப்படுத்தி அதன் மூலம் குறிப்பிட்ட பகுதியில் மறைந்து இருந்து வேட்டையாடத் திட்டமிட்டுருக்கின்றனர்.

 கேரள அதிரடிப்படையினர் அவர்களது எல்லையில் செவ்வாய்க்கிழமை தேடுதல் வேட்டை நடத்த உள்ளனர் என்றார். வரைபடம், கத்தி போன்ற பொருள்கள் எடுக்கப்பட்ட இடம் வாகனங்கள் செல்ல முடியாது அடர்ந்த வனப்பகுதி. அவற்றைக் கொண்டு வந்த நபர்கள் கேரள வனப் பகுதி வழியாக, வந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறுகின்றனர்.

 சதிச் செயலுக்குத் திட்டமா?: வனத்துறையினரால் மீட்கப்பட்ட பிளாஸ்டிக் பையில், பிஏபி திட்டத்தில் இருக்கும் அணைகள் மற்றும் அவற்றுக்குச் செல்வதற்கான வழித்தடம் அடங்கிய 17 வரைபடங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

 முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தமிழக - கேரளம் இடையே சர்ச்சை இருந்து வரும் சூழலில் அணைகளின் வரைபடங்கள் மீட்கப்பட்டிருப்பது ஏதேனும் சதிச் செயலுக்குத் திட்டமிடப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.