குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்படும் பஸ்கள்...
பொன்னேரி, செப். 7: பொன்னேரி பஸ் நிலையத்தில் ஓட்டுநர்களால் விருப்பம் போல் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்படும் பஸ்களால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி


பொன்னேரி, செப். 7: பொன்னேரி பஸ் நிலையத்தில் ஓட்டுநர்களால் விருப்பம் போல் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்படும் பஸ்களால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பேரூராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் பொன்னேரியில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்பட 20 -க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன.
அத்துடன் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் 5, நீதிமன்றங்கள், 3 தேசிய வங்கிகள் 3திரையரங்குகள் உள்ளன. பொன்னேரி தாலுகாவில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் அனைத்து தேவைகளுக்கும் பொன்னேரி வந்து செல்ல வேண்டிய நிலை
உள்ளது.
இதன் காரணமாக பொன்னேரி பஸ் நிலையத்துக்கு நாள் தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பொன்னேரியை சுற்றிலும் பழவேற்காடு, தத்தைமஞ்சி, மேல்பாக்கம், அரசூர், ஊரணம்பேடு, பெரும்பேடு, ஆரம்பாக்கம், ஏலியம்பேடு, கள்ளூர், அண்ணாமலைச்சேரி, உள்ளிட்ட கிராமங்களுக்கு நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதே போன்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமும் மாதவரம், பட்டாபிராம், திருவொற்றியூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட பஸ்களை பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள கிராம பகுதிகளுக்கு இயக்கி வருகிறது.
பொன்னேரி பஸ் நிலையத்தில் இடது புறத்தில் சென்னை கோயம்பேடு, செங்குன்றம், ஆவடி, காஞ்சிபுரம், பட்டாபிராம், பூந்தமல்லி, திருவள்ளூர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, திருப்பதி உள்ளிட்ட வெளியூர் செல்லும் பஸ்கள் மேற்கண்ட ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ள நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
அதே நேரத்தில் வலது புறத்தில் பழவேற்காடு, மீஞ்சூர், தத்தைமஞ்சி, மேல்பாக்கம், கும்மிபூண்டி, ஆரம்பாக்கம் உள்ளிட்ட ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ள நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தம் செய்யாமல் அங்குள்ள பேரூராட்சி வணிக வளாக கடைகள் எதிரில் ஓட்டுநர்கள் தங்கள் விருப்பம் போல் குறுக்கும் நெடுக்குமாக பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.
மேலும் மீஞ்சூருக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் பஸ் நிலையத்தின் உள்ளே நிறுத்தப்படாமல் பஸ் நிலையத்தின் வெளியே இருக்கும் திரையரங்கின் அருகில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கன்றனர்.
ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ள பஸ் நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தம் செய்யாததால் தாங்கள் செல்லும் ஊர்களுக்கு குறிப்பிட்ட இடத்தில் நின்று பஸ்ஸில் பயணம் செய்ய முடியாமல் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே பஸ் நிலையம் வந்து செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொன்னேரி பஸ் நிலையத்தின் வலது புறத்தில் ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ள நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...