ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வெள்ளியின் சூரியக் கடப்பு நிகழ்வு: அடுத்த முறை இந்தியாவில் காண முடியாது

சென்னை, ஜூன் 6: விண்வெளியில் மிக அரிய நிகழ்வான சூரியனை வெள்ளிக் கோள் கடக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (ஜூன் 6) நடைபெற்றது.  இதை ஆர்வமுடன் கண்டுகழித்த சென்னை மக்கள், அடுத்த முறை 2117-ல் நடைபெறும் இந்த நிக

Updated On :20 செப்டம்பர் 2012, 5:36 am IST

சென்னை, ஜூன் 6: விண்வெளியில் மிக அரிய நிகழ்வான சூரியனை வெள்ளிக் கோள் கடக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (ஜூன் 6) நடைபெற்றது.

 இதை ஆர்வமுடன் கண்டுகழித்த சென்னை மக்கள், அடுத்த முறை 2117-ல் நடைபெறும் இந்த நிகழ்வை காண முடியாது என்கிறார் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் அய்யம் பெருமாள். சென்னை மட்டுமின்றி இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த நிகழ்வைக் காண முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

 இரண்டு கோள்கள் மட்டுமே...

 புதன் மற்றும் வெள்ளிக் கோள்களின் சுற்றுப் பாதைகள் புவி சுற்றுவட்டப் பாதையின் உட்புறமாக அமைந்துள்ளன. எனவே, இந்த இரண்டு கோள்கள் மட்டுமே சூரியனுக்கும், பூமிக்கும் இடையே வர முடியும்.

 இதிலும், வெள்ளிக் கோளின் கடப்பு, புதன் கோளின் சூரியக் கடப்பைக் காட்டிலும் அரிய நிகழ்வாகும். புதன் கோளின் சூரியக் கடப்பு ஒரு நூற்றாண்டில் 13 முறை நிகழும்.

 ஆனால், வெள்ளியின் சூரியக் கடப்பு 243 ஆண்டுகளுக்கு 4 முறை மட்டுமே நிகழும். ஏனெனில், பூமியைக் காட்டிலும், வெள்ளி வேகமாக சூரியனை சுற்று வந்துவிடுகிறது.

 வெள்ளி 224.7 நாள்களில் சூரியனை சுற்றி வந்துவிடுகிறது. ஆனால் பூமியோ 365.25 நாள்களில் கடக்கிறது.

 மேலும், பூமியின் சுற்றுப் பாதையின் தளமும், வெள்ளியின் சுற்றுப் பாதை தளமும் ஒன்றுபோல் இருப்பதில்லை. இது 3.4 டிகிரி வேறுபடுகிறது. இதனால்தான், வெள்ளி சூரிய கடப்பு நிகழ்வு அரிதாக நிகழ்கிறது.

 அடுத்த கடப்பு எப்போது...

 அரிய வெள்ளியின் சூரிய கடப்பு நிகழ்வு, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிகழ்கின்றன. இதற்கு முன்னர் 1872 மற்றும் 1882-ல் இது நிகழ்ந்தது.

 அதன் பின்னர் 121 ஆண்டுகள் 6 மாதங்களுக்குப் பிறகு 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்தது. பின்னர் 8 ஆண்டுகளுக்குப் பின் 2012 ஜூன் 6-ம் தேதி இந்த அரிய கடப்பு நிகழ்ந்துள்ளது.

 இந்த அரிய வெள்ளி சூரிய கடப்பு 8 ஆண்டுகள் இடைவெளியில் 2 முறை நிகழும். மீண்டும் 105 ஆண்டுகள் 6 மாதங்களுக்குப் பின்னர் 2117 டிசம்பர் 11-ம் தேதியன்றும், 2125 டிசம்பர் 8-ம் தேதியன்றும் இந்த வெள்ளியின் சூரிய கடப்பு நிகழ்வுகள் நடைபெறும்.

 மேலும் 2247 ஜூன் 11-ம் தேதி, 2255 ஜூன் 9-ம் தேதியன்றும் மற்றும் 2360 டிசம்பர் 13-ம் தேதி, 2368 டிசம்பர் 10-ம் தேதியன்றும், 2490 ஜூன் 12-ம் தேதி, 2498 ஜூன் 10-ம் தேதியன்றும் இந்த நிகழ்வு நடைபெறும்.

 அடுத்த கடப்பு

 இந்தியாவில் தெரியாது

 இந்த நிலையில், 2117-ம் ஆண்டு நிகழும் வெள்ளி சூரிய கடப்பை சென்னை உள்பட இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் பார்க்க முடியாது. ஏனெனில் பாதையில் வெள்ளிக் கோளின் கோணம் மாறுபட்டிருக்கும்.

 ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பிற நாடுகளிலிருந்து முழுமையாகப் பார்க்க முடியும். 2255-ம் ஆண்டு நிகழும் கடப்பையே இந்தியாவிலிருந்து காண முடியும் என அய்யம் பெருமாள் கூறினார்.

 அடுத்த அரிய நிகழ்வு என்ன...

 விண்வெளியில் அடுத்த அரிய நிகழ்வாக பூமிக்கும் சூரியனுக்கும் நேர் குறுக்கே புதன் கோள் கடக்கும் நிகழ்ச்சி 2016-ம் ஆண்டு நிகழ உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.