

தஞ்சாவூர்: தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டை வருகிற டிசம்பர் 31-ம் தேதியுடன் காலாவதியாக உள்ள நிலையில், ஏற்கெனவே அறிவித்தவாறு 2012-ம் ஆண்டு முதல் பயன்படுத்தும் வகையில் மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்க அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய மக்கள்தொகைப் பதிவேடு அமைப்பு, மக்களின் கைவிரல் ரேகைகள், கருவிழிப் பதிவு செய்து, ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்க கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இந்தப் பணியை மாநில அரசுகளின் நுகர்பொருள் வழங்கல் துறை மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள போலி குடும்ப அட்டைகளை ஒழிக்கவும், நியாய விலைக் கடையில் பொருள்கள் வாங்காத அட்டைகளுக்குக் கடைப் பணியாளர்கள் போலி பட்டியலிடுவதைத் தடுக்கும் வகையிலும், உடல்கூறு பதிவு முறையில் மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.
தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டை வருகிற டிசம்பர் 31-ம் தேதியுடன் காலாவதியாகிறது. எனவே, இந்த ஸ்மார்ட் கார்டு முறை, தேசிய மக்கள்தொகை பதிவு அமைப்பு திரட்டி வரும் உடல்கூறு தகவல் தொகுப்பைப் பயன்படுத்தி, 2012-ம் ஆண்டில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று ஆகஸ்ட் 19-ம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டுறவு, உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
குடும்ப அட்டை காலாவதியாக இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், ஸ்மார்ட் கார்டுக்கான தகவல் தொகுப்புப் பணி நடைபெறுவதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்திலும், கடலூர் மாவட்டத்தில் ஒரு வட்டத்திலும் மட்டுமே இந்தப் பணிகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
தஞ்சாவூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கணக்கெடுப்புப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. எனவே, பணிகள் தொடங்காத நிலையில், அரசு உத்தேசித்துள்ளவாறு 2012-ம் ஆண்டில் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன.
எனவே, 2012-ம் ஆண்டில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுமா அல்லது பழைய குடும்ப அட்டையிலே கூடுதல் தாள்களை ஒட்டி கால நீட்டிப்புச் செய்யப்படுமா என்று பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் நுகர்பொருள் வழங்கல் துறை அலுவலர் ஒருவர் கூறியது:
ஸ்மார்ட் கார்டு முறையில் ஒரு குடும்பத்தினர் ஒரு முறை உடல்கூறு பதிவு செய்துவிட்டால், வேறு எந்த ஸ்மார்ட் கார்டிலும் பதிவு செய்ய முடியாது. இந்த முறை நடைமுறைக்கு வந்தால் போலி குடும்ப அட்டைகளுக்கு வாய்ப்பே இல்லை.
தற்போது குடும்ப அட்டை பதிவாகியுள்ள பகுதியிலிருந்து வேறு பகுதிக்குக் குடிபெயர்ந்துவிட்டால், அங்கு ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு, முந்தைய பகுதியில் பெயர் நீக்கம் செய்து, எங்கு குடிபெயர்கிறோமோ அங்கு பதிவு செய்து பின்னர்தான் ரேஷன் பொருள்களை வாங்க முடியும். ஆனால், ஸ்மார்ட் கார்டு முறையில் பெயர் நீக்கம் செய்யத் தேவையில்லை. புதிதாகச் செல்லும் இடத்தில் கார்டை காண்பித்து பொருள்கள் வாங்கலாம்.
அரசின் நலத் திட்டங்கள், சான்றிதழ்களைப் பெற வருமானச் சான்றிதழ் தேவைப்படுகிறது. இதற்காக, பயனாளிகள் தங்களது தேவைகளுக்கேற்ப அரசு அலுவலர்களை "கவனித்து' வருமானச் சான்றிதழ்கள் பெற்றுக் கொள்கின்றனர்.
ஆனால், ஸ்மார்ட் கார்டு முறையில் தவறான வகையில் வருமானச் சான்றிதழ்கள் பெற வாய்ப்பு இல்லை. அரசின் இந்தப் புதிய முறையால் ரேஷன் பொருள்கள் கடத்தப்படுவது, ஒரே பெயரில் இரண்டு, மூன்று குடும்ப அட்டைகள் உருவாக்கப்படுவது தடுக்கப்பட்டு, கடை விற்பனையாளர்கள் போலிப் பட்டியல் தயாரிப்பது முற்றிலும் ஒழிக்கப்படும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மின்னணு குடும்ப அட்டை தொடர்பாக அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.