மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தி மேலும் தாமதமாகும்?

சேலம் மாவட்டம், மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜனவரி 7) மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Updated on
1 min read

சேலம் மாவட்டம், மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜனவரி 7) மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், முக்கியப் பணிகள் நிறைவடையாததால், உற்பத்தியைத் தொடங்க முடியாத நிலை உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேட்டூரில் ஏற்கெனவே இயங்கி வரும் 840 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலைய வளாகத்தில், ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய 2007-ல் திட்டம் கொண்டுவரப்பட்டது.

புதிய அனல் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஒப்பந்ததாரர்கள் தாமதமாக செய்து வருவதால், திட்டமிட்டபடி 2012-ல் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இந்த நிலையில், தற்போது 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து, அண்மையில் அந்த அனல் மின் நிலையங்களில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக, பழைய அனல் மின் நிலையத்துக்கான கன்வேயர் பெல்ட், வேகன் டிப்ளர் எனப்படும் நிலக்கரியை கையாளும் இயந்திரம் போன்றவற்றையே அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய கன்வேயர் பெல்ட் வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை (ஜனவரி 7) மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், சோதனை ஓட்டத்தின்போது, பாய்லரில் உள்ள 40 பர்னர்களில் 25-க்கும் மேற்பட்டவை பழுதடைந்ததாகவும், வெப்பக் கடத்திகளாக செயல்படும் செராமிக் கற்களும் சேதமடைந்ததாகவும், இவற்றை சரி செய்யும் பணி இன்னும் முடிவடையவில்லை என்றும் அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

நிலக்கரி வேகனை தூக்கி கையாளும் 2 டிப்ளர் இயந்திரங்களுக்கான கட்டுமானப் பணிகளும் இன்னும் முடிவடையவில்லை. இந்தப் பணிகள் நிறைவடையவே இன்னும் 6 மாதங்களாகும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், சென்னையில் இருந்து நிலக்கரியை அரைத்து கொண்டு வந்து மாற்று வழியில் அனல் மின் நிலையத்தை இயங்க வைக்கவும் வாய்ப்பு உள்ளது.

நிலக்கரி பிரச்னை: அனல் மின் நிலையத்தை 72 மணி நேரம் தொடர்ந்து இயக்கிக் காட்டினால் மட்டுமே தொடர்ந்து நிலக்கரி வழங்குவதை கோல் இந்தியா நிறுவனம் பரிசீலனை செய்யும். புதிய அனல் மின் நிலையத்தை இயக்க தினசரி 24 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும். அத்துடன் கையிருப்பில் சுமார் ஒரு லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.

ஆனால், தற்போது பழைய அனல் மின் நிலையத்தை 4 நாள்கள் இயக்குவதற்கான அளவே நிலக்கரி இருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. நிலக்கரியை பாய்லருக்கு குறுகிய பாதையில் தாற்காலிகமாக எடுத்துச் சென்றால் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு இங்கு மின் உற்பத்தியைத் தொடங்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com