

திருச்சி: அரசு வழங்கும் மாத உதவித்தொகையை பெறுவதற்கு, தகுதியானவர்களை தேர்வு செய்யும் அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. இதில் வேறு வேலை செய்ய முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குகிறது.
கடந்த திமுக ஆட்சியில் உடலில் 75 சத குறைபாடு உள்ளவர்களுக்கு, கடுமையாக உடல் பாதிக்கப்பட்டவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டு மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்பட்டது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, கை, கால் போன்ற உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊனத்தின் அளவு 60 சதமாகவும், தசை வலுவிழந்தவர்களுக்கு ஊனத்தின் அளவு 40 சதம் எனவும் நிர்ணயம்செய்யப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் முதல் உதவித்தொகை ரூ.1000-மாக அதிகரிக்கப்பட்டது.
மேலும், கடந்த ஆட்சியில் உதவித்தொகை பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 45 ஆக இருந்தது. இப்போது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு ஊனத்தின் அளவை குறிக்கும் மருத்துவச் சான்றிதழ் மற்றும் ஊனமுற்றோருக்கான தேசிய அடையாள அட்டை அவசியம். இந்த அடையாள அட்டையை பெறுவதற்கு ஊனத்தின் அளவு 40 சதம் இருக்க வேண்டும்.
பண உதவி தவிர மத்திய, மாநில அரசுகளால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் பெறுவதற்கு, இந்த அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாத உதவித்தொகையை பெறுவதற்கு வருமான உச்சவரம்பு இல்லை. இதனால் பணக்காரர்கள், அரசு அதிகாரிகளின் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், ஊனத்தின் அளவு குறைவாக இருக்கிறது என்பதை காரணம் காட்டி, ஊனமுற்றோருக்கான தேசிய அடையாள அட்டையை வைத்திருக்கும், ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உதவித்தொகை மறுக்கப்படுகிறது. மருத்துவச்சான்றிதழில் ஊனத்தின் அளவு 50 சதம் என்று குறிப்பிட்டிருக்கும் பலர் இந்த உதவித்தொகையை பெற முடிவதில்லை.
ஒவ்வொரு நாளும் உழைத்தால்தான் உணவு என்ற நிலையில் உள்ள பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் மனவேதனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய நிலை ஒருபுறமிருக்க, பெற்றோரோ, உறவுகளோ இல்லாமல் உழைத்துப் பிழைக்கவும் உடலில் வலுவில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் பலரும், இந்த உதவித்தொகை கேட்டு மாதம் ஒரு முறையாவது ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
ஊனமுற்ற குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரித்து வரும் பெற்றோர், பணக்காரர்களாகவோ, அரசு அதிகாரிகளாக இருந்தாலும் கூட இயல்பான வாழ்க்கை முறைகளிலிருந்து விலகி, நாள்தோறும் வேதனைகளை மனதில் சுமந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை. இவர்களுக்கு உதவித்தொகை வழங்க வருமான உச்சவரம்பு அவசியமில்லை என்று அரசு கருதியதில் தவறில்லை.
ஆனால், உழைத்து பிழைக்க உடலில் வலு இல்லாமலும், ஆதரிக்க உறவுகள் இல்லாமலும் வாழ்ந்துகொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஊனத்தின் அளவு குறைவாக உள்ளது என்பதை காரணம் காட்டி உதவித்தொகை வழங்க மறுக்கக்கூடாது. வயதை வரம்பை தளர்த்தி 18 வயது உள்ளவர்களுக்கும் உதவித்தொகை வழங்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு முகாம்களை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த முகாம் நாள்களில் 50 சதம் மற்றும் அதற்கு மேல் ஊனத்தின் அளவு உள்ளதாக, தேசிய அடையாள அட்டையில் குறிப்பிட்டுள்ள, பெற்றோரை இழந்த, ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை கிடைத்திடும் வகையில், ஆவணங்களில் உரிய திருத்தம் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.