
பண்ருட்டி, மார்ச் 15: அலைபாயும் மனதை இறைவன்பால் செலுத்தி சிந்தனையை ஒருநிலைப்படுத்துபவர்கள் சித்தர்கள் என்று பெயர் பெற்றனர். அவர்கள் வாழ்ந்து மறைந்த இடங்களே இன்று சித்தர் பீடங்களாக உலகில் போற்றப்படுகின்றன. இவற்றில் ஒருசில சித்தர் பீடங்கள் புகழ்பெற்றும், பல சித்தர் பீடங்கள் சுவடுகளே தெரியாமல் புகழ் மறைந்து போய்விட்டன. இவற்றில் சித்தவட மடத்தை தன் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார் கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன்.
இந்த சித்தவட மட சித்தர் பீடத்தை பற்றி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறியதாவது: தன்னலமின்றி பொதுநலத்துக்காகச் சிந்திப்பவர்கள் உலகில் உன்னதமான பிறவிகளாகப் போற்றப்படுகின்றனர்.
வள்ளல் ராமலிங்க சுவாமிகள் குறிப்பிடுவதைப் போன்று இவர்கள் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர்கள். ஆன்மிக வாழ்வியழலை ஏற்றுக்கொண்டு சித்தம் என்கிற மனத்தை அடக்கி ஆள்பவர்கள் சித்தர்கள் என்ற பேற்றினைப் பெற்றார்கள்.
சித்தர்கள் பெரிதும் தனிமையை விரும்புபவர்கள். இவர்கள் ஒன்றுகூடி வாழ்ந்ததாக வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் கூடி இருந்து மக்களுக்கு நன்மைகள் புரிந்தனர். எனவே பிற்கால வரலாற்றில் இந்த இடம் சித்தவட மடம் என பெயர் பெற்றது.
வழக்கு சொல்லில் கோட்லாம்பாக்கம் என்று கூறப்படும் இந்தப்பகுதிக்குள் மிகப்பெரிய அளவில் இருந்த சித்தவட மடம் மறைந்து இப்போது சிவன் கோயிலாகக் காட்சி அளிக்கிறது. இவ்வூர் திருவதிகை கல்வெட்டில் கொட்டிளம்பாக்கம் என்று கூறப்பட்டுள்ளது. இறைவன் சிதம்பரேசுவரர், அம்மை சிவகாமிசுந்தரி எனும் பெயரால் வணங்கப் பெறுகின்றனர்.
தமிழகத்துக் கோயில்கள் அனைத்தும் கிழக்கு திசை நோக்கியே இருக்கும். மேற்கு நோக்கிய கோயில்களை குறைந்த அளவிலேயே காணமுடியும். இவற்றில் கோயிலும் சந்நிதியும் மேற்கு நோக்கி அமைந்துள்ள கோயில் இதுவாகும். காரணம் இது சித்தர்களின் ஜீவசமாதிகளாகும்.
கி.பி.8-ம் நூற்றாண்டில் இந்த இடம் சித்தர்கள் மடமாக இருந்த காலத்தில் திருவதிகை வீரட்டானேசுவரரைத் தரிசிக்க வந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திடீரென ஒரு சிந்தனை உதித்தது. திருவதிகையில் திருநாவுக்கரசர் தனது திருக்கரங்களால் உழவாரத் திருப்பணி செய்த வீரட்டானத் திருத்தலத்தை தனது கால்களால் மிதிக்கக்கூடாது என்கிற பக்தியின் மேலீட்டால் வீரட்டானத்தைத் தூர இருந்தே தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோது சுந்தரர் சிவபெருமானை தரிசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடமே சித்தவட மடமாகும்.
சுந்தரர் இம்மடத்தில் தங்கியிருந்த சித்தர்களோடு ஒரு பக்தராக வந்து இரவில் தங்கியிருந்தபோது சிவபெருமான், தனது திருத்தொண்டரான திருநாவுக்கரசருக்கு மதிப்பளித்த சுந்தரருக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டார். முதுமை நிறைந்த கிழவராக சிவபெருமான் வடிவெடுத்து, அங்கு உறங்கிக்கொண்டிருந்த சுந்தரர் தலைமீது தமது கால்கள் படுமாறு படுத்துக்கொண்டார். சுந்தரர் அந்த கிழவர் உறங்கும் இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்று படுத்தபோது, அங்கும் சென்று தலைமீது கால்படும்படி செய்தார்.
