அடிப்படை வசதிகளற்ற அரியலூர் ரயில் நிலையம்

அரியலூர் : திருச்சி - சென்னை ரயில் வழித்தடத்தில் மையப் பகுதியாக இருந்து, பல மாவட்ட மக்களை இணைக்கும் அரியலூர் ரயில் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வ
அடிப்படை வசதிகளற்ற அரியலூர் ரயில் நிலையம்
Updated on
2 min read

அரியலூர் : திருச்சி - சென்னை ரயில் வழித்தடத்தில் மையப் பகுதியாக இருந்து, பல மாவட்ட மக்களை இணைக்கும் அரியலூர் ரயில் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

 தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி வழியாக சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கும், இதர பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் அரியலூர் ரயில் நிலையத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். இந்த ரயில் வழித்தடத்தில் விரைவு ரயில்கள், பயணிகள், சரக்கு ரயில்கள் என 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன.

 இதுமட்டுமல்லாமல், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, பெரம்பலூர் போன்ற பகுதி மக்களின் மையப் பகுதியாக விளங்கி வருவதும் அரியலூர் ரயில் நிலையம்தான். ஆனால், இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

 பயணிகள் அமருவதற்காக நடைமேடைகளை ஒட்டி மார்பிள் கல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதியைத் தவிர, அரியலூர் ரயில் நிலையத்தில் வேறு எந்த வசதியையும் குறிப்பிட்டுக் கூற முடியாது. ரயில்வே உணவகத்தையொட்டி, மரத்தினால் செய்யப்பட்ட இருக்கைகள் சில அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் மேற்கூரை பகுதி சிறிய மழை வந்தாலே தாங்கக் கூடியதாக இல்லை.

 அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியம்: தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாத பயணச் சீட்டுகளைப் பெறுவதற்காக, கவுன்ட்டர் ஒன்றுதான் உள்ளது. காலை நேரங்களில் பல்லவன், வைகை போன்ற விரைவு ரயில்களில் செல்வதற்காக பயணச் சீட்டு பெற வந்தால், நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பலரும் ரயிலைத் தவறவிட்டு விடுகின்றனர். எனவே, மேலும் ஒரு கவுன்ட்டரை தொடங்க வேண்டும். ரயில் வரும் நேரம் குறித்த விவரத்தை அறிய தொடர்பு கொண்டால் தொலைபேசியில் பதில் சொல்ல ஆள்கள் இருப்பதில்லை. இல்லாவிட்டால், தொலைபேசியை எவரும் எடுப்பதில்லை. இதனால், பலரும் ரயில்களின் வருகை நேரம் குறித்த விவரத்தை அறிய முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.

 ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் குறிப்பாக, பெண்கள் இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டும் என்றால் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும். இருக்கிற ஒரு கழிப்பறையின் பயன்பாடும் குறிப்பிட்டுக் கூறும் வகையில் இல்லை.

 இதனால், பயணிகளுக்காக கட்டணக் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். ஏற்கெனவே, ரயில் நிலையத்தின் தென்பகுதியில் பயன்படுத்தப்படாமல் உள்ள கழிப்பறையைப் பராமரிப்பு செய்து, அந்தக் கழிப்பறையை பயணிகள் மீண்டும் பயன்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 போதிய குடிநீர் வசதி இல்லை: ரயில் நிலையத்தில் போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால், திருச்சி வழியாக மற்ற பகுதிகளுக்கோ, திருச்சியிலிருந்து சென்னைக்கோ செல்லும் ரயில்கள் அரியலூர் ரயில் நிலையத்தில் நின்றால், ரயில் பயணிகள் அவசரத்துக்கு குடிநீர் பிடிப்பதற்கு பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

 குடிநீர்க் குழாய்கள் ஆங்காங்கே இருந்தும் அதில் ஓரிரு குழாய்களைத் தவிர, மற்ற குழாய்கள் எல்லாம் பயன் இல்லாத நிலையில்தான் உள்ளன.

 எனவே, பயனற்ற நிலையில் உள்ள குழாய்களைச் சரி செய்து, அனைத்துக் குழாய்களிலும் குடிநீர் வருவதற்குரிய நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பது ரயில் பயணிகள் பெரும்பாலானோரின் கோரிக்கையாக தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால், ரயில்வே நிர்வாகம் இதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

 பேருந்து பயணத்தைக் காட்டிலும் எளிதாகவும், கட்டணங்கள் குறைவாகவும் இருப்பதால்தான் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 இந்நிலையில், ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளைச் செய்து தருவதும், மேம்படுத்தித் தருவதும் ரயில்வே நிர்வாகத்தின் பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட ரயில் நிலையங்களைத் தவிர, மற்ற ரயில் நிலையங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் ரயில்வே நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவது வருத்தமளிக்கிறது என்கின்றனர் ரயில் பயணிகள்.

 மாவட்டத் தலைநகரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் இருப்பதற்கான காரணம் தெரியவில்லை. அரியலூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com