புதுக்கோட்டை முடிவு என்ன சொல்கிறது?

சென்னை, ஜூன் 15: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் எதிர்பார்த்தபடியே ஆளும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த வெற்றியும், அதன் மூலம் அதிமுக சொல்லும் செய்தியும் என்ன என்பது கொஞ்சம் சுவாரஸ்யமானது ஆகு
புதுக்கோட்டை முடிவு என்ன சொல்கிறது?
Updated on
2 min read

சென்னை, ஜூன் 15: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் எதிர்பார்த்தபடியே ஆளும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த வெற்றியும், அதன் மூலம் அதிமுக சொல்லும் செய்தியும் என்ன என்பது கொஞ்சம் சுவாரஸ்யமானது ஆகும்.

 தமிழ்நாட்டில் 1980-க்குப் பிறகு இதுவரையில் நடைபெற்றுள்ள 45 இடைத் தேர்தல்களில் 8-ல் மட்டுமே எதிர்க் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 37 தேர்தல்களிலும் ஆளும் கட்சியே வெற்றி வாகை சூடி இருக்கிறது. அந்த வரிசையில் புதுக்கோட்டை இடைத் தேர்தலிலும் ஆளும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது.

 முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 3-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு நடைபெற்ற திருச்சி (மேற்கு), சங்கரன்கோவில் இடைத் தேர்தல்களிலும் அக்கட்சியே வெற்றி பெற்றது. இப்போது புதுக்கோட்டையிலும் வெற்றி பெற்றுள்ளது.

 2006-2011 திமுக ஆட்சியில் நடைபெற்ற 11 இடைத் தேர்தல்களில் 8-ல் திமுகவும், 3-ல் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸýம் வென்றன. அவற்றில் சில தேர்தல்களில் அதிமுக போட்டியிடவே இல்லை.

 திருச்சி (மேற்கு) இடைத் தேர்தல் என்பது, 2011 பொதுத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த 6 மாதத்துக்குள் நடைபெற்றது. அதற்குள் மக்கள் மன நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. எனினும், கணிசமான வாக்குகளைப் பெற்று போட்டியை கடுமையாக்க வேண்டும் என்பதில் திமுக முனைப்புடன் களம் இறங்கியது. எனினும், எதிர்பார்த்தபடியே அதிமுக வெற்றி பெற்றது.

 அடுத்து, சங்கரன்கோவில் இடைத் தேர்தல். பொதுத் தேர்தலில் கூட்டாளிகளாக இருந்த அதிமுகவும், தேமுதிகவும் தனித்தனியே பிரிந்து களத்தில் மோதிய தேர்தல் அது. அதிமுக-தேமுதிக உறவில் கசப்பு ஏற்பட்ட பின்பு முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்துக்கு சவால் விட்டு அந்தத் தேர்தலை சந்தித்தார். அவர்களுடன், பிரதான எதிர்க்கட்சியான திமுக, சங்கரன்கோவில் தொகுதியில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்ட மதிமுக ஆகிய கட்சிகளும் களம் கண்டன. அதிலும் எதிர்பார்த்தபடியே அதிமுகவே வெற்றி பெற்றது. ஆனால், எதிர்த்துப் போட்டியிட்ட திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வைப்புத் தொகையை இழந்தன என்பதில்தான் அதிமுகவுக்கு அதிக மகிழ்ச்சி.

 இப்போது புதுக்கோட்டையிலும் அதிமுகவுக்கே வெற்றி. தேமுதிக வைப்புத் தொகையை பாதுகாத்துக் கொண்டது அதிமுகவுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தலாம். இந்தத் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இப்போது அதிமுகவே தொகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. தொகுதியைக் கூட்டணிக் கட்சியிடம் பறிகொடுத்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் வெளியே சொல்ல முடியாத நிலை.

 திருச்சி (மேற்கு), சங்கரன்கோவிலை ஒப்பிடும்போது புதுக்கோட்டை வெற்றி சற்று வித்தியாசமானது. முதல் இரண்டு தொகுதிகளும், பொதுத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள்தான். அதில் மீண்டும் அதிமுகவே வெற்றி பெற்றதில் ஆச்சரியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், புதுக்கோட்டை அப்படி அல்ல.

 அண்மைக் காலமாகவே அதிமுகவுக்கு கூட்டணிக் கட்சிகளுடன் சுமுகமான உறவு இல்லாத நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தொகுதியை கொடுப்பதை விட நாமே போட்டியிட்டு இப்போது கைவசம் உள்ள 149 இடத்தை 150 (பேரவைத் தலைவர் நீங்கலாக) ஆக உயர்த்திக் கொள்ளலாமே என முடிவு செய்துவிட்டது போன்று அதிமுகவே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. பொதுவாகவே இடைத் தேர்தல் வெற்றி என்பது ஆட்சியிலும், அதிகாரத்திலும் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது. எனினும், மக்களின் மனநிலை அதில் பிரதிபலிக்கும் என்பதால் வெற்றி பெறுவதை ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி, ஒரு கெüரவப் பிரச்னையாக கருதுவது உண்டு. ஆனால் அண்மைக் காலமாக அந்த நிலையும் மாறிவிட்டது.

 கடந்த திமுக ஆட்சியின்போது அதிமுக போட்டியிடாததும், இப்போது திமுக போட்டியிடாததும் அவை எதிர்க்கட்சியாக இருக்கும்போது இடைத் தேர்தலை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 இத்தனை இருந்தும் புதுக்கோட்டையில் வெற்றி பெற அதிமுக ஏன் இத்தனை பாடுபட்டது? அத்தனை அமைச்சர்களும் அங்கு முகாமிட்டனர். முதல்வரும் ஒரு நாள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார். இத்தனையும் எதற்காக?

 2011 பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் பெற்ற வெற்றி என்பது, அதிமுகவால் கிடைத்த வெற்றிதான். அக் கட்சிகளுக்கு குறிப்பாக தேமுதிகவுக்கு தனித்து வெற்றி பெறக் கூடிய அளவில் மக்களிடம் செல்வாக்கு இல்லை என முதல்வரும், அமைச்சர்களும் அடிக்கடி கூறி வந்ததை நிரூபிக்க புதுக்கோட்டை வெற்றி உதவியுள்ளது.

 அடுத்து, இடைத் தேர்தல் வெற்றி என்பது திமுகவின் அரசியல் அனுபவம், ராஜதந்திரம் போன்றவற்றால் கிடைப்பது என்பதைப் பொய்யாக்கும் வகையில், தேர்தலை எதிர்கொள்ளும் அத்தனை "கலை'களும் அதிமுகவுக்கும் அத்துப்படி என்பதையும் புதுக்கோட்டை வெற்றி பறைசாற்றியுள்ளது.

 அப்படியானால், தேமுதிகவின் தோல்வி? திமுகவும் போட்டியிடாத நிலையில் ஆளும் அதிமுகவை எதிர்த்து துணிந்து தனித்துப் போட்டியிட்டு அந்தக் கட்சி டெபாசிட் தொகையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதை ஒரு சாதனையாகக் கருதிக் கொள்ளலாம். சட்டப் பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் அதிமுகவுக்கு எதிராகப் போராடும் கட்சி தாங்கள் மட்டுமே என்கிற கருத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த இந்தத் தேர்தல் தோல்வி உதவியது என்று ஆறுதல் அடையலாம், அவ்வளவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com