/

தாது மணல் கொள்ளை குறித்து முழுமையான விசாரணை: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

கடற்கரை தாது மணல் கொள்ளை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என, பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2013, 9:29 pm

கடற்கரை தாது மணல் கொள்ளை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என, பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர், திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு 2007-ம் ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. ஏழை இந்து மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 3 ஆண்டுகளாக பாஜக போராடி வருகிறது. "ஜூலை போராட்டம்' என்ற பெயரில் இப் போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

இதன் நிறைவாக அடுத்த மாதம் பாஜக இளைஞரணி சார்பில் கோவையில் "இளந்தாமரைப் போராட்டம்' நடைபெறவுள்ளது. கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்.

கல்வித் உதவித்தொகையில் 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன. எனவே, கல்வி உதவித்தொகையை ஏழை இந்து மாணவர்களுக்கும் நீட்டிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஆடிட்டர் ரமேஷ் கொலை, பெங்களூர் குண்டுவெடிப்பு போன்ற பல்வேறு சம்பவங்களுக்கு பின்னணியில் மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் தீவிரமாக செயல்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தை ஒரு கொலை அல்லது சில கொலைகள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. ஒட்டுமொத்த நாட்டுக்கும் விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகக் கருத வேண்டும். இதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்திருப்பது உணவுப் பாதுகாப்பு சட்டம் அல்ல. காங்கிரஸ் பாதுகாப்பு சட்டம். உணவுப் பாதுகாப்பு சட்டம் குறித்து முழுமையான விவாதத்துக்குப் பிறகுதான் முடிவெடுக்க முடியும். எனவே, மத்திய அரசின் அவசர சட்டத்தை ஏற்க முடியாது.

உணவுப் பாதுகாப்பு சட்டமாக இருந்தாலும் சரி, இலங்கைப் பிரச்னையாக இருந்தாலும் சரி, எந்த விஷயத்திலும் திமுக தலைவர் கருணாநிதி தெளிவாகப் பேச வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கடற்கரை தாது மணல் கொள்ளை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். நாட்டின் சொத்து பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் சொத்துகளைப் பாதுகாக்கத் தவறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மட்டுமன்றி கடற்கரை தாது மணல் கொள்ளை எங்கே நடந்தாலும் அதைத் தடுக்க வேண்டும். தவறுகளைத் தட்டிக்கேட்கும் கடமை அரசுக்கு உள்ளது.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதுவதால் எந்த பயனும் இருக்காது. ஏனென்றால் பிரதமர் சொல்லுவதை இலங்கை அரசு கேட்காது. இலங்கைக்கு சரியான பாடம் கற்பிக்கும் அளவுக்கு கடுமையான நடவடிக்கை தேவை.

நடிகர் விஜய் நடித்த "தலைவா' படத்தைத் திரையிடத் தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை என்றார் அவர்.

மாநில செயலர் பழனிவேல்சாமி, கோட்டச் செயலர் அன்புராஜ், மாவட்டத் தலைவர் கட்டளை ஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.