டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மின் வாரியத்தில் அதிகரித்துவரும் காலிப் பணியிடங்கள்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காலிப் பணியிடங்களால் பணிகள் முடங்கும் அபாயம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். மின் பயன்பாட்டு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:12 pm

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காலிப் பணியிடங்களால் பணிகள் முடங்கும் அபாயம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மின் பயன்பாட்டு கணக்கீட்டாளர் (அùஸசர்), தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருப்பதால், பல இடங்களில் மின் பயன்பாட்டு அளவை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிட முடியாத நிலையும், நுகர்வோரின் புகார்களை உடனடியாக சரிசெய்ய முடியாத நிலையும் ஏற்பட்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் மின் பயன்பாட்டு கணக்கீட்டாளர் பற்றாக்குறை காரணமாக தரமணி அருகில் உள்ள கல்லுக்குட்டை, கண்ணகிநகர் உள்பட மேலும் சில பகுதிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வீடுகளின் மின் பயன்பாட்டு அளவைக் கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது: கல்லுக்குட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் முன்னர் மின் விநியோகம் கிடையாது. எனவே, அப்பகுதியில் சிலர் பிரதான மின் கம்பியில் கொக்கியை இணைத்து மின்சாரத்தைத் திருடி வந்தனர்.

இந்தத் திருட்டை அதிகாரிகள் கண்டுபிடித்தும், மக்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. முறைப்படி மின் விநியோகம் வழங்கினால், மின்சாரத்தை ஏன் திருடப் போகிறோம் என அப்பகுதியினர் வாதிட்டனர்.

இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, அப்பகுதியினர் பலருக்கு பட்டா இல்லாத போதும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டன. ஆனால், இப்போது இந்த வீடுகளின் மின் பயன்பாட்டு அளவைக் கணக்கிட போதிய ஊழியர்கள் மின்சார வாரியத்தில் இல்லை.

அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மட்டும், தாங்களாகவே இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மீட்டரின் அளவைக் குறித்து வந்து மின் கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால், அனைவரும் இதுபோன்று செய்வதில்லை. இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன என்றார்.

தமிழகம் முழுவதும் காலிப் பணியிடங்கள் எவ்வளவு ?

மின் பயன்பாட்டுக் கணக்கீட்டாளர் பணியிடம் மட்டுமின்றி, அனைத்து நிலைகளிலும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயர்மேன் பணியிடங்களில் மொத்தமுள்ள 18 ஆயிரம் பணியிடங்களில் 11 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. மின் பயன்பாட்டுக் கணக்கீட்டாளர் பணியிடத்தில் மொத்தமுள்ள 7,400 பணியிடங்களில் 1,300 இடங்கள் காலியாக உள்ளன. தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தில் மொத்தமுள்ள 2,500 பணியிடங்களில் 1,300 இடங்கள் காலியாக உள்ளன.

உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்களில் 615 இடங்கள் காலியாக உள்ளன.

உதவிக் கணக்கு அதிகாரி பணியிடங்களில் மொத்தம் உள்ள 312 இடங்களில் 208 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இளநிலை பொறியாளர் (கிரேட்-2) பணியிடத்தில் மொத்தமுள்ள 2,700 பணியிடங்களில் 1,300 பணியிடங்கள் காலியாக உள்ளன. வருவாய் கண்காணிப்பாளர் பணியிடங்களில் மொத்தமுள்ள 2,700 இடங்களில் 900 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தட்டச்சர் பணியிடங்கள் மொத்தமுள்ள 1,000 இடங்களில் 800 இடங்கள் காலியாக உள்ளன. வர்த்தக உதவியாளர் பணியிடத்தில் மொத்தமுள்ள 4000 பணியிடங்களில் 2,500 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலிப் பணியிடங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. அண்மையில் ஒரு சில இடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்தபோதும், தொடர்ந்து பல்வேறு நிலைகளிலும் ஊழியர்கள் ஓய்வு பெற்று வருவதால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

முக்கியப் பணியிடங்களான வயர்மேன், உதவியாளர், மின் பயன்பாட்டு கணக்கீட்டாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருப்பதால், நுகர்வோரின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. மின் வாரியத்துக்கும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

அண்மையில், மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டபோது, அங்கு தகுதியில்லாத தொழில்நுட்ப உதவியாளர் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நபரிடம் அதிகாரி கேள்வி எழுப்பியபோது, பிரச்னை என்று வந்தால் மெயினை ஆஃப் செய்துவிடுவேன். பின்னர், சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளருக்கு தகவல் தெரிவித்து, பிரச்னையை சரிசெய்ய முயற்சிப்பேன். எனக்கு பிரச்னைகளை சரிசெய்யத் தெரியாது என்று கூறியுள்ளார்.

இந்த நிலை மாறி, நுகர்வோருக்கு தரமான சேவையை மின் வாரியம் அளிக்க, முக்கியப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.