இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

பசுபதி பாண்டியன் வெட்டிக் கொலை

திண்டுக்கல், ஜன. 10: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சி. பசுபதிபாண்டியன் (50), திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.  கடந்த 7

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:04 am IST

திண்டுக்கல், ஜன. 10: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சி. பசுபதிபாண்டியன் (50), திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

 கடந்த 7 ஆண்டுகளாக திண்டுக்கல் புறநகர்ப் பகுதியான நந்தவனப்பட்டி இ.பி. காலனியில் வசித்து வந்தார் பசுபதிபாண்டியன். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்த இவரை அடையாளம் தெரியாத கும்பல் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

 இந்த சம்பவம் குறித்து போலீஸôர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இவருக்கு சந்தோஷ் என்ற மகனும், பிரியா என்கிற மகளும் உள்ளனர்.

 தூத்துக்குடி அருகே உள்ள அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பசுபதிபாண்டியன். இவர் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவராக இருந்து வந்தார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த வெங்கடேஷ் பண்ணையார் கோஷ்டிக்கும் இடையே நீண்டநாள்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவரை மற்றொரு கோஷ்டியினர் வெட்டிக் கொலை செய்வதும் தொடர்கதையாக இருந்து வந்தது. பின்னர், வெங்கடேஷ் பண்ணையார் போலீஸôரால் சுடப்பட்டு இறந்தார். எனினும், அவரது தம்பி சுபாஷ் பண்ணையாருக்கும், பசுபதி பாண்டியனுக்கும் விரோதம் தொடர்ந்து இருந்து வந்தது.

 இந்நிலையில் பசுபதிபாண்டியனும், அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியனும் கடந்த 2006-ம் ஆண்டு தூத்துக்குடிப் பகுதியில் ஒரு பாலத்தின் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, பசுபதி பாண்டியனின் எதிரிகள் வீசிய வெடிகுண்டால் பலத்த காயமடைந்த ஜெசிந்தா பாண்டியன் இறந்தார். பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார்.

 கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளராக இருந்தார் பசுபதிபாண்டியன். பின்னர் அக்கட்சியை விட்டு பேராசிரியர் தீரன் வெளியேறி தமிழ் பா.ம.க.வை தொடங்கியபோது அக்கட்சியின் பொதுச்செயலராக இருந்தார் பசுபதிபாண்டியன். அதன் பின் கடந்த 2005-ல் பா.ம.க.வில் இருந்து விலகிய முருகவேல்ராஜனுடன் சேர்ந்து, "தமிழர் அரசு' என்ற தனிக் கட்சியை தொடங்கினார். அக்கட்சிக்கு பசுபதிபாண்டியன் தலைவராக இருந்து வந்தார். எனினும் அக்கட்சி தீவிரமாகச் செயல்படவில்லை.

 இந்நிலையில், கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டார் பசுபதிபாண்டியன். அந்த தேர்தலில் குறைவான வாக்குகளே பெற்ற அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

 தென் மாவட்டங்களில் பதற்றம்:

 பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டது. சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பரமக்குடியில் பஸ் மீது கல் வீசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில இடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.