/

கடும் போக்குவரத்து நெரிசல்: பொன்னேரி, மீஞ்சூரில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படுமா?

பொன்னேரி, மீஞ்சூர் நகர்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அப்பகுதியில் புறவழிச்சாலை அமை

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:47 pm

எம்.சுந்தரமூா்த்தி

பொன்னேரி, டிச.2: பொன்னேரி, மீஞ்சூர் நகர்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அப்பகுதியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

அங்கு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உட்பட 10-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன.÷அதே போல், பொன்னேரி பேரூராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியிலும் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

மேலும் விரைவு நீதிமன்றம் உள்ளிட்ட 5 நீதிமன்றங்கள், கல்லூரிகள், பள்ளிகள் அமைந்துள்ளன. பொன்னேரி தாலுகா தலைமை அரசு மருத்துவமனையும் இங்கு இயங்கி வருகிறது.

இதைத் தவிர, சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகம், வடசென்னை அனல் மின்நிலையம், காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட பல்வேறு தனியார் கண்டெய்னர் கிடங்குகளுக்கு செல்லும் கனரக (கண்டெய்னர்) வாகனங்களும் பொன்னேரி, மீஞ்சூர் வழியாகதான் சென்று வருகின்றன.

இதன் காரணமாக, பொன்னேரியில் உள்ள செங்குன்றம்-பொன்னேரி சாலை, திருவொற்றியூர்-பொன்னேரி சாலை மற்றும் தாயுமான் செட்டி தெரு மற்றும் மீஞ்சூரில் உள்ள மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இச்சாலையில் பகல் நேரங்களில் கனரக வாகனங்களின் போக்குவரத்தை தடை செய்யக்கோரி அப்பகுதி மக்கள் விடுத்துள்ள கோரிக்கை மீதும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

எனவே பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதி மக்களின் நலன் கருதி, அப்பகுதிகளில் புறவழிச்சாலைகள் அமைக்கவும், புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கும் வரை கனரக வாகனங்கள் பொன்னேரி, மீஞ்சூர் வழியாக செல்வதற்கு தடை விதிக்கவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.