ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

முத்திரைத் தாள் கட்டண விலக்கு கோரும் விவசாயிகள்

திருச்சி : தமிழகத்தில் விவசாய நிலங்களுக்கு முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  தமிழகத்தில் முன்பு நிலங்களுக்கான அரசின் வழிகாட்டி

Updated On :20 செப்டம்பர் 2012, 1:05 am

திருச்சி : தமிழகத்தில் விவசாய நிலங்களுக்கு முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

 தமிழகத்தில் முன்பு நிலங்களுக்கான அரசின் வழிகாட்டி மதிப்பீடு குறைவாக இருந்த போதிலும், அதன் விற்பனை விலை அதிக அளவிலேயே இருந்தது.

 ஒரு மனையையோ அல்லது நிலத்தையோ வாங்கும்போது அந்த சர்வே எண்ணுக்குரிய அரசின் வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 95 சதவித இடங்களில் விற்பனை மதிப்பைவிட அரசின் வழிகாட்டி மதிப்பீடு பல மடங்கு குறைவாகத்தான் இருந்தது.

 இதனால், கிரயப் பத்திரத்தில் அரசின் வழிகாட்டி மதிப்பீட்டுத் தொகைக்கு (குறைந்த தொகைக்கு) மட்டுமே முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

 இதனால், அரசுக்கு ஆண்டுக்கு முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாயில் பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வந்தது.

 இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசின் வருவாயை கூடுதலாக்க வேண்டுமென்ற நோக்கிலும், லஞ்சம் உள்ளிட்ட பிற தவறான நடவடிக்கைகளுக்கும் இடம் தரக் கூடாது என்ற நோக்கிலும் நிலங்களின் வழிகாட்டி மதிப்பீட்டை பல மடங்கு உயர்த்தி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

 இதன் காரணமாக பல இடங்களில் இந்த வழிகாட்டி மதிப்பு முன்பிருந்ததைவிட, அதிகபட்சமாக ஏறத்தாழ 700 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

 இந்த உயர்வு வணிகரீதியிலானவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் நிலங்களுக்கு முத்திரைத் தாள் கட்டணம் பல மடங்கு உயருவதால் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் விவசாயிகள்.

 இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலர் ஆறுபாதி பி. கல்யாணம் கூறியது:

 நிலங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளதால், பத்திரப்பதிவு செய்ய விவசாயிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

 ஏற்கெனவே விவசாயத்தில் லாபமின்மை மற்றும் தொடர் நஷ்டம் ஆகியவற்றின் காரணமாக விவசாயிகள் தங்களது நிலங்களை விற்றுவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. மேலும், விவசாய நிலங்களே வீட்டுமனைகளாக மாறி வருகின்றன.

 இந்தச் சூழ்நிலையில், முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக உண்மையில் விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் புதிதாக நிலங்களை வாங்க ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

 இதில் அவர்களுக்கு விலக்கு அளிப்பதன் மூலம், விவசாயத் தொழிலை அவர்கள் தொடரவும், புதிய நிலங்களை வாங்கவும் வழிவகை செய்ய முடியும்.

 அவ்வாறு வாங்கும் நிலங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு விவசாயத்தைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்த மாட்டோம் என உறுதியளிப்புக் கடிதத்தை விவசாயிகளிடம் பெற்றுக் கொண்டு, இந்தச் சலுகையை அரசு வழங்கலாம்.

 மேலும், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு சொந்த வீடு அல்லது சொந்த மனை வாங்க வேண்டும் என்பது ஒரு பெரிய கனவாகவே இருக்கும்.

 அந்த கனவும் வழிகாட்டி மதிப்பு உயர்வு காரணமாக நிறைவேறாமலேயே போய்விடும். குடும்பத்தில் முதல் மனை அல்லது வீடு வாங்குவோருக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் சலுகை வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.