கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட இரு நாடுகளையும் சேர்ந்த 5,221 பக்தர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர்.
Updated on
2 min read

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட இரு நாடுகளையும் சேர்ந்த 5,221 பக்தர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர்.

இந்தியா, இலங்கைக்கு இடையே நடுக்கடலில் கச்சத்தீவு உள்ளது. இங்கு புனித அந்தோணியார் கோவில் அமைந்துள்ளது. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொண்டு புனித அந்தோணியாரை வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான புனித அந்தோணியார் கோவில் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

இதில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 2,840 பேர் சனிக்கிழமை 102 படகுகளில் கச்சத்தீவுக்கு சென்றனர். இவர்களை ராமநாதபுரம் ஆட்சியர் க.நந்தகுமார், டி.ஐ.ஜி. எம்.ராமசுப்பிரமணி, மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன், சுங்கத் துறை துணை ஆணையர் அரசு ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

சனிக்கிழமை மாலை கச்சத்தீவு புனித அந்தோணியார் திருஉருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. இக்கொடியை இலங்கை நெடுந்தீவு பங்குத் தந்தை அமல்ராஜ், சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு அமல்ராஜ் ஆகியோர் ஏற்றினர். பின்னர் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தாமஸ்சௌந்தரநாயகம் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இத்திருப்பலி நிகழ்ச்சியில் இலங்கை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி அமலவலவன், யாழ்ப்பாணம் மாநாகராட்சி மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே.காந்தா உள்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்புத் திருப்பலி முடிந்த பின்னர் கோவில் முன்பாக புதிதாகக் கட்டப்பட்டிருந்த புனித அந்தோணியார் உருவச் சிலை நிறுவப்பட்ட தூணை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் தாமஸ்சௌந்தரநாயகம் திறந்து வைத்தார்.

பின்னர் கோவிலில் கொடியிறக்கம் நடைபெற்றது. விழா முடிவடைந்த பின்னர் இந்திய-இலங்கை பக்தர்கள் அவரவர் நாடுகளுக்குத் திரும்பினர்.

அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர மறுக்கிறது

இலங்கை: தமிழர்கள் கவலை

அடிப்படை வசதிகளைக் கூட இலங்கை அரசு செய்து தராமல் புறக்கணிப்பதாக கச்சத்தீவு திருவிழாவுக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஞாயிற்றுக்கிழமை கவலையுடன் தெரிவித்தனர்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்த இலங்கை தமிழர்கள் சிலர் தங்களின் நிலை குறித்து தெரிவித்ததாவது: இலங்கையில் வன்னி பகுதியில் வசித்து வந்த நாங்கள் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த போரின் போது குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். வவுனியாவில் உள்ள செட்டிகுளம் பகுதியில் முள்வேலி முகாம்களில் இலங்கை அரசால் அடைக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோம்.

பின்னர், மீள்குடியேற்றம் மூலமாக யாழ்ப்பாணம் பகுதியில் தேவன்பட்டி என்ற இடத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்க்கப்பட்டு வசித்து வருகிறோம்.

தற்போது தேவன்பட்டியில் ஒரு தகரக் கொட்டகையில் தான் வசித்து வருகிறோம். இந்திய அரசு நிதிஉதவியுடன் வழங்கிய வீடுகளைக் கூட எங்களுக்கு தரவில்லை. கழிப்பறை, மின்சார வசதிகள் இல்லை. பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் வசிக்கிறோம் என்று அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com