மேடாகும் தெருக்கள்: பள்ளத்தில் வீடுகள் பரிதவிக்கும் மக்கள்

மதுரை: தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் ஆட்சியாளர்களின் சாதனை எனக் கூறப்பட்ட வளர்ச்சிப் பணிகளில் ஒன்று மக்களைத் தூங்காத் துயரத்துக்கு ஆளாக்கி வருகிறது. தெருக்களில் போடப்படும் கான்
மேடாகும் தெருக்கள்: பள்ளத்தில் வீடுகள் பரிதவிக்கும் மக்கள்
Updated on
2 min read

மதுரை: தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் ஆட்சியாளர்களின் சாதனை எனக் கூறப்பட்ட வளர்ச்சிப் பணிகளில் ஒன்று மக்களைத் தூங்காத் துயரத்துக்கு ஆளாக்கி வருகிறது.

தெருக்களில் போடப்படும் கான்கிரீட் சாலைகளால் அவை ஆண்டுக்கு ஆண்டு மேடாகி இருபுறமும் உள்ள வீடுகள் பள்ளத்துக்குள் சென்று வருகின்றன. இதனால் மழைநீரும், கழிவுநீரும் வீட்டுக்குள் தேங்குவதால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் புறநகர் பகுதிகளில் குடிசைகள் உள்ள இடங்களில் கழிவுநீரும், மழைக் காலங்களில் தண்ணீரும் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதைத் தடுக்க தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்கும் திட்டம் முதலில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தொடங்கப்பட்டது. அதை மக்கள் வரவேற்றனர். பின்னர் அந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ.10 லட்சம் வரையில் தெருக்களில் கான்கிரீட் சாலை அமைக்க ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. சேறும், சகதியுமாகக் காட்சி அளித்த தெருக்களை கான்கிரீட் சாலைகளாக பார்த்த மக்கள் ஆட்சியாளர்களைப் பாராட்டத் தொடங்கினர். எனவே "நமக்கு நாமே' திட்டத்திலும் தெருக்களில் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டன.

கிராமப்புறங்களில் வீட்டுக்கு முன்பு பளிச்சிடும் கான்கிரீட் சாலைகளில், அறுவடை செய்த நெல், மிளகாய் வத்தல், கம்பு, சோளம், கேப்பை போன்ற விவசாய

விளைபொருள்களைக் காயப்போடும் களமாக மக்கள் பயன்படுத்தி ஆனந்தம் அடைந்தனர். காலையில் எழுந்த உடன் மண் தரையில் தண்ணீர் தெளித்து கோலம் போடுவதற்குப் பதிலாக கான்கிரீட் முற்றத்தில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு அழகு பார்த்தனர். இரவில் வீட்டு முற்றத்தில் கான்கிரீட் தரையில் படுத்து தூங்கவும் செய்கின்றனர்.

2001-ல் ஆட்சிக்கு வந்த அதிமுக தெருக்களில் கான்கிரீட் சாலை அமைக்கும் இந்த திட்டத்தை ஆய்வு செய்தபோது அதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகப்பட்டது. முந்தைய ஆட்சியாளர்களுக்கு சில சிமெண்ட் ஆலைகளில் இருந்த பங்கை கருத்தில் கொண்டு அதிகமான சிமெண்ட் விற்பனைக்கு வழிவகை செய்யவே இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கருதியது. ஆதலால், எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து நிறைவேற்றப்பட வேண்டிய

அத்தியாவசியப் பணிகளின் பட்டியலில் இருந்து கான்கிரீட் சாலை திட்டத்தை நீக்கியது. எனினும், இதர திட்டங்களின் கீழ் தொடர்ந்து தெருக்களில் கான்கிரீட் சாலைகள் அமைப்பது மட்டும் நிறுத்தப்படவில்லை. இன்று வரை தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இன்று மத்திய, மாநில உள்ளூர் மேம்பாட்டுத் திட்டங்களில் 20 முதல் 30 சதவீத நிதி கான்கிரீட் சாலை அமைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வீட்டுக்குள் தண்ணீர்: கடந்த 15 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டு வரும் இந்த திட்டத்தால் சில இடங்களில் மூன்று, நான்கு முறை கான்கிரீட் சாலைகள் போடப்பட்டுள்ளன. இதனால் சாலைகள் ஒவ்வொரு முறையும் மேடாகிக் கொண்டே வருகின்றன. மண் சாலையாக இருந்தால் அவை காற்று, மழையாலோ அல்லது இயற்கையாகவோ கரைந்துவிடும். புதிய சாலை அமைக்கும் போது உயரம் கூடாது. கான்கிரீட் சாலை என்பதால் அவை எளிதில் கரையாது. ஆனாலும், ஆட்சியாளர்கள் "சில காரணங்களுக்காக' நன்றாக இருக்கும் சாலைக்கு மேலேயே புதிய சாலையை அமைப்பதும் உண்டு. அதனால் தெருக்கள் ஆண்டுக்கு ஆண்டு மேடாகி வருகின்றன.

