

கோவை: தொழிற்சாலை நகரான கோவை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ள மின்வெட்டால் இங்குள்ள பல்வேறு முக்கியத் தொழிற்சாலைகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரிய தொழிற்சாலைகளை நம்பியுள்ள சிறுதொழில் கூடங்களைச் சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் பெரிய நூற்பாலைகள் அதிக அளவில் உள்ளன. ஜவுளித் துறைக்குத் தேவையான இயந்திரங்களும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இது தவிர ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்குத் தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் உள்ளன.
இத்தொழிற்சாலைகளில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இது தவிர கோவையில் மட்டும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பம்ப், கிரைண்டர் தொழிற்சாலைகளிலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் மின்வெட்டால் கோவை பகுதியில் உற்பத்தியாகும் பொருள்களின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டது.
தொழிற்சாலைகளுக்குக் கோடிக்கணக்கில் இழப்பும் ஏற்பட்டது. இப்போது நாளொன்றுக்கு சுமார் 16 மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை. இதனால் கோவையில் உள்ள பல்வேறு நூற்பாலைகள், முக்கிய வார்ப்படத் தொழிற்சாலைகளை வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்கு இங்குள்ள உரிமையாளர்கள் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு மற்றொரு முக்கியக் காரணம், இத்தொழிற்சாலைகளுக்கான மூலப் பொருள்கள் பெரும்பாலும் வட மாநிலங்களில் இருந்துதான் வரவேண்டியுள்ளது. மத்திய அரசு அண்மையில் டீசல் விலையை உயர்த்தியதால் லாரி வாடகையும் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
மின்வெட்டு அதிகரித்துள்ளதால் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது இருக்காது எனத் தெரியவில்லை. இதனால் உற்பத்தி பாதித்து தொழிலாளர்களுக்கு ஊதியம் தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் இங்குள்ள முக்கியத் தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டால் அதை நம்பியுள்ள சிறு, குறு தொழிற்சாலைகளும் இதில் வேலை பார்க்கும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இது தொடர்பாக தமிழ்நாடு ஊரகத் தொழில் முனைவோர் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத் தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறியது:
கோவையில் பெரிய நிறுவனங்களுக்கு உதவியாகச் செயல்படும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். இப்போது அதிகரித்துள்ள மின்வெட்டால் இத்தொழிலாளர்களுக்கு ஊதியம் தர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே பல தொழிலாளர்கள் வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் பல பெரிய தொழிற்சாலைகளை வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலை தொடர்ந்தால் சிறு, குறு தொழிற்சாலை உரிமையாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைக்கும் நிலை ஏற்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.