/

இலங்கைச் சிறையில் தமிழக மீனவர்கள்: விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்

இலங்கைச் சிறையில் வெவ்வேறு காலகட்டங்களில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2013, 8:18 pm

இலங்கைச் சிறையில் வெவ்வேறு காலகட்டங்களில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை எழுதிய கடிதத்தின் விவரம்:

அன்றாட வாழ்வுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 34 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தங்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறேன். கச்சத் தீவு பகுதியைச் சுற்றியுள்ள கடல்நீரில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகிறார்கள்.

இந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது மறித்து அவர்களை அடித்து உதைத்து சிறைப்படுத்தி வருகிறார்கள். இதனை தங்கள் கவனத்துக்கு கடந்த ஜூன் 17-ஆம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

மீனவர்களுக்குப் பாதிப்பு: ராமேசுவரத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் இரண்டு இயந்திரப் படகுகளுடன் கடந்த ஜூன் 15-ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு அந்த நாட்டிலுள்ள மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அந்தக் கடிதத்தின் மூலம் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறேன்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்ற காவலில் அனுராதபுரம் சிறையில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி வரை சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய சிறைக் காவல் கடந்த மாதம் 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வவுனியா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இப்போது அவர்களுடைய சிறைக் காவல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த மாதம் 6-ஆம் தேதி ராமேசுவரத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 இயந்திரப் படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கடந்த மாதம் 19-ஆம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்தும் தங்களுக்கு கடந்த மாதம் 8-ஆம் தேதி கடிதம் எழுதியிருக்கிறேன். கடந்த 19-ஆம் தேதி வரை சிறையில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு மேலும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக அறிகிறோம்.

தங்களுக்கு கடந்த ஜூலை மற்றும் ஜூன் மாதங்களில் அனுப்பிய கடித விவரங்களை அறிந்திருப்பீர்கள்.

ராமேசுவரத்தைச் சேர்ந்த 5 அப்பாவி மீனவர்கள் இலங்கை சிறையில் 20 மாதங்களுக்கு மேலாக வாடி வருகிறார்கள் என்பதையும் தங்களின் கவனத்துக்கு கடிதத்தின் மூலம் தெரிவித்திருக்கிறேன். பிடிபட்ட தமிழக மீனவர்கள் மீது பொய் வழக்கு தொடரப்பட்டு அதன் அடிப்படையில் அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் அவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து தொடர்ந்து தங்களின் கவனத்துக்கு கடிதங்கள் மூலம் தெரிவித்தபோதும், மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீனவர்கள் போராட்டம்: நீண்ட நாள்களாக சிறையில் வைக்கப்பட்டிருப்பதால் மீனவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது, அவர்களது குடும்பத்தினரை சொல்ல முடியாத வேதனைக்கு ஆளாக்கியிருக்கிறது. தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்குப் பிறகும் மத்திய அரசு இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளன தமிழக மீனவர்களை மீட்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுடைய மீனவர்களை உடனடியாக விடுவிக்க இலங்கைத் தூதரகம் மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரத்துக்கு உத்தரவிடுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் பிரச்னையில் தாங்கள் நேரடியாக தலையிட வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.