புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தேக்க நிலையில் 2-வது அகலப்பாதை திட்டம்

சென்னை, பிப். 1: சென்னை - நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே 2-வது அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு இதுவரை முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இப்போதுள்ள பிரதான அகலப் பாதையில் (மெயின் லைன்) சென்னையில் இர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:10 am

ச. குமரன்

சென்னை, பிப். 1: சென்னை - நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே 2-வது அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு இதுவரை முன்னுரிமை அளிக்கப்படவில்லை.

இப்போதுள்ள பிரதான அகலப் பாதையில் (மெயின் லைன்) சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களிலும் நாளுக்கு நாள் நெரிசல் மிகவும் அதிகரித்து வருகிறது.

இலவச திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் வாரி இறைக்கும் தமிழக அரசு, மக்களின் சேவைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் திறவுகோலாக இருக்கும் 2-வது அகலப் பாதை திட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணிப்பது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த ஆண்டு (ஏப்ரல்-டிசம்பர் வரை) பயணக் கட்டண வருவாயாக |1,946 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இதில் 55 சதவீதம் வருவாய் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் மூலம் ஈட்டப்படுகிறது.

சென்னையின் உத்தேச மக்கள் தொகை இப்போது 65 லட்சமாக இருக்கும் என்றுகருதப்படுகிறது. இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் தலைமையிடமாக உள்ள சென்னைக்கும், நாட்டின் இதர பகுதிகளுக்கும் செல்ல, தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் தினமும் ஆயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

வி.ஐ.பி.க்கள் படையெடுப்பு: சென்னையில் இருந்து தினமும் வைகை, பாண்டியன், நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை உள்ளிட்ட 40 ரயில் சேவைகள் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் மூலம் தினமும் 1.10 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். விழாக் காலங்களிலும், இதர முக்கிய நாள்களிலும் இது மேலும் அதிகரித்து வருகிறது.

அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முதல் அரசியல்வாதிகள், விஐபிக்கள், இவர்களின் ஆதரவாளர்கள் ரயில்களில் தினமும் சென்னைக்கு படையெடுப்பது அதிகரித்துள்ளது.

சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும், ஆன்-லைன் முன்பதிவு முறையால் அனைத்து டிக்கெட்டுகளும் அடுத்த சில நொடிகளில் விற்றுத் தீர்கின்றன. இதனால், ரயில்களில் பயணம் செய்வதே சாதாரண பயணிகளுக்கு மிகப் பெரிய சவாலாக மாறி வருகிறது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினமும் 270 அரசு விரைவு பஸ்களும், 1,500 ஆம்னி பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஆனாலும், பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் ரயில்களில் பயணம் செய்வதையே பெரும்பாலான பயணிகள் விரும்புகின்றனர்.

இந்த நிலையில், சென்னை - நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே 698 கிலோ மீட்டர் தூரத்துக்கு இப்போதுள்ள பிரதான அகலப் பாதை வழியாகத்தான் பெரும்பாலான விரைவு ரயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

திருச்செந்தூர், தூத்துக்குடி, செங்கோட்டை, திருவனந்தபுரத்துக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த வழித்தடத்தில் நெரிசல் மிகவும் அதிகரித்துள்ளது.

2-வது அகலப் பாதை திட்டப் பணிகள்: இதையடுத்து, இந்த வழித்தடத்தில் அதிக ரயில் சேவைகளை இயக்கும் வகையில், எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை 2-வது அகலப் பாதை ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக திண்டுக்கல் - கொடைக்கானல்- மதுரை வரை 2-வது அகலப் பாதை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே (103 கிலோ மீட்டர்) |498 கோடியில் நடைபெறும் 2-வது அகலப் பாதை அமைக்கும் பணிகள் மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளன.

இதன் தொடர்ச்சியாக விழுப்புரம்- திண்டுக்கல் இடையே (263 கிலோ மீட்டர்) தூரத்துக்கு |1,300 கோடியில் 2-வது அகலப் பாதை அமைக்கும் பணிகளை, ரயில் விகாஸ் நிறுவனம் (ஆர்.வி.என்.எல்.) மேற்கொண்டுள்ளது. இந்தப் பணிகளை வரும் 30.6.2014-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனுமதியை எதிர்நோக்கும் திட்டங்கள்: இதன் தொடர்ச்சியாக மதுரை- தூத்துக்குடி இடையே 144 கிலோ மீட்டர் தூரத்துக்கு (மின் மயமாக்கல் உள்பட) |602 கோடி மதிப்பீட்டில் 2-வது அகலப் பாதை அமைப்பதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல, கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இடையே 86 கி.மீ. தூரத்துக்கு |.52.66 கோடியில் 2-வது அகலப் பாதை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு ரயில்வே வாரியத்தின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால், இந்த இரு திட்டங்களுக்கும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. மணியாச்சி-திருநெல்வேலி-நாகர்கோவில் வழித்தடத்தில் 2-வது அகலப் பாதை திட்டத்தை செயல்படுத்த மதிப்பீடுகள் தயாரிப்பதும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவற்றுக்கு வரும் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் இந்தத் திட்டங்களுக்கு அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தமிழக அரசு பங்கேற்குமா? அகலப் பாதை அமைப்பது உள்ளிட்ட ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு கர்நாடக அரசு 50 சதவீத அளவு நிதியை வழங்க முன்வந்ததையடுத்து, கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அந்த மாநிலத்துக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அண்டை மாநிலமான கேரளத்தில் 90 சதவீத இடங்களுக்கு மின்மயமாக்கப்பட்ட 2-வது அகலப் பாதைகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன.

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க மட்டுமே அரசு 50 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. தமிழகத்தில் இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 1.63 கோடி தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக இதுவரை |3,900 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதே போல, தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் சேவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 2-வது அகலப்பாதை

திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முன்வருமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.