டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மின்வெட்டு: ஏப்ரல் வரை இதே நிலைதான்

சென்னை, பிப். 16: தமிழகத்தில் இப்போதுள்ள மின்வெட்டு நிலை ஏப்ரல் மாதத்துக்குப் பிறகே ஓரளவு சீராகும் என தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஏப்ரல் மாதத்துக்குள் புதிய மின் உற்பத்தித் திட்டம் த

Updated On :19 செப்டம்பர் 2012, 11:12 pm

சென்னை, பிப். 16: தமிழகத்தில் இப்போதுள்ள மின்வெட்டு நிலை ஏப்ரல் மாதத்துக்குப் பிறகே ஓரளவு சீராகும் என தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஏப்ரல் மாதத்துக்குள் புதிய மின் உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டுவிடும். எனவே, மே மாதத்திலிருந்துதான் மின்வெட்டு அளவு ஓரளவு குறைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் மின் பற்றாக்குறை 3000 மெகா வாட் என்ற நிலையில் இருந்தது. இந்த நிலையில் ஒரு சில உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இந்த பற்றாக்குறை அளவு மேலும் அதிகரித்துள்ளது. இதனால், சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் இதுவரை 6 மணிநேரத்துக்கு மேல் என்ற நிலையில் இருந்தவந்த மின் வெட்டு, இப்போது 8 மணி நேரத்துக்கு மேல் என்று உயர்ந்துள்ளது. ஆனால், இந்த மின்வெட்டு நிலையானது அல்ல; சில நாள்களில் 8 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு அமலில் உள்ளது என ஈரோடு, தாராபுரம் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இன்வெர்டர்களால் பலனில்லை:

தொடர் மின்வெட்டுகாரணமாக, மின் சேமிப்பு சாதனமான இன்வெர்டர்களையும் முழுமையாக நம்பி இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் எஸ். அரவிந்தன் கூறியது:

தொடர் மின்வெட்டால் மக்கள் இப்போது இன்வெட்டர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்வெட்டர்களை சார்ஜ் செய்ய தொடர்ச்சியாக 5 மணி நேரம் மின்சாரம் தேவை.

அப்போதுதான் அதை மின் விநியோகம் இல்லாதபோது பயன்படுத்த முடியும். ஈரோடு, தாராபுரம், திருப்பூர் பகுதிகளில் தொடர்ச்சியாக 5 மணி நேர மின் விநியோகம் கூட இல்லை. இதனால் ரூ. 12 ஆயிரத்துக்கு மேல் விலை கொடுத்து வாங்கிய இன்வெட்டர்களும் பயனற்று போயுள்ளன என்றார் அரவிந்தன்.

மின்வெட்டால் தொழிற்சாலைகளின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கோடைகாலம் தொடங்க உள்ளதால், நிலைமை மேலும் மோசமாகும் அபாயம் எழுந்துள்ளது.

மத்திய அரசு பாராமுகம்: இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

வெளி மாநிலங்கள் சில மின்சாரம் தர ஒப்புக்கொண்டபோதும், அந்த மின்சாரத்தை முழுமையாக கொண்டுவரும் அளவுக்கு மின் தொடர் வடத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வில்லை. இதனால் மின்சாரத்தைக் கொண்டுவர முடியாத நிலை உள்ளது. தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தபோதும், மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. மத்திய தொகுப்பிலிருந்தும் மின்சாரம் தருவதை மத்திய அரசு தவிர்த்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, இப்போதுள்ள மின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படவில்லை. கோடைக்காலம் தொடங்க உள்ளது என்பதால் உற்பத்தி ஓரளவு குறையலாம்.

ஆனால், இந்த பாதிப்பு ஏப்ரல் மாதம் வரைதான் இருக்கும். அதற்குள், மேட்டூரில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் 600 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுவிடும். அதிலிருந்து 450 மெகா வாட் முதல் 500 மெகா வாட் வரை மின்சாரம் பயன்பாட்டுக்கு கிடைக்கும்.

இதைக் கொண்டு 5 முதல் 10 சதவீதம் வரையில் மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.

எனவே, மே மாதம் முதல் பிற மாவட்டங்களில் நிலவி வரும் மின்வெட்டு அளவு ஓரளவு குறையும். அதன் பிறகு, நெய்வேலி அனல் மின் நிலையம், திருவள்ளூர் மாவட்டம் வள்ளூர் அனல் மின் நிலையம், தூத்துக்குடி உள்ளிட்ட 3 பகுதிகளிலும் நிறுவப்பட்டுவரும் புதிய அனல் மின் திட்டங்கள் படிப்படியாக செயல்படத் தொடங்கிவிடும். அவற்றாலும் மின்வெட்டு குறைய வாய்ப்பு ஏற்படும் என்றார் அந்த உயர் அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.