ரயில் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டது தமிழகம்
சென்னை,பிப்.25: இந்த நிதி ஆண்டுக்கான (2011-12) ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் தொடர்ந்து 3-வது ஆண்டாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் ர


சென்னை,பிப்.25: இந்த நிதி ஆண்டுக்கான (2011-12) ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் தொடர்ந்து 3-வது ஆண்டாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் ரயில்வே வளர்ச்சி திட்டங்களுக்கு இதுவரை இல்லாத அளவில் ரூ. 57,630 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தெற்கு ரயில்வே மண்டலத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புதிய அகலப் பாதை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ. 3,500 கோடி தேவை என ரயில்வே வாரியத்துக்கு திட்ட மதிப்பீடுகளை தெற்கு ரயில்வே அனுப்பியிருந்தது.
ஆனால், பெரும்பாலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு விவரம் (அடைப்புக்குறிக்குள் முந்தைய ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி விவரம்):
புதிய அகலப் பாதை திட்டங்கள்- ரூ. 267 கோடி.
மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்றும் திட்டங்கள்- ரூ. 437 கோடி.
2-வது அகலப் பாதை திட்டங்கள்- ரூ. 552 கோடி.
ரயில்வே லெவல் கிராசிங்குகளில் பாதுகாப்பு- ரூ. 54 கோடி.
ரயில்பாதை புதுப்பித்தல், பராமரிப்பு- ரூ. 250 கோடி.
ரயில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள்- ரூ. 33.31 கோடி.
(கடந்த ஆண்டு இதற்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது)
ரயில்வே ஊழியர்களுக்கான அடிப்படை வசதிக்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
ரயில்வே கட்டமைப்பு வசதிகளுக்கான திட்டப் பணிகளுக்கு ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் ரூ. 1,648 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இப்போது, இந்தத் திட்டப் பணிகளுக்கு ரூ. 1,256 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய அகலப் பாதை திட்டங்கள்: வரும் 2012-ம் ஆண்டு மார்ச் 31 வரை மேற்கொள்ள வேண்டிய அனுமதிக்கப்பட்ட புதிய அகலப்பாதைப் பணிகளுக்கு ரூ. 2,631 கோடி தேவை. ஆனால், இதுவரை ரூ. 496 கோடி மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்போது ரூ. 267 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அகலப் பாதை மாற்றப் பணிகள்: ஏற்கெனவே உள்ள மீட்டர் கேஜ் பாதைகளை, அகலப் பாதைகளாக மாற்றி அமைக்க ரூ. 1,771 கோடி தேவை. ஆனால், இதுவரை ரூ. 1,017 கோடி மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.437 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
2-வது அகலப் பாதை திட்டங்கள்: முக்கிய வழித்தடங்களில் நெரிசலைக் குறைக்கும் வகையில் 2, 3-வது அகலப் பாதைப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுக்கு இதுவரை ரூ. 137 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பட்ஜெட்டில் இப்போதும் குறைவாக ரூ. 552 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறைக்கப்படும் நிதி ஒதுக்கீடு: ஒட்டுமொத்தமாக வரும் 31.3.2012 வரை மேற்கொள்ளப்படவுள்ள புதிய அகலப் பாதை உள்ளிட்ட ரயில்வே கட்டமைப்பு திட்டப் பணிகளுக்கு ரூ. 4,402 கோடி தேவைப்படுகிறது. இதில் ரயில்வே இதுவரை அனுமதித்துள்ள நிதி ரூ. 1651 கோடி மட்டுமே.
இப்போது புதிய திட்டங்களுக்கும் சேர்த்து ரூ.1,256 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரயில் பாதை திட்டங்களுக்கு 50 சதவீத நிதியை அளிக்க கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் முன்வந்துள்ளதையடுத்து அந்த மாநிலங்களுக்கான திட்டங்களுக்கு இப்போதைய ரயில்வே பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் கடந்த பல ஆண்டுகளாக இதில் பாராமுகமாக உள்ளது.
தமிழகம் ஏமாற்றம்: இந்த நிலையில், ஆவடி- கூடுவாஞ்சேரி- ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் வழியாக இருங்காட்டுக்கோட்டைக்கு ரூ. 175 கோடி மதிப்பீட்டில் 53 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய அகலப் பாதை அமைக்கும் திட்டம் குறித்த கருத்துருவை தெற்கு ரயில்வே அனுப்பியது. இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு 50 சதவீத நிதியை அளிக்கவும் முன்வந்தது.
இதையடுத்து, இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக கூடுவாஞ்சேரி- ஸ்ரீபெரும்புதூர் இடையே புதிய அகலப் பாதை அமைக்கும் திட்டம் குறித்து மீண்டும் சர்வே நடத்த மட்டுமே இப்போது ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை- நாகர்கோவில் வழித்தடத்தில் மின்மயமாக்கல், 2-வது அகலப் பாதை திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
தெற்கு ரயில்வே பரிந்துரைத்த 10 அகலப் பாதை திட்டங்கள் மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பெரம்பூர் ஐ.சி.எப். ஆலை 2-வது பிரிவு விரிவாக்கம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும் நிறைவேற்றவில்லை. இந்தத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...