சுந்தரர் எழுந்து அய்யா பெரியவரே ஏன் இப்படி மீண்டும் மீண்டும் செய்கிறீர் என்று கேட்க, நீ வேண்டும் வேண்டும் என்பதால்தான் என்றார் கிழவர். தாங்கள் யார் எந்த ஊர் என்ற சுந்தரரிடம், நான் ஒரு சித்தன் - நீ எனது பித்தன் எனக் கூறி சிவபெருமான் மறைந்ததாக வரலாறு. அங்கு சிவபெருமானைப் போற்றி தம்மானை அறியாத சாதியா ருளரே எனத் தொடங்கும் பதிகம் பாடினார். இப்பதிகம் தேவாரத் திருமுறை வரிசையில் 7-ம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது. இப்பதிகம் திருவதிகை வீரட்டானத்தைப் பற்றியதாக இருந்தாலும் பாடல் பிறந்த இடம் சித்தவட மடமாகும்.
இம்மடத்தில் சுந்தரர் தங்கியிருந்தபோது அவரை உபசரித்து வழியனுப்பி வைத்த சிதம்பரச் சடையனார் என்ற சித்தர் சுந்தரரின் அன்பை பெற்றவர். அவர் (சிதம்பரச் சடையனார்) சித்தியான இடத்தில் இன்று கோயில் கருவறையில் சிவலிங்கமாக (சிதம்பரேசுவரர்) காட்சியளிக்கிறது.
வட திசையில் சிதம்பரச் சடையனாரின் சீடரான சித்தாண்டி சுவாமிகள் சித்தியடைந்த இடம் கிழக்கு நோக்கி (தனி சந்நிதியாக) கோயில் கொண்டுள்ளது. கிழக்கு திசையில் சித்தி பெற்று கோயில் கொண்டுள்ள மற்றொரு சித்தரின் பெயர் அறியக் கிடைக்கவில்லை.
தென் திசையில் தட்சிணாமூர்த்தி சந்நிதியின் அடியில் உள்ள கல்வெட்டு ஒன்றைப் படித்தபோது ஓர் உண்மை கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டில் திருவதிகை ராச்சியம் நாட்டுக் கணக்கு சந்தியப்பன் சர்வ சித்தி என்று பொறிக்கப்பட்டிருப்பதால் கி.பி.15-ம் நூற்றாண்டில் திருவதிகை என்ற ஊர் ராச்சியம் என்ற மதிப்பை பெற்றிருந்ததும், இந்த ராச்சியத்தின் கணக்காளராக இருந்த சந்தியப்பன் என்ற பெயர் கொண்ட சிவயோகியார் இந்த இடத்தில் சித்தி அடைந்தார் என்பதும் கண்டறியப்பட்டது.
இதுபோன்று பற்பல காலங்களில் இம்மடத்தில் வாழ்ந்து மறைந்த சித்தர்களின் வரலாற்றுப் புகழை அறிந்த சோழ மன்னர்கள் செங்கல் மற்றும் சுண்ணாம்புச் சுதையால் கி.பி. 9-ம் நூற்றாண்டில் இங்கு கோயில் எழுப்பினர். அதன் பிறகு கி.பி.13-ம் நூற்றாண்டில் அரசுபுரிந்த சேந்தமங்கல அரசன் கோப்பெருஞ்சிங்கக் காடவராயன் தனது 24-ம் ஆட்சி ஆண்டில் (1267) கருவறைப் பகுதியை கருங்கற்களால் மாற்றி அமைத்ததாக இக்கோயில் கல்வெட்டு கூறுகிறது.
கோயில் வாயிலின் மேற்புறத்தில் கி.பி.16-ம் நூற்றாண்டின் எழுத்தமைதியில் காணப்படும் கல்வெட்டில் சிவகாமி அம்மையின் சந்நிதிக்கு தினந்தோறும் பூமாலை அளிப்பதற்கான தானக் கல்வெட்டு காணப்படுகிறது. இக்கோயில் கருவறையைச் சுற்றிலும் உள்ள விநாயகர், பிரம்மா, தட்சிணாமூர்த்தி, பைரவர், சூரியன் ஆகியோரது சிற்பங்கள் சோழர் காலம் மற்றும் கி.பி.13-ம் நூற்றாண்டின் கலைத்திறனை எடுத்துக் காட்டுகின்றன.
சுந்தரருக்கு சிவபெருமான் தம் திருவடியைச் சூட்டியதும் (திருவடி தீட்சை), ஞானசித்தர்களும், மோன முனிவர்களும் இறவாப் புகழுடன் வாழும் சித்தவட மடத்தில் கோயில் கொண்டுள்ள சிவகாமி உடனுறை சிதம்பரேசுவரர் கோயில் பற்பல காலக்கட்டங்களில் திருப்பணிகளைப் பெற்றிருந்தாலும் மீண்டும் ஒரு திருப்பணியையும், குடமுழுக்கையும் எதிர்நோக்கியுள்ளது. இத்தலம் பண்ருட்டிக்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் புதுப்பேட்டைக்கு அருகில் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.