ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கர்நாடக பல்கலை.களில் தமிழ் இருக்கை: வலுத்து வரும் கோரிக்கை

பெங்களூர்: கர்நாடகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை தொடங்க தமிழக அரசு நிதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.  இந்தியாவின் எந்தப் பகுதியிலும், தாய்மொழியைக் கற்க எந்தத் தடையும் இல்லை. குறிப்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:41 pm

பெங்களூர்: கர்நாடகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை தொடங்க தமிழக அரசு நிதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

 இந்தியாவின் எந்தப் பகுதியிலும், தாய்மொழியைக் கற்க எந்தத் தடையும் இல்லை. குறிப்பாக மொழி சிறுபான்மையினருக்கு தாய்மொழியில் கற்க, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில், தமிழ் படிக்க உரிமை இருந்தும் அதை அனுபவிக்க முடியாத நிலை கர்நாடகத்தில் நிலவுகிறது.

 ஆரம்பப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, புதுமுகக் கல்லூரி, பட்டக் கல்லூரிகளில் தமிழ் ஒரு பாடமொழியாக, கர்நாடகத்தில் கற்பிக்கப்படுகிறது. ஆனால், தமிழில் முதுநிலைப் பட்டப் படிப்புகளை படிக்க வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட நபர் தமிழகத்துக்குத்தான் செல்ல வேண்டும். முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்துவிட்டால், தமிழில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பினால், மீண்டும் தமிழகத்திற்குச் செல்ல நேரிடும்.

 கர்நாடகத்துக்கு அருகில் தமிழகம் இருப்பதால், தமிழ் படிப்பதில் குறையிருக்காது என்று வாதிட்டால், அந்தக் கல்வி வெறும் வசதியானவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். வசதியானவர்கள் யாரும் தமிழ் படிப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை.

 இந்த நிலையைப் போக்குவதற்கு, கர்நாடகப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகளை அமைத்துவிட்டால் முதுநிலைப் பட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை தமிழ் மாணவர்கள் படிப்பதில் எந்தத் தடையும் இருக்காது.

 இது கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள், அறிஞர்கள், ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். தமிழக அரசிடம் இக்கோரிக்கையை முன்வைத்தும் எந்தப் பலனும் இல்லை என்பது தமிழறிஞர்களின் ஆதங்கமாகும். இதனால், குழப்பம் அடைந்துள்ள கர்நாடகத் தமிழர்கள், கர்நாடகப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கையை உருவாக்குவது கர்நாடக அரசின் கடமையா? அல்லது தமிழக அரசின் கடமையா? என்பது தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 இதுகுறித்து கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் முக்கியமந்திரி சந்துரு கூறியது:

 மதுரை, சென்னை, குப்பம், காசர்கோடு, மும்பை, ஒஸ்மானியா உள்ளிட்ட 7 வெளிமாநில பல்கலைக்கழகங்களில் கன்னட இருக்கை இயங்கி வருகிறது. இதில் பெரும்பாலானவை மாணவர் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறையை சுட்டிக் காட்டி மூடப்பட்டிருந்தன.

 இந்த விவகாரத்தை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்ட கன்னட வளர்ச்சி ஆணையம், மாணவர் மற்றும் நிதிப் பற்றாக்குறைக்கு உதவி செய்தது. கன்னட மொழியில் முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு, ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை அளிக்கிறோம். மேலும் கன்னட இருக்கைக்கும் நிதியுதவி செய்துள்ளோம். கர்நாடகப் பல்கலைக்கழகங்களில், கன்னட மொழியில் முதுகலைப் பட்டம் படிக்க, 78 சதவிகிதம் மதிப்பெண் தேவை. அதற்கும் குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்களை வெளிமாநில பல்கலைக்கழகங்களில் சேர்த்துவிடுகிறோம்.

 பல்கலைக்கழகங்களில் இலவசமாக இடமும், கல்வி ஊக்கத்தொகையும் கொடுப்பதால் மாணவர்கள் உற்சாகமாகப் படித்து வருகிறார்கள். இதேபோலத்தான் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் உதவி வழங்குகிறோம்.

 கர்நாடகப் பல்கலைக்கழகங்களில், தமிழ் இருக்கையை கொண்டு வருவதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், அதற்கான கோரிக்கையை, தமிழக பல்கலைக்கழகங்கள் அல்லது தமிழக அரசு முன்வைக்க வேண்டும். மேலும், தமிழ் இருக்கைக்காகும் செலவு, ரூ.1 கோடியை தமிழக அரசு கொடுக்க முன் வர வேண்டும். தமிழக அரசு முன்முயற்சி எடுத்து, நிதியுதவி அளித்தால், கர்நாடக பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கையை தொடங்குவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்றார் அவர்.தமிழ்மொழி, தமிழர் வளர்ச்சியில் அதீத அக்கறை செலுத்திவரும் தமிழக அரசு, தங்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் கர்நாடகத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.