அரியலூர், ஜன. 1: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் வழிகாட்டும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ஊராட்சிப் பணியாளர்கள் கடந்த 8 மாதங்களாக ஊதியமின்றிப் பணியாற்றி வருகின்றனர்.
தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்காக 3 சக்கர சைக்கிள், நாற்காலி, காதொலிக் கருவி, செயற்கைக் கால், கை, செயற்கை அவயங்கள் பொருத்த உதவுதல், பிரெய்லி கடிகாரம் எனப் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அளித்து வருவதோடு, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு முகாம்களையும் மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தி வருகிறது. மேலும், அவர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித் தொகைகளையும் வழங்கி வருகிறது.
முந்தைய அரசால் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான வழிகாட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, ஊராட்சிக்கு ஒருவர் வீதம் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்; பேரூராட்சிப் பகுதிகளில் 6 வார்டுகளுக்கு ஒருவர் வீதமும், நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் 6 வார்டுகளுக்கு ஒருவர் வீதமும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஊராட்சிப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட ஊராட்சிப் பணியாளர்களும் மாற்றுத் திறனாளிகளே என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் பணி, தங்கள் பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு அரசு வழங்கும் அடையாள அட்டை, நலத் திட்ட உதவிகள் குறித்து எடுத்துக் கூறி, அதனைப் பெற நடவடிக்கைகளை மேற்கொள்வது; மாற்றுத் திறனாளிகள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு தாட்கோ மூலம் நலத் திட்ட உதவிகளைப் பெற்றுத் தருவது ஆகியனவாகும்.
இதற்காக அந்தந்தப் பகுதிகளில் அரசால் தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாக, மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 750 ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான ஊராட்சிப் பணியாளர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணியமர்த்தப்பட்டனர். பணியமர்த்தப்பட்டு, 2 மாதங்கள் கழித்துதான் ஏப்ரல் மாதத்துக்குரிய ஊதியத்தைப் பெற்றனர். அதன் பின்னர், இதுவரை அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து தொடர்புடைய அதிகாரிகளிடம் கேட்டால், நிதி ஒதுக்கப்படவில்லை என்கின்றனர்.
மற்றவர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை எங்களுடைய பணிகள் மூலமாக நாங்கள் நிரூபித்து வருகிறோம். இந்த நிலையில், எங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே, எங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை ரூ. 2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அதனை தொடர்ந்து வழங்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை வைக்கின்றனர். தமிழக முதல்வர் தங்களின் கோரிக்கையை ஏற்று குறையைத் தீர்த்து வைப்பார் என முழுமையாக நம்புகின்றனர் மாற்றுத் திறனாளிகளுக்கான ஊராட்சிப் பணியாளர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.