

சென்னை, நாட்டிலேயே இரண்டாவது பெரிய அருங்காட்சியகமான சென்னை அரசு அருங்காட்சியகத்தின் முக்கியப் பிரிவான மானுடவியல் கலைக்கூடம் (அசபஏதஞடஞகஞஎவ அதப எஅககஉதஐஉந) எதிர்மறை மனோபாவத்தால் கடந்த 11 ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது.
கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடியாக பெரிய அரசு அருங்காட்சியகம் சென்னையின் இதயப் பகுதியான எழும்பூரில் 16.25 ஏக்கரில் அமைந்துள்ளது. 1851-ல் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் 6 பெரிய கட்டடங்களில் 46 கலைக் கூடங்களில் சுமார் 80 ஆயிரம் சேகரிப்பு பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பல்நோக்கு அருங்காட்சியகமான இங்கு முக்கியமானது மானுடவியல் கலைக்கூடம். இந்த கலைக் கூடத்தில், மானுட வரலாற்றை எடுத்துரைக்கும் ஏராளமான பழங்காலப் பொருள்கள் உள்ளன.
சிந்து சமவெளி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பையர், அரிக்கமேடு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்கள், இரும்பு கருவிகள், பித்தளை பாத்திரங்கள், தங்க ஆபரணங்கள் என ஏராளமான ஆதிகாலப் பொருள்கள் உள்ளன.
தென்னிந்திய மலைவாழ் மக்களான தோடர்கள், லம்பாடிஸ், கடபாஸ் உள்ளிட்டோரின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஆடைகள், ஆபரணங்கள், பாத்திரங்கள், ஆயுதங்கள், வேட்டைக் கருவிகள், விவசாய உபகரணங்களும் உள்ளன.
இங்குள்ள இசைக் கருவிகள் காட்சிக் கூடத்தில், காற்றைக் கொண்டு இசை எழுப்பக் கூடிய பஞ்சமுக வாத்தியம், தெருக்கூத்து கலை சித்திரிப்புகள், அதற்கான பிரத்யேக ஆடைகள் போன்றவையும் உள்ளன.
ஆயுதக் காட்சிக் கூடத்தில், பழங்கால ஆயுதங்கள் முதல் 20-ம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையிலான ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தரங்கம்பாடியில் இருந்து 1845-ல் கொண்டு வரப்பட்ட பீரங்கி, ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்புவினால் பயன்படுத்தப்பட்ட பீரங்கி, 1762-ல் மணிலாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பீரங்கி என ஏராளமான பீரங்கிகள் உள்ளன. கட்டத்தை சுற்றி வைக்கப்பட்டுள்ள இந்த பீரங்கிகளை பொதுமக்கள் வெளியில் இருந்து பார்வையிட முடியும். உலகிலேயே அதிகமான பீரங்கி சேகரிப்பு இங்குதான் உள்ளன. பழங்காலத்திய கொலைக் கருவிகளான கழுமரம் உள்ளிட்ட கொலைக் கருவிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை உள்நாட்டு மக்களும், வெளிநாட்டு மக்களும் பார்த்து ரசித்து வந்தனர்.
பேனா கத்தி மாயம்: கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் பயன்படுத்திய கைத்துப்பாக்கிகள், ரைபிள், பிஸ்டல்கள் போன்றவையும் இங்கு உள்ளன. அவற்றில் "பேனா துப்பாக்கி' ஒன்று கடந்த 2000-ம் ஆண்டு காணாமல் போய்விட்டது. அதைத் தொடர்ந்து அப்போது பணியில் இருந்து ஒரு ஊழியர் மீது புகார் கூறப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தில் புகார் நிரூபிக்கப்படவில்லை.
அதன் பின்பு காட்சிக் கூடத்தில் உள்ள பொருள்களுக்கு பாதுகாப்பில்லை என்ற சூழ்நிலையில், அந்த கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறி 2001-ல் காட்சிக் கூடம் மூடப்பட்டது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காட்சிக் கூடத்தில் உள்ள பழங்காலப் பொருள்களை சுத்தம் செய்து புதுப்பித்து இடங்களை மாற்றி வைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்து இன்று திறக்கப்படும், நாளை திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் 11 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னமும், காட்சிக் கூடம் திறந்தபாடில்லை.
அவ்வப்போது மீண்டும், மீண்டும் பராமரிப்பு பணி எனக் கூறி காலத்தை தள்ளி போடுகிறார்களே தவிர வேலையை விரைவாக முடித்து பொதுமக்கள் பார்வைக்கு திறந்த வைக்க யாரும் முன்வரவில்லை என அருங்காட்சியக ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் இப்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, திறப்பு விழாவிற்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் தேதி கேட்டிருப்பதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
எதிர்மறை மனோபாவம்? இந்த அரசு அருங்காட்சியகத்திற்கு வந்து செல்லும் அரசியல் வாதிகளின் பதவி பறிபோகும் என்ற எதிர்மறை மனோபாவத்தால் (நெகட்டிவ் சென்டிமெண்ட்) அமைச்சர்கள் இங்கு வர தயங்குகிறார்கள். இதனால் திறப்பு விழா தள்ளிக் கொண்டே போகிறது.
கடந்த 2001-ல் கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலை இந்த காட்சிக் கூடத்தில்தான் "பாதுகாப்பாக' வைக்கப்பட்டிருந்தது. 2006-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு இங்கு வந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, கண்ணகி சிலையை மீண்டும் பழைய இடத்தில் நிறுவினார் என்று ஊழியர்கள் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்த எதிர்மறை மனோபாவத்தை தகர்த்தெறியும் வகையில், இந்த காட்சிக் கூடத்தை விரைவில் யாராவது வந்து திறந்து வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அருங்காட்சியகத்தை பார்வையிடும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அருங்காட்சியக ஆணையரின் கருத்தை அறிய பலமுறை முயன்றும் முடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.