

தருமபுரி: சுற்றுலா மையமான ஒகேனக்கல்லில் சைக்கிள் வழி சுற்றுலாவுக்கு ஏற்ற சூழ்நிலை ஏற்படுத்தப்படாததால் அத் திட்டம் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு மிக்க சுற்றுலா மையங்களில் ஒகேனக்கல் குறிப்பிடத்தக்கதாகும் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். குறிப்பாக, பள்ளி விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகமாக இருக்கும்.
ஒகேனக்கல் சுற்றுலா மையத்துக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது, தவிர கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் வட மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து சைக்கிள் வழி சுற்றாலாத் திட்டதை அறிமுகப்படுத்தியது சுற்றுலா வளர்ச்சித் துறை.
இத் திட்டத்திற்காக 20 சைக்கிள்கள் ஒகேனக்கல்லில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலின் ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுச்சூழல் பாதிப்பின்றி சைக்கிள் மூலம் சென்று, இயற்கைக் காட்சிகளை ரசிக்க வழிவகை செய்வதே இத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது. குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் பிலிகுண்டுலு, முதலைப் பண்ணை, மீன் காட்சியகம் போன்ற இடங்களை சைக்கிள் மூலம் சுற்றி பார்க்க இயலும்.
சைக்கிள் வாடகைக் கட்டணம் விவரம்: சைக்கிள் வழி சுற்றுலா செல்லும் பெரியவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.50-ம், 6 மணி நேரத்துக்கு ரூ.100-ம், 12 மணி நேரத்துக்கு ரூ.150-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.30-ம், 6 மணி நேரத்துக்கு ரூ.60-ம், 12 மணி நேரத்துக்கு ரூ.100-ம் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் புகார்: ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் சைக்கிள் வழி சுற்றுலா செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், ஒகேனக்கல்லில் முதலைப் பண்ணை செல்லும் சாலை, பென்னாகரம் சாலை, சின்னாறு செல்லும் சாலை, நீர்வீழ்ச்சி செல்லும் சாலை போன்ற அனைத்து சாலைகளிலும், கார், பஸ் போன்ற மோட்டார் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த வாகனங்கள் சாலையின் பெரும் பகுதியை அடைத்து நிற்பதாலும், சாலைகளில் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்வதாலும், சைக்கிள் வழி சுற்றுலாவுக்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவிக்கின்ற னர்.
சுற்றுலாப் பயணிகள் (சிறுவர்கள்) சைக்கிள் வழி சுற்றுலாவை தமிழ்நாடு வளாகத்திற்குள்ளேயே நிறைவு செய்துவிடுகின்றனர். இதனால், இத் திட்டத்தின் நோக்கம் முழுமையடையாத நிலை உள்ளது. சைக்கிள் வழி சுற்றுலாவுக்கு ஏற்ற சூழல் இல்லாததால், மாதம் ரூ.2 ஆயிரத்துக்கு குறைவான தொகையே வசூலாவதாக சுற்றுலாத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்த தொகையே வசூல் ஆவதால், ஒகேனக்கல்லில் இத் திட்டத்தை முடக்கி ஏற்காடு போன்ற சுற்றுலா மையத்துக்கு மாற்றும் முடிவுக்கு சுற்றுலாத் துறை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, ஒகேனக்கல்லில் சைக்கிள் வழி சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், புதிய பேருந்து நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், சாலையில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்க்க, வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஒகேனக்கல்லில் சைக்கிள் வழி சுற்றுலாவை மேம்படுத்த இயலும் என்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.