ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

என்ன வேண்டும் எங்களுக்கு? பொதுப்பணித்துறை- நீர்வளம்

நகரங்களில் தண்ணீருக்கு விலை கொடுப்பதை ஒரு காலத்தில் கிராமங்களில் கேலி பேசுவார்கள். இப்போதோ தண்ணீர் விற்பனை பல ஊர்களில் குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறைக்கு மக்கள் தொகைப் பெருக்கம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:35 am

கே.பாலசுப்பிரமணியன்

நகரங்களில் தண்ணீருக்கு விலை கொடுப்பதை ஒரு காலத்தில் கிராமங்களில் கேலி பேசுவார்கள். இப்போதோ தண்ணீர் விற்பனை பல ஊர்களில் குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறைக்கு மக்கள் தொகைப் பெருக்கம் ஒரு காரணம் என்றாலும், நீர் வள ஆதார அமைப்புகள் தொடர்ந்து சுரண்டப்படுவதும், அதைப் பற்றி அரசு கவலைப்படாமல் இருப்பதும்தான் பிரச்னைக்கே காரணம் என்கின்றனர் மாநிலத்தின் நலனை விரும்பும் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.

 தமிழகத்தில் 75 பெரிய அணைகள், 7 சிறிய அணைகள் உள்ளன. அவற்றின் கொள்ளளவு 233.2 டி.எம்.சி. ஆகும். மேலும், மாநிலத்திலுள்ள 39 ஆயிரத்து 202 ஏரிகளில் 13 ஆயிரத்து 710 ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

 பயிரிடப்படும் நிலங்களின் மொத்தப் பரப்பு சுமார் 51.26 லட்சம் ஹெக்டேராக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. அதில், கால்வாய்கள் மூலம் 7.82 லட்சம் ஹெக்டேர், ஏரிகள் வழியாக 5.31 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

 விவசாயிகளுக்கு மோட்டார்களை இயக்க மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேசமயம், கால்வாய்கள், ஏரிகள் மூலம் நீரைப் பெறும் விவசாயிகள் அதன் முக்கியத்துவத்தை உணர்வதில்லை என்று புகார் கூறப்படுகிறது. அவர்களுக்கு இத்தனை ஏக்கருக்கு இவ்வளவு தண்ணீர்தான் தரமுடியும் என்று அரசு தெளிவான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். விவசாயத்துக்கு தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். இஷ்டம் போல் தண்ணீரை உறிஞ்சுவதைத் தடுக்க முதல் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

 ஏரிகள்; குளங்கள்: ஏரிகளில் மணல் எடுப்பதற்கு அரசு அங்கீகாரம் அளித்திருந்தாலும் அதை எடுக்கக் கூடிய அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 1 மீட்டர் அளவுக்கு மணல் எடுக்கலாம் என அனுமதி அளித்தால் 1.5 மீட்டருக்கும் அதிகமான மணலை எடுக்கின்றனர். ஏரிகளில் அதிக அளவு மணலை அள்ளும் போது அதன் தரைமட்ட அளவு இயல்பான நிலையை விட "மைனஸ்' என்ற நிலைக்குச் செல்கிறது.

 தரை மட்ட அளவு கீழே செல்லச் செல்ல தண்ணீர் தேங்கும் அளவும் குறைகிறது. எதிர்காலத்திய தண்ணீர் தேவையைக் கருத்தில் கொண்டாவது மணல் அள்ளுவதை வரைமுறைப்படுத்துவது அரசின் கடமையாகும்.

 மழை பெய்யும் போது சில ஏரிகளில் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது சில ஏரிகள் நிரம்பும். ஏரிகள் தூர்வாரப்படாத காரணத்தால் இதுபோலத் தண்ணீர் சேகரிக்கப்படும் அளவு குறைந்து விடுகிறது. திண்டுக்கல், பழனி உள்ளிட்ட இடங்களில் 250-க்கும் அதிகமான ஏரிகள் உள்ளன. மழை பெய்யும் போது நிரம்பும் அந்த ஏரிகள் இதுவரை தூர்வாரப்படாத காரணத்தால் தண்ணீரை பெரிய அளவுக்கு சேகரிக்க முடியவில்லை.

 இதே நிலைமைதான் மாநிலத்தில் பெருவாரியான மாவட்டங்களிலும் என்று தெரிகிறது. ஏரிகளில் நீர் தேங்கும் பகுதிகளில் ஆக்கிரமிப்பு, மரங்கள் வளர்ப்பு ஆகிய காரணங்களால், நீர் தேங்கும் அளவு பாதிக்கு மேல் குறைந்துவிட்டது. பல ஏரிகள் 2 போகம் விளையக்கூடிய ஆயக்கட்டு நிலங்களைக் கொண்டதாக இருந்தாலும், ஒரு போகத்துக்கே தண்ணீர் போதாது என்ற நிலைதான் உள்ளது.

 எனவே, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அரசு அகற்ற வேண்டும். அதிக நீரைத் தேக்கினால் உணவு உற்பத்தி பெருகும், விலைவாசி குறையும், நிலத்தடி நீர் சேமிப்பு அதிகமாகும்.

 உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் நீர்வள நில வளத் திட்டம் போன்றவற்றால் பெரிய அளவுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை என்கின்றனர் பொதுப்பணித் துறை அதிகாரிகள். திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏரிகளின் கரையை உயர்த்துவது, பலப்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 55 முதல் 65 சதவீதம் அளவுக்கு மட்டுமே அதனுடைய நிதிகள் முழுமையாக பயன்படுத்தப்பட்டன.