ஒரு இடத்தில் கான்கிரீட் சாலை அமைத்தால் 10 ஆண்டுகளுக்கு அதில் மீண்டும் சாலை போடக் கூடாது. தரம் குறைவாக இருந்து சேதமடைந்து விட்டால் அதைப் புதுப்பிக்கலாம். அதுவும் மேல்மட்டத்தில் மட்டும் ஒரு அடுக்கு புதுப்பிக்க வேண்டும் என்கின்றனர் ஊரக வளர்ச்சி முகமையின் அதிகாரிகள். ஆனால் இந்த விதிமுறை அமல்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை.

இவ்வாறு தெருக்கள் கான்கிரீட் மேடுகளாக மாறி வருவதால் இருபுறமும் உள்ள வீடுகள் பள்ளத்துக்குள் அமைந்து விடுகின்றன. இதனால் மழை நீர் சாலையில் பாய்ந்தோடுவதற்குப் பதிலாக வீட்டுக்குள் பாய்ந்து வருகிறது. வீட்டுக் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே தேங்கி நிற்கிறது. கழிவு நீரோடை இல்லாத இடங்களில் கழிப்பறை தண்ணீரும் வெளியேற முடியாத நிலை உள்ளது. வீட்டுக்குள்ளும், வீட்டைச் சுற்றியும் கழிவுநீர் தேங்குவதால் கொசுத் தொல்லை அதிகரிக்கிறது என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

""மதுரை பெத்தானியாபுரத்தின் பழைய பெயர் மேட்டுத் தெரு. இன்று அது

பள்ளத் தெருவாகி விட்டது. அண்ணா பிரதான வீதி, காமராஜ் தெரு உள்ளிட்ட இடங்களில் கான்கிரீட் சாலைகளால் வீடுகள் பள்ளத்தில் உள்ளன. மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது'' என்றார் ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ம.மரியசிலுவை.

இந்த பாதிப்புகளை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் சொந்த வீடாக இருந்தால் வாடகைக்குக் கொடுத்துவிட்டு வேறு இடத்துக்குச் சென்று விடலாம்

என்றால் இப்படிப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வாடகைக்கு வரவும்

தயங்குகின்றனர். அப்படியே சிலர் வாடகைக்கு வந்தாலும் குறைவான வாடகையே அளிக்கின்றனர். வீட்டை விற்று விடலாம் என்றால் வாங்குவதற்கு ஆள் இல்லை. அப்படியே வாங்கினாலும் குறைவான விலைக்கே விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் கடனை வாங்கி வீடு கட்டிவிட்டு திண்டாடி வருகிறோம் என்கின்றர் பாதிக்கப்பட்ட மக்கள்.

அலட்சியப்போக்கு: கான்கிரீட் சாலைகளால் தெரு மேடாகி, வீடுகள் பள்ளமாகி விடும் நிலை இருக்கும் இடங்களில் தெருக்களைப் பள்ளமாகத் தோண்டி மண்ணை அப்புறப்படுத்திவிட்டு அந்த பள்ளத்தில் கான்கிரீட் சாலைகளை அமைக்க வேண்டும். மேலும், வீட்டு கழிவு நீரோ அல்லது மழை நீரே வெளியேற முடியாத இடங்களில் தெருவின் இருபுறமும் கழிவு நீரோடை அமைத்துவிட்டு கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என்பது விதிமுறை. உள்ளாட்சிகளின் நிதிநிலை மோசமாக இருக்கும் இடங்களில் அதன்படி செய்ய முடிவதில்லை என்பது அதிகாரிகள் கருத்து.

ஆக மொத்தத்தில் கான்கிரீட் சாலைகள் இப்போது மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com