நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை, பிப். 6: தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலின்போது, 2006-ம் ஆண்டுக்குப் பின் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:16 am

ச. குமரன்

சென்னை, பிப். 6: தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலின்போது, 2006-ம் ஆண்டுக்குப் பின் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் வரும் மே மாதம் 10 முதல் 13-ம் தேதிக்குள் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பேரவைத் தேர்தலை நடத்த மாநிலம் முழுவதும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் தீவிரமாக பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதன்படி, வாக்காளர் கடந்த 10-ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட பின் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதில் தமிழகம் முழுவதும் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட 11.5 லட்சம் வாக்காளர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் இப்போது விநியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

 54 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைப்பு: மாநிலம் முழுவதும் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட 21,010 இடங்களில் 54,010 வாக்குச்சாவடிகள் இப்போது அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கான அலுவலர்கள் (பி.எல்.ஓ.) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேர்தல் ஆணையம் பிரத்யேகமான அடையாள அட்டைகளைத் தயாரித்து வருகிறது.

 இந்த நிலையில், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக 2006-ம் ஆண்டுக்குப் பின்னர் தயாரிக்கப்பட்ட, புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

 வடமாநிலங்களில் இருந்து... இதையடுத்து, இப்போது தேர்தல் எதுவும் நடைபெறாத குஜராத், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகத்துக்கு ஒவ்வொரு தொகுதியாக அனுப்பப்பட்டு வருகின்றன.

 இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், பெங்களூரில் உள்ள "பெல்' நிறுவனத்தால் கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பின் தயாரிக்கப்பட்டவையாகும். வரும் பேரவைத் தேர்தலுக்காக தமிழகத்துக்கு 1.35 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இத்துடன் கூடுதல் தேவைக்காக மேலும் 15 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தேவையான எண்ணிக்கையில் கட்டுப்பாட்டு சாதனம் உள்ளிட்டவையும் வழங்கப்பட உள்ளன.

 இயந்திரங்கள் வெள்ளோட்டம்: முதற்கட்டமாக இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியின் மேற்பார்வையில், காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெள்ளோட்டமாக சோதனை செய்து காண்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 இதன்படி ஒவ்வொரு தொகுதியிலும் 10 சதவீத வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சோதனை முறையில் பதிவு செய்து செயல்முறை விளக்கம் அளிக்கும் பணி திங்கள்கிழமை முதல் நடைபெற உள்ளது.

 பார்வையற்றோருக்கு... பார்வையற்ற வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்ய வசதியாக அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்களிடம், பிரெய்லீ முறையில் அச்சிடப்பட்ட, களத்தில் உள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலைப் பெற்று தாங்கள் தேர்வு செய்ய விரும்பும் வேட்பாளரின் பெயர் எண்ணை அறியலாம். இதன்பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அந்த எண்ணின் நீல நிற பொத்தானை அழுத்தி, தங்களது வாக்கைப் பதிவு செய்யலாம்.

 பழைய இயந்திரங்கள் முடக்கம்: இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாதுகாப்பு அறையில் (ஸ்ட்ராங் ரூம்) வைக்கப்பட்டுள்ள, 2006-ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட, 1.15 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், இதர உபகரணங்களையும் பாதுகாப்பாக முடக்கி வைக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் உள்ள பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, திருவண்ணாமலையில் உள்ள பாதுகாப்பு அறையில் பராமரிக்கப்பட உள்ளன.

 தேர்தலின்போது, தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படாத வகையில், பழைய இயந்திரங்களுக்குப் பதிலாக புதிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அதிரடியாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாத தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.