/

ஏழைகளின் பரம சொர்க்கம் பழவேற்காடு

பொன்னேரி, மே 4: கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாட பள்ளி மாணவர்களுடன் பெற்றோர்கள் ஏழைகளின் சுற்றுலாத்தலமாக விளங்கும் பழவேற்காட்டில் அதிகளவில் குவிந்து வருகின்றனர். சித்திரை மாத வெயிலில் இருந்து தப்பிக்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:25 pm

எம்.சுந்தரமூா்த்தி

பொன்னேரி, மே 4: கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாட பள்ளி மாணவர்களுடன் பெற்றோர்கள் ஏழைகளின் சுற்றுலாத்தலமாக விளங்கும் பழவேற்காட்டில் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

சித்திரை மாத வெயிலில் இருந்து தப்பிக்க குளிர் பிரதேங்களுக்கு பொதுமக்கள் சுற்றுலாச் செல்வர். வசதிபடைத்தோர் ஊட்டி, கொடைக்கானல், கோவா போன்ற ஊர்களுக்குச் செல்வர். வசதி இல்லாதவர்கள் தங்கள் பகுதிக்கு அருகிலேயே உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வருவர்.

அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்காடுக்கு அதிகளவில் சென்று வருகின்றனர். சென்னையில் இருந்து 55 கி.மீ. தொலைவிலுள்ள பழவேற்காடு என்றதுமே சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவுக்கு வருவது அங்குள்ள ஏரியும், படகு சவாரியும்தான்.

ஆனால் பழமை வாய்ந்த நகரான பழவேற்காட்டில் பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா இடங்கள் இருப்பது பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளுக்கு தெரிவதில்லை.

பழவேற்காட்டின் வரலாறு..! கடற்கரையோர கிராமமான பழவேற்காடு 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாகும். பழவேற்காட்டை 15-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரை டச்சுக்காரர்கள் தங்களது ஆளுமையின் கீழ் வைத்திருந்தனர். டச்சுக்காரர்கள் ஆளுமையின் போது இறந்தவர்களுக்கு சிறியதும் பெரியதுமாக 50-க்கும் மேற்பட்ட கல்லறைகளை அமைத்துள்ளனர். கல்லறைகள் மீது அழகிய கலை நயத்துடன் கூடிய சிற்பங்கள் மற்றும் பிறப்பு, இறப்பு ஆகிய தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

400 ஆண்டுகள் பழமைவாய்ந்த டச்சுக் கல்லறைத் தோட்டத்தை ஒருசில சுற்றுலாப் பயணிகளே கண்டு செல்கின்றனர். அதேபோன்று 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முகமதியர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியிலிருந்து விழும் நிழல் கடிகாரம், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மகிமை மாதா ஆலயம் அத்துடன் அங்குள்ள பறவைகள் சரணாலயம், கலங்கரை விளக்கம், ஏரியும் கடலும் இணையும் அழகிய முகத்துவாரப் பகுதி ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம்.

மேலும் 15 கி.மீ. நீளமுள்ள பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரி இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய ஏரியாக விளங்குகிறது. இங்குள்ள ஏரியில் இயற்கை அழகை ரசித்தபடி படகு சவாரி செய்வதென்பது இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்தமான ஒன்றாகும்.

மேலும் மெரினா கடற்கரையில் எப்பொழுதும் கேட்கும் சுற்றுலாப் பயணிகளின் இரைச்சல் சத்தத்தைக் கேட்டவர்கள், இங்குள்ள கடற்கரையோரத்தில் அமைதியாக அமர்ந்து நீண்ட நேரம் கடல் அலைகளை ரசிப்பர். சனி,ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா வந்து செல்வர். இப்பொழுது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.

 எப்படி செல்வது..? பழவேற்காடுக்கு பொன்னேரியில் இருந்து விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழகம் சார்பில் 30 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. அதேபோன்று மீஞ்சூர், திருவொற்றியூர், செங்குன்றம், மூலக்கடை, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.