

கோவை, மே 26: சூரிய ஒளி மின்சாரம் மூலம் நேரடியாக மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டு தோட்டங்களுக்கு தங்கு தடையில்லாமல் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கன்வெர்ட்டர் மூலம் மாற்றப்பட்டு மோட்டாருடன் இணைக்கப்பட்டு சுமார் 150 அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் இறைக்கப்பட்டு தோட்டங்களுக்குப் பாய்ச்சப்படுகிறது.
சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து 5 எச்.பி. மோட்டார் இயக்கத் தேவையான சாதனங்களை அமைப்பதற்கு முதலில் ரூ.5.25 லட்சம் செலவாகிறது. இந்த சாதனங்கள் சுமார் 25 ஆண்டுகள் வரை பழுதில்லாமல் இயங்கும் தன்மை கொண்டவை.
ஒரு நாளைக்குக் குறைந்தது 7 மணி நேரமாவது தண்ணீர் இறைக்கும் வகையில் சூரிய ஒளி சாதனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதைப் பராமரிக்கும் செலவு மிக மிகக் குறைவு. டீசலைப் பயன்படுத்தி மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்தால் கூடுதலாகச் செலவாகும்.
அந்த வகையில் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தி மோட்டாரை இயக்கும்போது ஆகும் செலவும் இப்போதைய மின் கட்டணமும் 10 ஆண்டுகளில் சமமாக இருக்கும். அடுத்து சுமார் 15 ஆண்டுகள் எவ்விதப் பிரச்னையும் இருக்காது. இதுவே விவசாயிகளுக்கு லாபம்தான்.
இது தொடர்பாக கோவை யுபிவி சோலார் நிறுவனத்தைச் சேர்ந்த என்.உதயகுமார் கூறியது:
பேட்டரி இல்லாமல் நேரடியாக சூரிய ஒளி மின்சாரம் மூலம் மோட்டாரை இயங்க வைத்து தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. துவக்கத்தில் அதிகச் செலவானாலும் சுமார் 25 ஆண்டுகள் வரை இச்சாதனங்களைப் பயன்படுத்த முடியும். மிகக் குறைந்த சூரிய ஒளி கிடைக்கும்போதும் அதற்கேற்ப நீர் பாய்ச்ச முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.