ராமநாதபுரம், மார்ச் 8: ராமநாதபுரம் அருகேயுள்ள முத்துப்பேட்டை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முட்டைத் திருவிழாவை முன்னிட்டு, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகளை கிறிஸ்தவர்கள் தங்களது உறவினர்கள் தலையில் அடித்து உடைத்துக் கொண்டாடினர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது முத்துப்பேட்டை கிராமம். இக்கிராமத்தின் கடற்கரைப் பகுதியில் முத்துக் குளிக்கும் தொழில் அதிகமாக நடந்து வந்துள்ளது. எனவே, இக்கிராமத்துக்கு முத்துப்பேட்டை என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு தரப்பினரும் வாழ்ந்து வரும் இக்கிராமத்தில், ஆண்டுக்கு ஒரு நாள் கிறிஸ்தவர்கள் மட்டும் தங்களது முறை மாமன் அல்லது மைத்துனர்கள், மைத்துனிகளை தேடிச் சென்று, அவர்களது தலையில் முட்டைகளை உடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
ஒவ்வொருவரும் அவர்களது வசதிக்கு ஏற்றவாறு குறைந்தது 5 முதல் 25 முட்டைகளை வாங்கி வைத்துக்கொண்டு, தங்களது முறைப் பெண்ணையோ அல்லது மைத்துனரையோ தேடிச் சென்று, துரத்திப் பிடித்து அவர்களது தலையில் முட்டைகளை உடைக்கின்றனர். பதிலுக்கு அவர்களும் முட்டைகளால் தாக்குகின்றனர். இதில், இரு தரப்பினருமே கோபமடைவதில்லை.
சுமார் 400-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடியிருப்புகள் உள்ள இக்கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகளை உடைக்கும் விநோத நிகழ்ச்சி காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது. அதன்பிறகு, கடற்கரைக்குச் சென்று குளித்துவிட்டு, தொடர்ந்து 40 நாள் துக்க விரதத்தை இக்கிராம கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர்.
இது குறித்து, அக்கிராமத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் சேகர் கூறியது:
இயேசு கிறிஸ்து உயிரிழந்த நாளை புனித வெள்ளியாகக் கருதி, அந்த நாளுக்கு முன்னர் வரும் 40 நாள்களையும் துக்க நாளாகப் பாவித்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விரதம் புதன்கிழமை (இன்று) தொடங்குவதால், அதனை சாம்பல் புதன் என்கிறோம். சாம்பல் புதனுக்கு முதல் நாள் வரும் செவ்வாய்க்கிழமை அன்று கிராமத்தில் முறை மாமன்கள், மைத்துனர்கள், மைத்துனிகளை தேடிப்பிடித்து, அவர்களது தலையில் முட்டைகளை உடைப்பது வழக்கம்.
பிடிக்காதவர்களாக இருந்தாலும் தலையில் முட்டைகளை உடைக்கும்போது கோபப்படமாட்டர். இதில், ஒரு சிலர் மட்டும் இதற்குப் பயந்து வெளியூர்களுக்குப் போய் விடுவதுண்டு.
இதே நாளில், கன்னியாகுமரியில் கிறிஸ்தவர்கள் கலர்ப் பொடி கலந்த தண்ணீரைத் தெளிப்பர். முத்துப்பேட்டையில் மட்டும்தான் முட்டைகளை உடைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்கிறோம்.
மனித உறவுகளை வலுப்படுத்தி, மெருகேற்றிக் கொள்ளவும், பாவங்கள் செய்யாமல் இருக்கவும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.