வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பரிசீலிக்கப்படாத விண்ணப்பங்கள்; விரயமாகும் பல கோடி ரூபாய்

சென்னை, ஜன. 8: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான (வி.ஏ.ஓ.) விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்படவில்லை. இதனால், விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை அனுப்ப தேர்வாணையம் முடிவு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:50 am

தினமணி

சென்னை, ஜன. 8: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான (வி.ஏ.ஓ.) விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்படவில்லை. இதனால், விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை அனுப்ப தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

 கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு தமிழகத்தில் 13 லட்சம் பேர் விண்ணப்பித்து

 உள்ளனர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு படித்தாலே போதும். இதனால், ஒவ்வொரு ஆண்டும் வி.ஏ.ஓ. தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் போதெல்லாம் இளைஞர்களிடம் அதிக ஆர்வம் இருக்கும்.

 இந்த ஆண்டில் மொத்தம் 3 ஆயிரத்து 477 காலியிடங்களுக்கு பிப்ரவரி 20-ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 பிரிவுகள் ஒதுக்கப்படவில்லை: தேர்வில் பங்கேற்க 13 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அவற்றை பரிசீலிக்க அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 60 பிரிவுகளை உருவாக்கிக் கொள்ள தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், இதுவரை ஒரு பிரிவுகூட ஒதுக்கப்படவில்லை.

 அலுவலக உதவியாளர்கள், அதற்குக் கீழ் நிலையிலுள்ள பணியாளர்களைக் கொண்டு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், விண்ணப்பப் படிவங்களின் பரிசீலனை முறையாக நடைபெறவில்லை என புகார் எழுந்துள்ளது.

 விண்ணப்பங்கள் ஸ்கேன்: 13 லட்சம் விண்ணப்பங்களும் ஸ்கேன் எடுக்கப்பட்டு உரியவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

 ஆனால், அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் முறையானதுதானா? தகுதி வாய்ந்த நபர்கள்தான் தேர்வுகளை எழுத உள்ளார்களா? என்ற விவரங்களைப் பார்க்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இதனால், தவறான விண்ணப்பங்கள், உரிய வயதை எட்டாதவர்களும் வி.ஏ.ஓ. தேர்வு எழுதும் சூழல் உருவாகியுள்ளது.

 செலவு அதிகரிக்கும்: வி.ஏ.ஓ. தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை அனுப்புவது, தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களுக்கு மதிப்பூதியம் என ஒரு விண்ணப்பதாரர் தேர்வு எழுதி முடிக்கும்போது அவருக்காக தேர்வாணையம் செலவிடும் தொகை ரூ. 50 ஆகும். இப்போது, 13 லட்சம் பேர் வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

 அதில், 10-ம் வகுப்பு முடித்தவர்கள்கூட விண்ணப்பிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், தேர்வாணையத்தின் விதிப்படி 10-ம் வகுப்பு முடித்து 21-வயது நிரம்பியவர்கள் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 அப்படிப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. ஏனென்றால் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க அதிகாரிகளோ, பிரிவுகளோ ஏற்படுத்தப்படவில்லை.

 13 லட்சம் பேரும் தேர்வு எழுதினால் அதற்காக அரசுப் பணியாளர் தேர்வாணையம் செலவிடும் தொகை ரூ. 65 கோடியாகும். ஆனால், அதில் சில லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தால் தேர்வாணையத்துக்கு செலவு மிஞ்சி இருக்கும். அதைச் செய்ய ஆணையம் தவறிவிட்டதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 மேலும், தகுதிவாய்ந்த தேர்வர்கள் தேர்வு எழுதும்போது போட்டி ஆரோக்கியமானதாக இருக்கும். தேர்வுக்கூடங்கள் கிடைப்பதும் எளிதாக இருக்கும். அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தேர்வு நடத்தும்போது அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்த திறமையான ஆசிரியர்களே தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள்.

 தேர்வில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்காது. ஆனால், விண்ணப்பதாரர்கள் அதிகமாக இருந்து, தேர்வுக்கூடங்களுக்காக தனியார் கல்லூரிகளையும் தேர்ந்தெடுத்தால் அது விபரீதமாகும் எனச் சுட்டிக் காட்டுகின்றன தேர்வாணைய வட்டாரங்கள்.

 தனியார் கல்லூரிகளில் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றும் திறன் குறைந்த ஆசியர்களே இருப்பார்கள். அவர்களை தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களாக நியமிப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே, வி.ஏ.ஓ. தேர்வு விண்ணப்பங்களின் பரிசீலனை உரிய முறையில் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.