சென்னை, பிப். 5: தேர்வுத் தாள் திருத்தும் முறையில் சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கொண்டுவந்துள்ள புதிய நடைமுறையால் அலைக்கழிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இணைப்புக் கல்லூரி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 165 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.
இந்தக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான முதல் பருவத் தேர்வுகள் அண்மையில் முடிக்கப்பட்டன. இந்தத் தேர்வுத் தாள்கள் திருத்தும் பணிகள் சனிக்கிழமை (பிப்ரவரி 5) தொடங்கி 7 நாள்களுக்கு மேல் நடைபெற உள்ளன.
தேர்வுத் தாள் திருத்தும் பணிக்காக ஒரு பாடம் தொடர்பான தேர்வுத் தாள்கள் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான பல்கலைக்கழகங்கள் இந்த வழிமுறையைத்தான் பின்பற்றி வருகின்றன. பொறியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும் இதே வழிமுறையைத்தான் இதுவரை பின்பற்றி வந்தன.
இந்த நிலையில் சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த நடைமுறையில் இப்போது மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி ஒரு பாடத்துக்கான தேர்வுத் தாள்கள் அனைத்தும் ஒரே மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதாவது, பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள 6 மாவட்ட பொறியியல் கல்லூரிகளின் ஆங்கில தேர்வுத் தாள் சென்னை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான அனைத்து தாள்களும் வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும், மெக்கானிக்கல் பாடத்துக்கான தேர்வுத் தாள் வேறு மாவட்டத்துக்கும் என ஒவ்வொரு பாடமும் வெவ்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட கல்லூரிகளில் பணிபுரியும் ஆங்கிலப் பாட ஆசிரியர்கள், தேர்வுத் தாள் திருத்தும் பணிக்காக 5 நாள்களுக்கு மேல் சென்னைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோல் மற்ற 5 மாவட்ட கல்லூரிகளைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்கள் வேலூர் மாவட்டத்துக்கும், மெக்கானிக்கல் உள்ளிட்ட வெவ்வேறு பாட ஆசிரியர்கள் தேர்வுத் தாள் திருத்தும் பணிக்காக வெவ்வேறு மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறையால் பேராசிரியர்களைக் காட்டிலும், பேராசிரியைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: பல்கலைக்கழகத்தின் புதிய நடைமுறையால் கூடுதல் அலைச்சல், பயணச் செலவு, உணவு, போக்குவரத்து சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலைக்கு பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே பழைய நடைமுறையையே பல்கலைக்கழகம் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றனர்.
இதுகுறித்து சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் சி. தங்கராஜா கூறியது:பழைய முறைப்படி ஒரு பாடம் சம்பந்தப்பட்ட தேர்வுத் தாள் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட போது, அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த தேர்வுத் தாள் திருத்தும் மையங்களின் தலைவர்கள் வெவ்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ளனர். இதில் பல்வேறு சிக்கல் எழுவதாக கல்லூரி முதல்வர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த சிக்கலை சமாளிப்பதற்காக ஒரு பாடத்தின் அனைத்து தேர்வுத் தாள்களையும் ஒரே மாவட்டத்துக்கு அனுப்பும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை அடிப்படையில்தான் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் சிக்கல்கள் இருப்பதாக கல்லூரிகள் தெரிவித்தால் மாற்றம் செய்யப்படும் என்றார். எந்த வகையான வழிமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டியது பல்கலைக்கழகம்தான். ஆனால், அந்தந்த மாவட்ட தேர்வுத் தாள் திருத்தும் மையங்களைச் சேர்ந்த தலைவர்களின் வழிமுறைக்கு ஏற்ப நடைமுறையை பல்கலைக்கழகம் மாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என பேராசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

