புதிய கேஸ் இணைப்புக்கு மானிய விலை சிலிண்டர் கிடையாது

புதிய கேஸ் இணைப்பு கோரி விண்ணப்பம் செய்வோருக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படுவதை நிறுத்திவைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாறாக, மானியம் இல்லாத சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
புதிய கேஸ் இணைப்புக்கு மானிய விலை சிலிண்டர் கிடையாது
Updated on
2 min read

புதிய கேஸ் இணைப்பு கோரி விண்ணப்பம் செய்வோருக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படுவதை நிறுத்திவைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாறாக, மானியம் இல்லாத சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத்திய அரசின் அறிவிப்பு கேஸ் விநியோகஸ்தர்களையும், வாடிக்கையாளர்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு ஓராண்டுக்கு மானியத்துடன் கூடிய சிலிண்டர்கள் 6 மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. கூடுதல் சிலிண்டர் தேவைப்படுவோருக்கு மானிய விலை இல்லாத, சந்தை விலையில் சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து டீலர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கும் பொருட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.11.42 காசுகள் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, தமிழகத்தில் சிலிண்டர் விலை ரூ.386.50ல் இருந்து ரூ.397.92 ஆக உயர்ந்தது. இதில் சிலிண்டர் அளிக்க வரும் ஊழியர்களுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை தரவேண்டியுள்ளது. இதன்படி, மானிய சிலிண்டர் விலை ரூ.420 ஆக உள்ளது.

சந்தை விலைக்கு வழங்கப்படும் சிலிண்டருக்கான கமிஷன் ரூ.12.17-ல் இருந்து ரூ.38 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி, மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.883.50-ல் இருந்து ரூ.921.50 ஆக உயர்ந்தது.

மேலும், ஒரே நபர் பல பெயர்களில் இணைப்பு வைத்திருத்தல், போலி பெயர்களில் இணைப்பு வாங்குதல் போன்றவற்றைக் கண்டறிந்து நீக்கும் வகையில், மானியத்துடன் கூடிய புதிய சிலிண்டர் இணைப்புகளை செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் வரை நிறுத்திவைத்தது. அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்திற்குப் பிறகு மீண்டும் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, புதிய சிலிண்டர் இணைப்பு கோருவோருக்கு மானியம் இல்லாத சிலிண்டர் இணைப்பு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

மேலும், கேஸ் விநியோகஸ்தர்கள் தங்கள் வாடிக்கையாளர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.

இதில் வாடிக்கையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்துள்ளாரா என்பது குறித்து ஆராயப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை விநியோகஸ்தர்களிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

வாடிக்கையாளர் தொடர்பான விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே, மானியத்துடன் கூடிய புதிய சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை புதிய இணைப்பு வாங்க விரும்புவோர் மானியம் இல்லாத சிலிண்டர் இணைப்பு மட்டுமே பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், புதிதாக இணைப்பு கோரும் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் புதிய உத்தரவைப் பின்பற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில், இந்தியன் ஆயில் நிறுவனம் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு மானியத்துடன் கூடிய சிலிண்டர் இணைப்பை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, கோவை புலியகுளத்தைச் சேர்ந்த சிவா கூறுகையில், புதிய சிலிண்டர் இணைப்புக் கோரி விண்ணப்பித்திருந்தேன். மானியத்துடன் கூடிய சிலிண்டர் இணைப்புத் தர முடியாது. மானியம் இல்லாத, சந்தை விலையில் வழங்கப்படும் சிலிண்டர் இணைப்பு மட்டுமே வழங்கப்படும் என்று கேஸ் விநியோகஸ்தர்கள் தெரிவித்துவிட்டனர். இதன்படி டெபாசிட் தொகை ரூ.1,450 மற்றும் மானியம் இல்லாத சிலிண்டருக்கு சுமார் ரூ.900-க்கும் அதிகமான தொகையைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி வாங்கப்படும் இணைப்பு மீண்டும் மானிய விலை சிலிண்டர் இணைப்பாக மாற்றப்படுமா எனத் தெரியவில்லை என்றார்.

இது தொடர்பாக கேஸ் விநியோகஸ்தர்கள் கூறுகையில், மானியம் இல்லாத சிலிண்டர் விலையில்தான் புதிய இணைப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த இணைப்பு மீண்டும் எப்போது மானியத்துடன் கூடிய சிலிண்டராக மாற்றப்படும் என்பது தெரியவில்லை. மத்திய அரசின் மறு அறிவிப்பு வரும் வரை மானியம் இல்லாத சிலிண்டர்தான் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com