ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

கூடங்குளம் அணுஉலையில் சோதனை ஓட்டம் வெற்றி

கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்திக்கு முந்தைய சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2013, 8:06 pm

கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்திக்கு முந்தைய சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இச் சோதனையின்போது சுற்றுச்சூழலுக்கோ, பொதுமக்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வாயுக்கள் ஏதும் வெளியேறவில்லை என்று அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் திங்கள்கிழமை தெரிவித்தார். இதையடுத்து மின்உற்பத்தி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய- ரஷிய கூட்டு முயற்சியில் ரூ.13,500 கோடி மதிப்பீட்டில் கூடங்குளத்தில் 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்டவை.

முதலாவது அணுஉலையில் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் போராட்டம் வலுப்பெற்றதால் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால், அணுமின் நிலையத்தில் பணிகளைத் தொடங்க ஆதரவு தெரிவித்து கடந்த ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் மீண்டும் முழுவீச்சில் தொடங்கின. மாதிரி எரிபொருள்கள் அகற்றம், செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் நிரப்புதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்து, அழுத்தம், வெப்பச் சோதனைகள் போன்ற பணிகள் கடந்த பிப்ரவரி வரை தடையின்றி மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் முதலாவது அணுஉலையில் ஏப்ரலில் மின் உற்பத்தி தொடங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அணுஉலையில் மின் உற்பத்திக்கு முந்தைய சோதனை ஓட்டம் கடந்த 3 நாள்களாக மேற்கொள்ளப்பட்டது.

சோதனை ஓட்டம் வெற்றி: இது தொடர்பாக அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் திங்கள்கிழமை கூறியதாவது:

அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கு ஏதுவாக முதலாவது அணுஉலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அணுஉலை செயல்பாட்டுக்கு வரும்போது எந்த அழுத்தத்தில், வெப்பநிலையில் அணுஉலைக் கலன் இருக்க வேண்டுமோ, அதே அழுத்தம் மற்றும் வெப்பநிலைக்கு அணுஉலை அழுத்தக் கலனை கொண்டுவந்து பின்னர் அதிலுள்ள வால்வுகள் மூலம் நீராவி வெளியேற்றப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக திங்கள்கிழமை முடிக்கப்பட்டிருக்கிறது. பகல் வேளைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட இச்சோதனைகளின்போது நீராவி மட்டுமே வெளியேற்றப்பட்டது.

சுற்றுச்சூழலுக்கோ, பொதுமக்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் எவ்வித சோதனைகளும் அணுஉலையில் மேற்கொள்ளப்படவில்லை.

அணுஉலையில் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முந்தைய கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அணுஉலையில் நடைபெறும் அனைத்துப் பணிகளும் பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில்கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு: இச் சோதனைகள் நடைபெற்ற அதேவேளையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்கள் அணுமின் நிலைய நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டது. கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 325 பள்ளி மாணவர்கள், 90 கிராம மக்கள் கூடங்குளம் அணுஉலையைப் பார்வையிட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணுமின் நிலைய பணியாளர்கள் தங்கள் அலுவலகப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 3 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அணுமின் நிலைய வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்றார் சுந்தர்.

மின் உற்பத்தி எப்போது? மின் உற்பத்திக்கு முந்தைய கட்டாய சோதனை மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் 2 நாள்களுக்கு அழுத்தக் கலன் வால்வுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பிற உபகரணங்களையும் இயக்கி சோதனை நடத்தப்படவுள்ளது. இச் சோதனைகளுக்குப் பின்னர் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் மின் உற்பத்திக்கான இறுதிக்கட்ட ஒப்புதலை ஆணையம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.