 ஆனால், ஏரிகள் அதிகமில்லாத இடங்களில் அந்த நிதி வேறு பயன்பாடுகளுக்கு மாற்றப்பட்டன. இந்தத் திட்டங்களால் 20 சதவீத அளவு வரை மட்டுமே பயன் கிடைத்ததாக பொதுப்பணி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அணைகள் கட்டுவது சாத்தியமில்லை: அணைகள் கட்டுவது என்பது இனிமேல் சாத்தியமில்லை என்கின்றனர் பொதுப்பணித் துறையினர். பெரிய அளவுக்கு அணைகளைக் கட்டி நீரைத் தேக்குவது இயலாத காரியம்; அதற்குப் பதிலாக ஆங்காங்கே தடுப்பணைகளைக் கட்டி நீரைத் தேக்கி பாசனத்துக்கும், மக்களின் பயன்பாட்டுக்கும் அளிப்பதுதான் புத்திசாலித்தனம்.

 அணைகளில் தரைமட்ட அளவை பராமரிப்பது மிகவும் முக்கியம். மேட்டூர் போன்ற அணைகளில் 20 முதல் 25 அடிவரை சகதியாக இருக்கும். அதில் 96 டி.எம்.சி. அளவு வரை மட்டுமே நீரைத் தேக்க முடியும் என்ற நிலை உள்ளது. தரைமட்ட அளவு சீராக இருக்குமானால் கூடுதல் அளவு நீரைத் தேக்க முடியும். அணைகளைப் பராமரித்து அவற்றை சீர்படுத்துவது அவசியம்.

 ஆனால், கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் அணை புனரமைத்தல், மேம்பாட்டுத் திட்டங்களால் பெரிய அளவுக்கு பயன் எட்டப்படவில்லை. அணைகளில் இருந்து பாசனத்துக்கு நீர் செல்லும் கால்வாய்களில் நீர் கசிவதால், கடைமடைப் பகுதிகளுக்கு நீர் சென்று சேருவதில்லை. எனவே கால்வாய்களை சீரமைத்து, சிமென்ட் பூச்சு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

 அண்டை மாநிலங்களுடன் பிரச்னைகள்: காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகமும், முல்லைப் பெரியாறு அணையில் கேரளமும், பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் ஆந்திரமும் தமிழகத்துடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. இந்தப் பிரச்னைகளை சமரசமாகவோ நீதிமன்றத் தீர்ப்பின் மூலமோ விரைந்து தீர்த்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் கடந்த கால் நூற்றாண்டுக்கும்மேல் எந்த அரசும் முனைப்புக் காட்டவில்லை என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று.

 மாநிலத்தில் மின்பற்றாக்குறை என்பது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தீர்க்கப்படாத பிரச்னையாக நீடிக்கும் என்று கருதப்படுகிறது.

 அணுமின் நிலையங்கள், காற்றாலைகள் போன்ற அதிகம் செலவு பிடிக்கும் திட்டங்களைக் காட்டிலும் நீர் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் செலவு மிகக் குறைவாகும். ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 5 முதல் 10 பைசா மட்டுமே செலவாகும் என மதிப்பிடுகின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.

 ஆனால், அதனுடைய உற்பத்தியை அதிகப்படுத்த அரசால் பெரிய அளவுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.

 பாண்டியாறு-புன்னம்புழா நீர்மின் திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக 100 மெகாவாட் மின்சாரமும், அடுத்த கட்டமாக 150 மெகாவாட் மின்சாரத்தையும் தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டது. மத்திய அரசு ஒப்புதல் அளித்தாலும், அண்டை மாநிலமான கேரளம் இந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. காரணம், பாண்டியாறு-புன்னம்புழா என்பது மேற்கு நோக்கி ஓடும் இரு மாநில நதியாகும்.

 இதேபோன்று, பம்பா-அச்சன்கோயில் ஆறுகளின் மிகை நீரை தமிழகத்துக்கு திருப்பி விடுவதன் மூலம் தென் மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்கலாம். மேலும் சுமார் 500 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும். இந்தத் திட்டத்தையே கைவிடுவதாக கேரள அரசு கூறியுள்ளது. மத்திய அரசு மூலம் வற்புறுத்த தமிழகம் தொடர்ந்து முயன்று வருகிறது.

 பொதுப்பணித் துறை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. கட்டடங்கள், நீர்வளத் துறை. முதல்வர் கருணாநிதி தனது வசம் வைத்திருந்த பொதுப்பணித் துறையில் கட்டடங்கள் பிரிவுக்கு அதிக கவனத்தை அளித்து தலைமைச் செயலக கட்டடத்துக்கு உயிர் கொடுத்தார்.

 ஆனால், வேளாண் உற்பத்திக்கு உயிர் நாடியாக விளங்கும் நீர் வளத் துறை மீது கவனம் செலுத்தப்படவே இல்லை.

 ÷பொதுப் பணித் துறை என்பது அதிக பணிகளைக் கொண்டது. எனவே இதில் இப்போது உள்ள பாசனத் துறையை தனியாகப் பிரித்து, ஓர் அமைச்சகத்தை உருவாக்கி, நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என அனுபவம் மிக்க அதிகாரிகள் யோசனை தெரிவிக்கின்றனர்.

 அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவை விரைவில் தீர்க்கப்பட வேண்டும். இவை தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாய, மின்சார, கிராமப்புற மேம்பாடு நலன் கருதி, அடுத்து பதவி ஏற்க இருக்கும் அரசு செய்ய வேண்டிய கடமைகளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.