சென்னை, அக். 9: அரசு பஸ்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-டிக்கெட் முன்பதிவு முறையில், அரசு உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரயில்களில் உள்ளதுபோல, அரசு பஸ்களிலும் இ-டிக்கெட் முன்பதிவு முறையை தமிழக அரசு கடந்த திங்கள்கிழமை (அக்டோபர் 3) அறிமுகம் செய்தது.
இந்தப் புதிய முன்பதிவு திட்டத்தில், பஸ்ஸில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, 11, 12 ஆகிய எண்கள் உள்ள இருக்கைகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தனியாக பயணிக்கும் பெண்கள் இந்த இருக்கைகளைத் தேர்வு செய்தால், அவர்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும்.
அதே நேரத்தில, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கப்படாதது, அவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், முன்பதிவில் பஸ்ஸின் பின் இருக்கை கிடைக்கும்பட்சத்தில், இருக்கைகளுக்கு இடைப்பட்ட சிறிய இடைவெளியில் கால் ஊனமுற்ற மற்றும் கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நடந்து செல்வது கடினம் என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலச் செயலர் எஸ். நம்புராஜன் கூறியது:
தமிழக அரசு 2006-ல் பிறப்பித்த உத்தரவின்படி, பஸ்ஸில் 1 மற்றும் 2 எண்கள் கொண்ட இருக்கைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஒருவேளை அந்த இருக்கைகளில் வேறு பயணிகள் அமர்ந்திருந்தால், அவற்றை மாற்றுத்திறனாளி பயணிக்கு பெற்றுத்தர வேண்டியது பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் கடமை என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-டிக்கெட் முன்பதிவு முறையில் பின்பற்றப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளும், பொதுப் பயணிகளைப்போல் ஏதாவது ஒரு இருக்கையைத் தேர்வு செய்யும் நிலைதான் உள்ளது.
இதனால், முன்பதிவில் பஸ்ஸில் பின் இருக்கை கிடைக்குமானால், பஸ்ஸில் ஏறும்போதும், இறங்கும்போதும் மாற்றுத்திறனாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாக வேண்டிவரும்.
எனவே, இ-டிக்கெட் முன்பதிவு திட்டத்தில் முதல் இரண்டு இருக்கைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்திட அரசு மீண்டும் உத்தரவிடவேண்டும் என்றார்.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகள் ரயில் பயணத்துக்கே முன்னுரிமை தருகின்றனர். குறைந்த சதவீத்தினர்தான் பஸ்ஸில் பயணம் செய்கின்றனர்.
இதுபோல் குறைந்த எண்ணிக்கையில் வருபவர்களுக்காக, அனைத்து பஸ்களிலும் தனியாக இருக்கைகளை ஒதுக்கீடு செய்ய முடியாது.
அவ்வாறு தனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் நிலையில், மாற்றுத்திறனாளிகள் முன்பதிவு செய்யவில்லையெனில், பஸ் புறப்படும் கடைசி நேரத்தில் அந்த இருக்கைகளுக்காக பயணிகளைத் தேடிப் பிடிக்கும் நிலை ஏற்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

